மைலேஜை குறைக்கும் எத்தனால் கலப்புப் பெட்ரோல்?

சமீப காலமாக இ20 எனும் எத்தனால் கலப்புப் பெட்ரோலினால் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக கார்களில் மைலேஜை குறைப்பதாக வாடிக்கையாளர்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இ20 பெட்ரோல் பல்வேறு செலவுகளையும் ஏற்படுத்துதாகக் குறிப்பிடுகின்றனர். 

இதுக்கிடையே மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஆகஸ்ட் (2025) மாத இறுதிக்குள் பெட்ரோலில் 27 சதவீதம் எத்தனால் கலப்பிற்கான அதாவது இ27 பெட்ரோலுக்கான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிடும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் இ20 பெட்ரோல் விற்பனையை எதிர்த்து வழக்கறிஞர் அக்‌ஷய் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் மில்லியன் கணக்கான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் வடிவமைக்கப்படாத ஒரு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த மனுவில், “எத்தனால் கலப்பு பெட்ரோலால் இயந்திரங்கள் அரிப்புக்கு ஆளாகின்றன. எரிபொருளின் செயல்திறன் குறைந்து வருகிறது. இதனால் பழுதுபார்க்கும் செலவுகள் அதிகரித்து வருகின்றன.

அதேநேரத்தில் எத்தனால் எரிபொருளால் ஏற்படும் சேதத்திற்கான கோரிக்கைகளை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோல் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் கிடைப்பதை உறுதிசெய்ய பெட்ரோலிய அமைச்சகத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

எத்தனால் கலப்பு பெட்ரோல் என்றால் என்ன?

எத்தில் ஆல்கஹால் அல்லது எத்தனால் என்பது ஒரு உயிரி எரிபொருள். ஆங்கிலத்தில் இதனை பயோஃப்யூல் என்பார்கள்.

எரித்தன்மை கொண்ட இந்த எத்தனால் இயற்கையாகவே கரும்பு, சோளம் மற்றும் சில உணவு தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதனை பெட்ரோலுடன் கலப்பதே எத்தனால் கலப்பு பெட்ரோல்.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருவதுடன் சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.

தவிர, கச்சா எண்ணெய்யின் ஆதாரங்கள் குறைந்து வருவதாலும், சர்வதேச சந்தையின் ஏற்ற, இறக்க நிலவரங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் உயர்வுக்குக் காரணமாக உள்ளன.

இந்நிலையில்தான் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் செலவினத்தைக் குறைக்க முடியும் என நினைத்தது மத்திய அரசு.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாய்க்கும் மேலிருக்கிறது. இதுவே எத்தனால் பெட்ரோல் என்றால் விலை குறையும் எனச் சொல்லப்பட்டது.

இதுதவிர, வாகனங்களால் ஏற்படும் அதிகப்படியான கார்பன் உமிழ்வை குறைக்கும் பொருட்டும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை இந்தியா கையிலெடுத்தது.

கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் அரசு எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அப்போது 5 சதவீத எத்தனால் கலப்பு எனக் கொண்டு வரப்பட்டது. இந்தக் கலப்பு சதவீதத்தைப் பொறுத்து எத்தனால் 5 (இ5) பெட்ரோல் என அழைக்கப்பட்டது.

பின்னர் 2019ம் ஆண்டு 10 சதவீத எத்தனால் கலப்பு என்றாகி 2022ம் ஆண்டு அந்த இலக்கை அடைந்தது.

பின்னர் 2023ம் ஆண்டு 20 சதவீத எத்தனால் பெட்ரோல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2030ம் ஆண்டு இந்த இலக்கை எட்டும்படி முடிவெடுத்தது.

ஆனால், இந்த 2025ம் ஆண்டே அதனை எட்டிவிட்டது. இதனால், 27 சதவீத எத்தனால் கலப்பை நோக்கி பயணிக்க ெதாடங்கியுள்ளது.

இதற்குக் காரணம் எத்தனால் குறைந்தளவு மாசு கொண்ட ஒரு எரிபொருள் என்பதுதான். 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும்போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடின் அளவு இருசக்கர வாகனங்களில் 50% குறைவாகவும், நான்கு சக்கர வாகனங்களில் 30% குறைவாகவும் உள்ளது.

மேலும் குறைந்த செலவில் பெட்ரோலுக்கு சமமான செயல்திறனையும் வழங்குகிறது. ஒருபுறம் கார்பன் வெளியீட்டை குறைக்கிறது, மறுபுறம் பெட்ரோலுக்கு சமமான செயல்திறன்.

இதனால் எத்தனாலை நோக்கி நகர்கிறது மத்திய அரசு. ஆனால், இந்த எத்தனால் கலப்பை அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப வாகனங்களின் திறன் இல்லை என்பதுதான் பிரச்னை.

இ20 எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது?

எத்தனால் என்பது பயோ ஃபியூல். இதற்கு அதிகமாக நீர் உறிஞ்சும் தன்மை இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், இது ஈரப்பதத்தை உறிஞ்சி அரிப்புக்கு வழிவகுக்கிறது.

அதாவது பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை அப்படியே கரைத்துவிடும் அல்லது பலவீனப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். பழைய பெட்ரோல் டேங்க் எல்லாமே மெட்டல்கள். இதனை இ20 பெட்ரோல் சீக்கிரமாக துருப்பிடிக்கச் செய்கின்றன.

அதேபோல் பெட்ரோல் போகும்வழி பெரும்பாலும் கார்களில் மெட்டல் பைப்பாக இருக்கிறது.

மெத்தனாலுக்கு இயற்கையிலேயே அரிக்கும் தன்மை இருப்பதால் இந்த மெட்டல் பைப்பையும் துருப்பிடிக்க செய்து அடைத்துவிடுகிறது. ரப்பர் பைப் என்றால் அதனை அப்படியே அரித்துவிடுகிறது.

எஞ்சினில் கேஸ்கட் ரப்பர்தான். அதனையும் சீக்கிரமே அரித்துவிடுவதால் கேஸ்கட் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கடந்த பத்தாண்டுகளுக்குள் கார், டூவீலர் வாங்கியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மைலேஜையும் குறைக்கிறது.

கடந்த 2023க்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்கள், டூவீலர்கள் மற்றும் சில புதிய BS-VI மாடல்கள் கூட, இ20 போன்ற உயர் எத்தனால் கலவைகளுடன் இணக்கமாக இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வண்டிகள் இ10 வண்டிகளாக இருந்தன. இவை இ10 பெட்ரோலை ஏற்றுக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டன. இந்த இ10 பெட்ரோலை பழைய மாடல் வண்டிகளும் கொஞ்சம் ஏற்றுக்கொண்டன.

இந்நிலையில் இதே வண்டிகளில் இ20 பெட்ரோல் போடும்போது அதனை அவை ஏற்றுக் கொள்வில்லை. காரணம் அவை இ20 பெட்ரோலுக்காக வடிவமைக்கப்படவில்லை.

சமீபமாக பலரும் இ20 பெட்ரோல் கார்களையும், டூவீலர்களையும் வாங்கி வருகின்றனர்.

ஆனால், இப்போது இ27 பெட்ரோலுக்கு மாறப்போகிறோம் என அரசு அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இந்நிலையில்தான் இந்தப் பிரச்னையை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

அல்லது மத்திய அரசு அடிக்கடி எரிபொருளை மாற்றாமலாவது இருக்க வேண்டும் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.   

– கவின்

You might also like