வளர்ப்புப் பிராணிகளைப் பொறுத்தவரை ஆடு, மாடுகளுக்கு அடுத்தபடியான இடத்தை நம் சமூகத்தில் பிடிப்பவை நாய்கள் தான். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு பற்றி துளியும் அறியாதவர்களும் கூட நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும்போது அவற்றின் செயல்பாடுகள் மனிதர்களுக்கு உகந்ததாக இருப்பதும் ஒரு காரணம்.
குறிப்பாக, குழந்தைகளோடு எளிதாக உறவாடுவதில் நாய்களே முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன.
சில மனிதர்களைப் பொறுத்தவரை, நாய் வளர்ப்பு என்பது ஒரு ஆடம்பர பொழுதுபோக்காக, சமூக அந்தஸ்தை நிர்ணயிப்பதாக, மன அழுத்தங்களில் இருந்து பெருமளவில் விடுவிக்கிற காரணியாக உள்ளது.
‘என்னடா இது நாய் பொழப்பா இருக்கு’ என்று சலித்துக் கொள்கிற மனிதர்கள் கூட, அவற்றின் வீர பராக்கிரமங்களை, அன்பு மழையை, நன்றி காட்டுவது குறித்த கதைகளைப் பேசாமல் இருக்க மாட்டார்கள்.
உலகின் எந்த மூலையிலும் எந்த மொழியிலும் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்க முடியும். கவிதை, ஓவியம் எனப் பல படைப்பாக்கத்தில் அவற்றின் தாக்கத்தைக் காண முடியும்.
கடந்த நூற்றாண்டில் பொங்கிப் பிரவாகமெடுத்திருக்கும் ‘சினிமா’ கலையிலும் கூட அவை முக்கியப் பங்களிப்பைத் தந்திருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் நாய்களை மையப்படுத்திக் கணிசமான திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகின்றன.
அவற்றில் சில அனிமேஷன் படங்களாக உள்ளன. ‘விஎஃப் எக்ஸ்’ உதவி கொண்டு சில கதைகளில் நாய்கள் சாகசங்கள் புரிகின்றன.
அந்த வகையில் தமிழில் படங்கள் வந்திருக்கின்றனவா? நாய்களின் உலகம் பற்றி அல்லது மனித உலகத்தில் நாய்களுக்கான இடம் பற்றி அவை பேசியிருக்கின்றனவா?
நாய்கள் ஜாக்கிரதை:
சத்யராஜ் தனது மகன் சிபிராஜுக்காக தயாரித்த படங்களில் இதுவும் ஒன்று. இதனை சக்தி சௌந்தரராஜன் இயக்கியிருந்தார்.

ராணுவத்தில் ‘டாக் ஸ்குவாட்’டில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு நாயைத் தற்செயலாக ஒரு போலீஸ் அதிகாரி வளர்க்க நேர்வதும் அதனால் ஏற்படுகிற கலாட்டாக்களும் இப்படத்தின் முதல் பாதியாக இருக்கும்.
பின்பாதியில், அந்த அதிகாரியின் காதலியை ஒரு கும்பல் கடத்திச் செல்ல, அந்த இடத்தை நாயகன் அறிய அந்த நாய் துணை நிற்பதாக இரண்டாம் பாதி அமைக்கப்பட்டிருக்கும்.
மேற்கத்திய பாணியிலமைந்த இக்கதையில் நாய்க்கான முக்கியத்துவம் அதிகம் என்பதே இப்படத்தின் மீது பெருங்கவனம் குவிய அப்போது காரணமாக இருந்தது.
பப்பி:
2019ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை நட்டு தேவ் என்கிற முரட்டு சிங்கிள் இயக்கியிருந்தார். ஐசரி கணேஷ் இதனைத் தயாரித்திருந்தார்.
அவரது உறவிரனான வருண் நாயகனாக நடித்த இப்படத்தில் ‘கோமாளி’ சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, மாரிமுத்து, நித்யா ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தனது காதலி கர்ப்பமானதை எப்படி எதிர்கொள்வது எனத் தவிக்கிறார் நாயகன்; அதேநேரத்தில் தான் வளர்க்கும் நாய் கர்ப்பமாக இருப்பதைக் காண்கிறபோது, அவருக்குள் இருக்கிற பையன் மனோபாவம் மறைந்து வளர்ந்த ஆணாக மாறுவதே இப்படத்தின் அடிநாதம். அதனால், இது குழந்தைகளுக்கான படமல்ல.
ஓ மை டாக்:
2022ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. சூர்யா, ஜோதிகா தயாரித்த இந்தப் படத்தில் அருண் விஜய்யும் அவரது மகன் அர்ணவ்வும் மையப் பாத்திரங்களை ஏற்றிருந்தனர். இதில் வில்லனாக வினய் நடித்திருந்தார்.
தற்செயலாகக் கிடைக்கிற நாய்குட்டியை வளர்க்கும் ஒரு சிறுவன் மற்றும் அவரது குடும்பம், இன்னொரு புறம் சர்வதேச நாய் போட்டியில் பங்கேற்பதற்காக நாய்க்குட்டிகளைக் கடுமையாகத் துன்புறுத்துகிற ஒரு தொழிலதிபர்.
இவர்களுக்கு இடையே நாயை மையமாக வைத்து ஏற்படுகிற ‘போட்டா போட்டி’யே இப்படத்தின் கதை. மேற்கத்திய திரைப்பட சாயலில் இருந்தாலும், இப்படம் எளிதாக நம் மனதைத் தொடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.
நாய் சேகர்:
சேகர் எனும் இளைஞன், படையப்பா என்கிற ஒரு நாய். ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பினால் இருவரது உயிரும் இடம் மாறுவதால் ஏற்படுகிற விபரீதங்களைப் பேசுவதாக அமைந்தது இப்படத்தின் கதை.
சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியான், கிஷோர் ராஜ்குமார், லிவிங்ஸ்டன், இளவரசு எனப் பலர் நடித்த இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருந்தார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்:

வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை திறமையை பளிச்சிடச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட படமிது.
‘நானும் ரௌடிதான்..’ எனும் கலக்கல் காமெடியை ‘தலைநகரம்’மில் தந்த இயக்குனர் சுராஜ் இதனை ஆக்கியிருந்தார்.
இப்படத்தில் நாய்கள் பல வந்து போயிருந்தாலும், அவற்றின் இருப்பு நம்மை அசர வைப்பதாக இல்லை என்பதே நிஜம். 2022இல் இது வெளியானது.
சாட் பூட் த்ரி:
குழந்தைகளுக்கான திரைப்படமாக இதன் உள்ளடக்கம் அமைக்கப்பட்டிருக்கும். 2023இல் வெளியான இப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியிருந்தார்.
சினேகா, வெங்கட்பிரபு, யோகிபாபு, ஷிவாங்கி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் பிரனிதி, கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்த், பூவையார் குழந்தை நட்சத்திரங்களாக இடம்பெற்றிருந்தனர்.
காமெடி, ட்ராமா, ஆக்ஷன் வகைமையில் கலந்து கட்டியிருக்கும் இப்படம், பெருநகரமொன்றில் வாழ்கிற பதின்ம வயதுக் குழந்தைகள் நால்வரது மனவுலகைக் காட்டுவதாக அமைந்திருக்கும்.
அலங்கு:
தமிழ்நாடு – கேரள எல்லையோரக் கிராமப்புறப் பகுதியொல் நிகழ்வதாக இப்படத்தின் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருக்கும் ஒரு தமிழர் வளர்க்கிற வேட்டை நாயைக் கண்டு சிலர் ஆத்திரமடைவதும், அதன் தொடர்ச்சியாக நிகழ்கிற சம்பவங்களால் பலரது வாழ்க்கை தடம் மாறுவதும் இதன் கதையாகச் சொல்லப்பட்டிருந்தது.
எஸ்.பி.சக்திவேல் இயக்கிய இப்படத்தில் குணநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட், அப்பணி சரத், ஸ்ரீரேகா, கொற்றவை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இவை தவிர்த்து ‘நாய்கள் ஜாக்கிரதை’ பாணியில் ஒரு கொலைக்குற்ற விசாரணையில் போலீசாருக்கு ஒரு நாய் உதவுவதாக அமைந்த ‘டேனி’, அதிலிருக்கும் ஐடியாவுக்காக கவனிக்கப்பட்டது. இதில் வரலட்சுமி சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அப்பத்தா:
ஒரு மூதாட்டிக்கும் திடீரென்று அவரை வந்தடைந்த ஒரு நாய்க்கும் இடையேயான முரண்கள் மெல்ல ஒரு உறவாக முகிழ்க்க காரணமாகிறது.
அதன்பின், அந்த மூதாட்டியின் வாழ்வு எப்படி மாறியது என்பதைச் சொன்னது ‘அப்பத்தா’. நடிகை ஊர்வசியின் 700வது படமாக அமைந்த இதனை பிரியதர்ஷன் இயக்கியிருந்தார்.

மேற்சொன்ன படங்களைத் தாண்டி, இவ்வகைமையில் உருவாக்கப்பட்டிருந்த கன்னடப் படமான ‘777 சார்லி’ முக்கிய இடத்தைப் பெறவல்லது.
ஆக்ஷன் படங்களே நூறு கோடி வசூலைப் பெறும் என்று சொல்லப்படுகிற நேரத்தில், ‘ட்ராமா’ வகைமையில் அமைந்த இப்படம் அச்சாதனையைச் சாத்தியப்படுத்தியது.
இதன் நாயகனாக ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். கிரண்ராஜ் எழுத்தாக்கம் செய்து இயக்கியிருந்தார்.
சக மனிதர்களோடு நல்லதொரு உறவைப் பேணாத ஒரு மனிதனை மெல்லத் தனது அன்பால் வசப்படுத்துகிற ‘சார்லி’ எனும் நாயின் வாழ்வை மகத்துவமானதாக மாற்றியிருந்தது இப்படம்.
இது கன்னடம் தவிர்த்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றியைக் கண்டது.
நாய் எனும் விலங்கைக் கொண்டு விதவிதமான கதைகளை நம் முன்னே வைக்கின்றன மேற்சொன்ன திரைப்படங்கள்.
அந்த ஒரு விஷயமே, ஒவ்வொரு மனிதரிடத்திலும் அவ்விலங்குகள் ஏற்படுத்துகிற தாக்கத்தின் உதாரணமாகத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ‘சர்வதேச நாய்கள் தினம்’ பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், நாய்களின் முக்கியத்துவம் தமிழ் திரையில் எந்தளவுக்கு வெளிப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டவே இந்தப் பதிவு..!
– மாபா