சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிறன்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
நடிகர் சத்யராஜ், இயக்குநர் கதிர், பாடகர் அந்தோணிதாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராசேந்திரன், வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்துகொண்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.
நடிகர் சத்யராஜ், இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும்போது, வேலுபிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம்தான் தன்னை சிந்திக்கத் தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்தபோது தொலைபேசியில் ஆறுதல் சொல்ல அழைத்தபோது, “நான் பிறந்து பெரியாரின் கருத்துக்களை இந்த மக்களுக்கு என்னால் முடிந்தவரை கொண்டு சேர்த்திருக்கேன். நான் வந்த வேலை நிறைவாக முடிந்திருக்கிறது” என்று சொன்னதாகக் குறிப்பிட்ட சத்யராஜ், ஒரு பகுத்தறிவாளர் மரணத்தைக்கூட எப்படி இயல்பாக எடுத்துக்கொள்கிறார் பாருங்கள் என்று சிலாகித்தார்.
நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்திருந்த ஆளுமைகள் அனைவரும் வேலு பிரபாகரனுக்கும் தங்களுக்குமான நட்பையும், அன்பையும், தங்கள் அனுபவங்களையும், அவரது சிந்தனைக் கூர்மையையும், தொழில்நுட்ப வல்லமையையும் பாராட்டி வேலு பிரபாகரனின் நினைவுகளைப் பகிர்ந்தனர்.
இந்நிகழ்வை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். கடைசியாக அவருக்கு துணையாக இருந்த டிஜிட்டலி ஜெகதீஷ், அவரது சகோதரர் வேலு ராஜா, அர்ஜுன் வேலு ஆகியோரும் அவருடன் பழகிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.