இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான ’கலவை’ சட்னி!

காலை மற்றும் இரவு வேலையில் இட்லி, தோசை, ஆப்பத்திற்கு சைடிஷ் ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்பு தட்டிவிடும்.

இந்தக் கால தலைமுறைக்கு ஏற்றதுபோல் விதவிதமான கலரில் கிரீன், எல்லோ, வெள்ளை, சிவப்பு என அவர்கள் ரசனைக்குப் பிடித்த மாதிரி சமையலும், சட்னியும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அடம்பிடிக்காமல் ரசித்து, ருசித்துச் சாப்பிடுவார்கள்.

உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கக் கூடிய வித்தியாசமான சட்னியாக இருந்தால் மகிழ்ச்சிதான்.

இப்படி உடலுக்கு நன்மை கொடுக்கக் கூடிய பல விதமான பொருட்கள் மற்றும் பருப்புகள் கொண்டு சீக்கிரம் செய்யக்கூடிய சட்னி ‘கலவை சட்னி’.

காரசாரமான, சூப்பரான சுவையான இந்த சட்னி எப்படி செய்யலாம்? – பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி – சிறு துண்டு
புளி – சிறிய அளவு
பூண்டு – 4 பல்
வரமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி -2 நறுக்கியது
உப்பு – சுவைக்கேற்ப
புதினா – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – சிறிது
துருவிய தேங்காய் – 1/4 கப்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு தேவையானவை:

எண்ணெய் – தே.அ
கடுகு – தே.அ
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4 பொடியாக நறுக்கியது
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – தே.அ

செய்முறை:

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பின் அதில் புளி, கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும்.

அதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதங்கியதும் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

சூடு ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புகள் மற்றும் வதக்கி வைத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி சேர்த்து கிளறினால் சுவையான கலவை சட்னி ரெடி.

புதுமையான இந்த சட்னி இட்லி, தோசை மற்றும் ஆப்பம் போன்ற காலை, இரவு உணவுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

– யாழினி சோமு

You might also like