மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார்.

தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக கையில் மனுக்களுடன் ஓரமாக நின்றனர்.

காவல்துறையினர் அவர்களை போகச் சொல்லியும் மறுத்தனர்.

‘‘மனுக்களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை.

‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.

மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார்.

அதிகாரிகளிடம் விவரம் கேட்டார்.

‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்.

யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார்.

தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்துப் பெற்றுக் கொண்டார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்; மனுக்கள் கொடுத்தவர்கள் உட்பட.

நன்றி: தி இந்து 

You might also like