எளிமையான வரிகளில் காதலை வர்ணிக்கும் பழநிபாரதி!

“பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ..
அது வரை நாமும் சென்றுவிடுவோம்

விடைபெறும் நேரம்
வரும் போதும்
சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்”
– எப்போதெல்லாம் இனம் புரியாத கவலையில் மனம் மூழ்கும் போதெல்லாம் கேட்கும் மிக முக்கியமான பாடலான “கடவுள் தந்த அழகிய வாழ்வின்” வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் பழநிபாரதி.
90-களில் இளமைப் பருவங்களை கழித்த பெரும்பான்மையான இளைஞர்களுக்கு எளிதில் உச்சரிக்கும் அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் எளிமையான வரிகளில் காதலை அள்ளி அள்ளி தெளித்தவர் இவர்.
இளையராஜாவோடு இணைந்து மொத்தப் பாடல்களையும் இவர் எழுதிய காதலுக்கு மரியாதையும் கண்ணுக்குள் நிலவும் இன்று வரை பலரின் விருப்ப பாடல்கள்.
“எனது இரவு அவள் கூந்தலில்…
எனது பகல்கள் அவள் பாா்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்”
– அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு போங்க. இதுக்கு மேல காதலியை பத்தி வேற எப்படி சொல்றது. இரவு பகல் என காலம் முழுவதும் காதலியோடு தான் என நச்சென்று சொல்வது இப்படித்தான்.
“கடலைச் சேரா நதியைக் கண்டால்
தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்
அச்சச்சச்சோ…”
– அப்படியே காதலில் இருந்து சோகத்திலும் தத்துவத்திலும் பயணிக்கும் இந்த வரிகளின் எளிமையான உவமைகளை பாருங்கள். இந்த எளிமை தான் அவருடைய ஸ்பெஷாலிட்டி.
அச்சச்சோ… ஜேசுதாஸ் உருகும் இடத்தில் எப்படி இதை, இந்த இடத்தில் இவரால் சேர்க்க முடிந்தது என பலமுறை வியந்திருக்கிறேன்.
“பூக்கள் அவளைப் பார்த்து பார்த்து
ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
கைகள் நீட்டியதோ”
“என் பாதைகள்
என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி”
“சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்”
– இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 
“மல்லிகையே மல்லிகையே”
“ஆனந்தம் ஆனந்தம் பாடும்”
“வெல்வெட்டா வெல்வெட்டா”
“காதல் நீதானா காதல் நீதானா”
– இதுபோன்று நிறைய பாடல்களின் முதல் இரண்டு வார்த்தைகள் ஒரே மாதிரியாக எழுதுவதை ஒரு ஸ்டைலாக மாற்றியவரும் கவிஞர் பழநிபாரதிதான்.
கமர்ஷியலான பல பாடல்களிலும் கவித்துவமான எளிமையான வரிகளை எழுதுவதிலும் வல்லவர் பழநிபாரதி.
கவிஞர் வாலிக்குப் பிறகு மெட்டுக்கும் வரிகளுக்கும் சண்டை வராமல் மிக அழகாக சமாதானம் செய்து மனதை மயக்கும் வரிகளையும் குட்டிக் குட்டி கவிதைத் தருணங்களையும் வைத்துவிடுவார் கவிஞர் பழநிபாரதி.
– பிரபுசங்கர்
You might also like