அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது.
உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் – நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் – தாடியுடன் நெடுஞ்செழியனை!
தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து வரும்போது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு.
மனதிலே உருவெடுத்துக் கொண்டிருந்த ஆசை நடமாடக் கண்டேன், தோழர் நெடுஞ்செழியன், கழக மேடையில் பேசத் தொடங்கியதும்.
கருவூர் ஆற்று மணலில் – நினைவிருக்கிறது – பெரியாரும் இருந்தார். தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து – ஆயினும் என்ன செய்வது?
நாளாவட்டத்தில், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நம்மை விட்டு வைக்கிறார்கள்!!
நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்.
என்னிடம் இல்லாத – நான் விரும்பாததால், அல்ல, இயலாததால் – ஒரு அருங்குணம் அவரிடம் உண்டு – கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது!
எப்போதும் எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது. என்னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் – ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக்கொள்ள இயலவில்லை.
நான் அடிக்கடி கனவு காண்கிறேன், சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல – அந்தக் காலம் மலை ஏறிவிட்டது – பொதுப் பிரச்னைகளைப்பற்றி.
தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர்.
நேரம் வீணாகிவிட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.
வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவக்கிக் கொள்வார்.
சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம் – அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள் – ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல, இப்படிப் பலப்பல.
விழித்தபடி – நான் கனவுகள் கண்டு கொண்டிருப்பேன். அவர்? – வேலை! வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார்.
இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச் செய்துகொள்ள வேண்டும்.”
– நாவலர் நெடுஞ்செழியன் பற்றி, பேரறிஞர் அண்ணா பேசியவை.