போதை வழக்கு ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவுக்கு முன் ஜாமீன்!

சென்றவாரம் வரை வெவ்வேறு காட்சி ஊடகங்களில், சமூக வலைதளங்களில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியதோடு, மற்றவர்களுக்கும் விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அப்போதே தமிழ்த் திரையுலகில் இதேவிதமாக போதைக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனதாக பல்வேறு நபர்களின் பேர்கள் அடிபட்டன. தொலைக்காட்சியில் இந்தக் கைதுகள் பற்றி காரசாரமாக விவாதமே நடந்தது. 

மிக அண்மையில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சார்பில் முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கப்பட்டபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது, அவர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டிருக்கிறது. 

பொதுவாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களுக்கு அவ்வளவு சுலபமாக இதற்கு முன்பு முன்ஜாமீன் கிடைத்து விடுவதில்லை.

ஜெயலலிதா தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, கஞ்சா வழக்குப் போடப்பட்டு சிலர் மீது வழக்குப் பாய்ந்ததும், கடந்த காலத்தைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு நினைவு வரலாம்.

ஓராண்டுக்கு முன்பு பெருமளவில் நவீன போதைப் பொருட்களைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதும் தெரிந்த விஷயம்தான்.

தமிழ்நாட்டில் தற்போது, போதைப் பொருளின் நடமாட்டம் அதிகரித்து வருவதைப் பற்றி அடிக்கடி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிக் கொண்டே இருக்கின்றன. 

அப்படி இருந்தும் அதே ‘காஸ்ட்லி’யான போதைப் பொருட்களின் நடமாட்டம் கல்விக் கூடங்களுக்கு அருகில்கூட இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. போதைப் பொருட்கள் பிடிபடும் செய்திகளும் வெளிவருகின்றன.

டாஸ்மாக் விஷயத்தில், ஒருபுறம் ‘மது குடிப்பது கேடு’ என்று அறநெறியைச் சின்னதாக அச்சடித்துவிட்டு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடிக்கு விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

அரசு ஒரு காலத்தில் சொன்னபடி மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாதா என்பதை நீதிபதிகள் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

இருந்தும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் சனிக்கிழமைகள் மற்றும் முக்கிய தினங்களில் விசேஷமான ‘பார்ட்டி’ நடக்கிறது.

அந்தப் ‘பார்ட்டி’யில், பல்வேறு விதமான போதைப் பொருட்கள் பயன்படுத்துப்படுவதாக, சமூக வலைதளங்கள் ஒலிபரப்புவதும், ஒரு சிலர் நள்ளிரவு கடந்து கார் ஓட்டியபடி வீட்டிற்குத் திரும்பும்போது விபத்தை ஏற்படுத்தியதும் நமக்கு அவ்வப்போதைய செய்திகள்.

போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏன் இந்த அளவுக்கு தடுமாறிக் கொண்டே இருக்கிறோம்?

– லியோ

You might also like