ரஜினி செய்த பேருதவியை மறக்க முடியாது!

பண்டரிபாயின் உருக்கம்

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகி வேடம் தொடங்கி அக்கா, அண்ணி, அம்மா என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருந்தாலும், பண்டரிபாய் அளவுக்கு கனிவான முகத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு திரையில் மட்டுமல்ல, நேரடியாகப் பார்த்தபோது, அவ்வளவு குழைவான முகம் அவருக்கு. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றிய பிரபல வார இதழில் நான் எழுதி வந்த நதிமூலம் தொடருக்கான சிறு பேட்டிக்காக, பண்டரிபாயைச் சந்திக்க அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன்.

போய் சிறிதுநேரம் கழித்து வீல் சேரில் நைட்டி அணிந்தபடி மேலே ஒரு காட்டன் டவல் போர்த்தியபடி அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

பார்த்ததும், அதே கனிந்த சிரிப்பு. அவருக்கருகில் ஒரு ஸ்டூலைக் கொண்டுவந்து போட்டு, அருகில் அமரச் சொன்னார்.

ஒரு கை வாதத்தால் முடங்கி இருந்த நிலையில், அவரைப் பார்ப்பதே சிரமமாக இருந்தது. மன்னன் படத்தில், “அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே…” என்ற பாடலில் ரஜினியுடன் சேர்ந்து ஒரு கை விளங்காத மாதிரி நடித்த மாதிரியே நேரிலும் இருந்தார்.

“என்னப்பா… இப்படி ஷாக்கா பாக்குற…” என்று சிரித்தபடி சொன்னவர், “சரி முதல்ல நீ கேட்க வந்த விஷயத்த கேளுப்பா” என்றார் மென்மையாக.

ஆச்சர்யமாக இருந்தது. பராசக்தி படத்தில், சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக துள்ளலான நடனத்துடன் ”புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே…” என்று உற்சாகம் ததும்பப் பாடுகிறபடி நடித்த முகமா இது?

சிவாஜி, எம்ஜிஆர், துவங்கி கமல், ரஜினி வரை பல நூற்றுக்கணக்கான படங்களில் தாய்மை ததும்பும் முகமாக நடித்திருந்த அவரை அந்தக் கோலத்தில் பார்த்தபோது, இயல்பானபடி ஏனோ பேச முடியவில்லை. 

அப்பறம் பராசக்தி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து கலைஞரின் வசனத்தை ஆவேசமாகப் பேசி, சிவாஜி கதாபாத்திரத்தை திருத்துகிறபடி எப்படி நடித்தீர்கள் என்று கேட்டபோது, ஓரிரு வருடங்களுக்குள் தமிழை கற்றுக் கொண்டு நடித்ததாக ’கேஷுவலாக’ சொன்னார்.

அதோடு, பராசக்தி படத்தில் பேசிய கலைஞரின் வசனத்தை அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்காமல், துல்லியமாக உணர்ச்சி பாவத்தோடு பேசிக் காட்டவும் செய்தார்.

”சிவாஜியின் முதல் படமான பராசக்தியில் அவருடன் ஜோடியாக நடித்து, பல படங்களில் அவருக்குத் தங்கையாக, அத்தையாக, அம்மாவாக நடித்துவிட்டேன்.

முகமும் கண்ணும் பேசும் அவருக்கு. உணர்ச்சிவசப்பட்டு நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட நடிப்பவர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பார்.

சில காட்சிகளில் நடு வயிற்றிலிருந்து குரல் வரணும் என்று சொல்வார். தொழில் மேலே ஒரு பக்தி அவருக்கு.

நாகேஸ்வரராவ் ஒரு விழாவில் “என்னால் ஒரு சில கேரக்டர்கள்தான் பண்ண முடியும். சிவாஜிக்குத் தான் அத்தனை கேரக்டர்களும் பொருந்தி விடுகிறது” என்று சொன்னார். அவரது முதல் படத்தில் ஆரம்பித்த அந்த ஈடுபாடு இன்று வரைக்கும் நீடிக்கிறது” என்று சிவாஜியைப் பற்றிச் சொன்னவர் தெய்வமகன், கௌரவம் என்று சில படக் காட்சிகளைக் குறிப்பிட்டு அப்போது, சிவாஜி நடிப்பில் காட்டிய ஈடுபாடு பற்றி சிலாகித்துச் சொன்னார். 

எம்ஜிஆருடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம்ஜிஆரின் சகோதரியாக நடித்ததைப் பற்றியும் அடிமைப் பெண் படத்தில் எம்ஜிஆரின் அம்மாவாக நடித்ததைப் பற்றியும் குறிப்பிட்டுப் பெருமையுடன் சொன்னார்

பிறகு அடுத்த தலைமுறைப் பற்றிப் பேச்சு வந்தது. “எத்தனையோ நடிகர்களோட நான் நடிச்சிட்டேன். டைரக்டர் பி.வாசு இயக்கிய மன்னன் படத்தில், ரஜினிக்கு அம்மாவாக நடித்ததை மறக்கவே முடியாது.

குறிப்பிட்ட காட்சியில், கை விளங்காமல் இருக்கிற எனக்குத் தலையில் எண்ணெய் தேய்த்து ரஜினி குளிப்பாட்டுகிற காட்சி அவ்வளவு நேர்த்தியாக பண்ணியதோடு, இன்னொரு காட்சியில் என்னைக் கையில் ஒரு குழந்தையைப் போல ஏந்திக் கொண்டு நடந்தார் ரஜினி. 

அவருக்கு அம்மாவாக நடித்தபோது, நிஜமாகவே எனது சொந்தத்தைப் போல நடந்து கொண்டார் ரஜினி. பிறகு, அவர் நடித்த அருணாச்சலம் படத்தில், தயாரிப்பாளர்களில் ஒருவராக என்னையும் சேர்த்து ஒரு பெரும் தொகையை அவர் வந்து கொடுத்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை. அப்படி ஒரு அபூர்வமான பிறவி ரஜினி” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பியது. 

பத்து நிமிட அளவுக்கு அவரிடம் பேசப் போய் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு மேல் வீல் சேரில் அமர்ந்தபடியே தன்னுடைய உடல் சிரமத்தை சிறிதும் உணராமல், பேசிய பேச்சும் கனிவான அந்த முகமும் இப்போதும் நினைவில் இருக்கிறது.

– மணா

You might also like