3 பிஹெச்கே – வீடு என்பது என்ன?

வாடகை வீடுகளில் வசிக்கிற எல்லோருக்கும் சொந்த வீடு என்பது முதல் கனவாக இருக்கும். ஆனால், அவர்களில் சிலருக்கே அது கைகூடுகிறது. சிலர் அந்தக் கனவை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிவிட்டுச் செல்கின்றனர்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட மனிதர்களை, கனவுகளை, அவற்றை எட்டுவதற்கான தினசரிப் போராட்டங்களைப் பேசுகிறது, ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘3 பிஹெச்கே’. அப்படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை அதனைத் திறம்படக் காட்டின.

என்றபோதும், அதனை எந்தளவுக்கு முழுமையாக இப்படம் வெளிப்படுத்தியிருக்கிறது அல்லது அதனைத் தாண்டிய வேறு அம்சங்கள் இதில் இருக்கின்றனவா என்ற எதிர்பார்ப்போடு படம் பார்க்கச் செல்ல வேண்டியிருந்தது. காரணம், இதன் காஸ்ட்டிங்.

சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா ஆச்சார், சுப்பு பஞ்சு என்று வழக்கத்திற்கு மாறான கலைஞர்கள் இதில் நிறைந்திருந்தனர்.

ஒளிப்பதிவு, இசை எனப் பல தொழில்நுட்ப அம்சங்கள், திரையில் வழக்கத்திற்கு மாறான பீல்குட் அனுபவம் கிடைக்கவிருப்பதாக உணர்த்தின.

‘3பிஹெச்கே’ மேற்சொன்ன அனைத்தையும் உண்மை ஆக்கியிருக்கிறதா?

’3பிஹெச்கே’ கதை!

கணவன், மனைவி, மகன், மகள் அடங்கிய ஒரு குடும்பம் தங்களுக்கென்று ஒரு வீடு கட்ட வேண்டுமென்ற கனவைக் கொண்டிருக்கிறது. அது நனவானதா, இல்லையா என்பதே ‘3பிஹெச்கே’ கதை.

இக்கதையில் வாசுதேவன், சாந்தி (சரத்குமார், தேவயானி) ஆகியன குடும்பத் தலைவன், தலைவியாக வருகின்றனர். அவர்களது குழந்தைகளாக பிரபு (சித்தார்த்), ஆர்த்தி (மீத்தா ரகுநாத்) இருவரும் இருக்கின்றனர்.

இந்த நால்வரும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கிற பாசம் எத்தகையது? கால ஓட்டத்தில் கல்வி, ஆரோக்கியம், காதல் சார்ந்து இவர்கள் எதிர்கொள்கிற ஏற்றங்கள் இறக்கங்கள் எத்தகையவை?

வாசுதேவன் – சாந்தி தம்பதி போலவே, அவர்களது பிள்ளைகளுக்கும் இணக்கமான இணை கிடைத்தனரா?

சென்னையில் ஒண்டுக்குடித்தனத்தில் குடியிருக்கிற ‘வசித்தல்’ அனுபவத்தை அவர்கள் எத்தனை வீடுகளில் அனுபவிக்கின்றனர்?

அவை தருகிற மகிழ்ச்சிகள், வலிகள் எத்தகையவை? அவற்றைக் கடந்து செல்வதற்கு, அவர்கள் படுகிற போராட்டம் எப்படிப்பட்டது?

உடல், மன அளவில் அடைந்த வலி, வேதனையைத் தாண்டி, அவர்களால் ‘வீடு’ எனும் இலக்கை அடைய முடிந்ததா என்று சொல்கிறது ‘3 பிஹெச்கே’வின் மீதி.

இந்தக் கதையில் மூன்று தலைமுறை மனிதர்கள் வந்து போகின்றனர். அவர்களில் மேற்சொன்ன நால்வர் மட்டுமே பிரதானமாக இடம்பெறுகின்றனர்.

அதனால், இதில் நாயகன், நாயகியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் தேவைகளைப் பொறுத்து, அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.

அனுபவம் புதுமையா?

கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு மகன்களின் வாழ்க்கையனுபவத்தைச் சொன்னது, சேரனின் ‘தவமாய் தவமிருந்து’.

கிட்டத்தட்ட அதன் நகர்ப்புற பதிப்பாக, மத்திய நடுத்தர வர்க்க வாழ்வின் பிரதிபலிப்பாக இருந்தது, கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’.

கிட்டத்தட்ட அந்த வரிசையில் இடம்பெறுகிற வகையில் அமைந்துள்ள ‘3பிஹெச்கே’, ஒரு பெருநகரத்தில் வாழ்கிற கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மனிதர்களின் ‘சொந்த வீடு’ கனவைப் பேசுகிறது.

திரைக்கதையில் பெரும்பாலான காட்சிகள் அந்தக் கனவை மையப்படுத்தியே ஆக்கப்பட்டிருக்கின்றன. அதனை எட்டுவதற்கான முயற்சியின் இடையே காதல், கல்யாணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, அவை சார்ந்த பிரச்சனைகள் என்று சில விஷயங்கள் தலைகாட்டுவதாகச் சில காட்சிகள் இருக்கின்றன.

அந்த வகையில், எடுத்துக்கொண்ட கதைக்கு, அதன் வகைமைக்கு நியாயம் சேர்க்கிற விதமாகக் காட்சிகளை வடிவமைத்து, திரை வடிவம் தந்திருக்கிறார் ஸ்ரீகணேஷ்.

‘வீடுன்னா என்ன? ஒரு குடும்பத்தோடு மகிழ்ச்சியான வாழ்க்கை நினைவுகள் தான்’ என்ற தொனியில் இயக்குனர் அமைத்துள்ள வசனங்களும், கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ஒரு வீடு கதை சொல்வதாகக் காட்டப்பட்டிருப்பதும் இப்படத்தைத் தனித்துவமானதாக மாற்றுகின்றன.

இயக்குனர் விக்ரமன் பாணியில் முழுக்க சினிமாத்தனம் கலந்த கதையாகவும் இல்லாமல், பாலு மகேந்திராவின் ‘வீடு’ பட பாணியில் யதார்த்தத்தின் குரூரத்தையும் சொல்லாமல், தனி வழியில் செல்கிறது இப்படம். அந்த அனுபவத்தைப் புதுமை என்று சொல்ல இயலவில்லை.

இயக்குனர் ஸ்ரீகணேஷின் கதை சொல்லல் திரையில் நிதானமாக, நேர்த்தியாக, நிதர்சனமாக வெளிப்பட தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, வினோத் ராஜ்குமாரின் கலை வடிவமைப்பு என்று பல கலைஞர்களின் தொழில்நுட்ப அம்சங்கள் துணை நின்றிருக்கின்றன.

சரத்குமார், தேவயானி இருவருமே பெரும்பாலும் மெல்லப் பேசுகிற மனிதர்களாகத் திரையில் தெரிகின்றனர். காம்பவுண்ட் வீடுகளில் அப்பாத்திரங்கள் வாழ்வதே அதற்கான காரணம் என்று நாமாக உணர வேண்டியிருக்கிறது.  

சித்தார்த், மீத்தா இருவருமே பதின்பருவத்தினராக, வேலைவாய்ப்பு தேடுபவர்களாக, கல்யாண வாழ்வில் ஈடுபடுபவர்களாக, வாழ்வின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களாகத் திரையில் தோற்றமளிக்கின்றனர்.

அந்தந்த வயதுக்கு ஏற்ற உடல்வாகு, உடல்மொழி, பாவனைகள், ஆடைகள், ஒப்பனை என்று அனைத்திலும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றனர்.

அதில் சைத்ரா ஆச்சாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தில் இவர்கள் ஐவருமே ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கொண்டாட்டம், சோகம் எதுவாக இருந்தாலும் அடக்கி வாசிக்கின்றனர்.

‘எதுவும் அதீதம்’ என்ற நிலையில் இருந்து அப்படி விலகி நிற்பது முதலில் ‘சூப்பர்’ என்று தோன்றுகிறது. அடுத்தடுத்த காட்சிகளில் ‘ஓகே’ என்ற எண்ணம் தலைதூக்குகிறது.

ஒருகட்டத்தில், ’சாதாரணமாக மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களா’ என்கிற சந்தேகமாக அது உருமாறுகிறது. அந்த இடத்தில், இயக்குனர் ஸ்ரீகணேஷின் பிரதிபலிப்புகளாகவே அப்பாத்திரங்கள் தெரிகின்றன.

முதன்மையான நான்கு பாத்திரங்கள் ஒரே குடும்பத்தினர் என்று சொல்லப்பட்டாலும், சைத்ராவின் பாத்திரம் கூட அப்படித்தான் திரையில் தெரிகிறது.

சுப்பு பஞ்சு, தலைவாசல் விஜய், யோகிபாபு, விவேக் பிரசன்னா போன்றவர்களே அந்த அபிப்ராயத்தில் இருந்து விலகித் தோற்றமளிக்கின்றனர்.

‘படம் ரொம்ப ஸ்லோவா நகருது’ என்று சில ரசிகர்கள் அயர்ச்சி கொள்வதற்கும், ‘கதை கொஞ்சம் கனெக்ட் ஆக மாட்டேங்குது’ என்று சிலர் தயங்குவதற்கும் ‘அது தான் காரணமோ’ என்று எண்ணத் தோன்றுகிறது.

போலவே சரத்குமார் மற்றும் சித்தார்த் பாத்திரங்களின் வாழ்க்கை குறித்த பார்வை முரண்பட்டிருப்பது திரைக்கதையில் இன்னும் தெளிவாக, அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கலாம்.

முதல் பாதியில் முதன்மை பாத்திரங்களின் ஒப்பனை கொஞ்சம் மிகையாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட அதே போன்று அமைந்திருக்கிற திரைக்கதையையும் காட்சியாக்கத்தையும் ஸ்ரீகணேஷ் செப்பனிட்டிருந்தால், இப்படம் தருகிற திரையனுபவம் இன்னும் செறிவானதாக மாறியிருக்கும்.

அதேநேரத்தில், மிகக்கவனமெடுத்து இப்படத்தின் காட்சியாக்கம் அமைக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொரு பிரேமிலும் அந்த உழைப்பு தென்படுவதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

மென்மையும் இனிமையும் கலந்த மெட்டுகளாக பாடல்கள் இருக்கின்றன. காட்சிகளில் பாத்திரங்கள் மீதிருக்கும் உணர்வெழுச்சியை நம் மூளைக்குக் கடத்துவதைக் கவனமாகச் செய்திருக்கிறது அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை.  

ஆனால், அங்கங்கு அந்த உணர்வெழுச்சி தடைபடுவதுதான் ‘3பிஹெச்கே’வின் பலவீனம். அதற்கு நடிப்புக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பைக் குறை சொல்ல முடியாது.

ஒட்டுமொத்த திரை வடிவம் ரசிகர்களோடு கொள்கிற உறவில் நிகழ்கிற ஒருங்கிணைப்பு அந்த இடங்களில் நழுவிச் சென்றிருப்பதே அதற்குக் காரணம்.

ஏற்கனவே சொன்னது போல, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பாசப்பிணைப்பைச் சொன்ன ‘தவமாய் தவமிருந்து’, ‘வாரணம் ஆயிரம்’ வரிசையில் சேர வேண்டிய படமிது. ’3பிஹெச்கே’ நூலிழையில் அதனைத் தவறவிட்டிருப்பதில் ரசிகர்களான நமக்கும் வருத்தம் தான்..!

உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like