அணுகுவதற்கு எளிய மனிதர்களே இன்றைய தேவை!

அண்மையில் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு சென்றபோது திரையிடலுக்கு முன்பாக கனியமுதன் என்றொரு சிறுவனை பாட அழைத்தனர்.

கனியமுதன் பாரதியின் பாடலொன்றை சன்னமான குரலில் ராகத்தோடு பாடினார்.

அந்தச் சிறுவன் ஒரு special child என்றார் அருகில் இருந்த கதிர்பாரதி. கனியமுதன் பாடியதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அவரது பெற்றோர்கள் அப்படி அவரை உருவாக்கி இருந்தார்கள்.

பாடி முடித்ததும் பார்வையாளர்களின் கரவொலி அடங்க சிறிது நேரம் பிடித்தது. இத்தகைய inclusive culture அவசியம். இச்சிறு நிகழ்வு, அத்திரையிடலுக்கு ஒரு கவனத்தை உருவாக்கி இருந்தது.

பாகுபாடுகள் இன்றி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஒரு சமூகத்தின் நாகரிகத்தை வெளிப்படுத்தும். பலதரப்பட்டவர்கள் புழங்குகிற இடங்களில், பிறர் அணுகுவதற்கு வசதியான வகையில், நம்மை வைத்துக்கொள்ள வேண்டும்.

துப்பாக்கியைக் காட்டிதான் ஒருவரை மிரட்ட முடியும் என்பதில்லை. அறிவைக்காட்டி, அழகைக் காட்டியும் அலங்காரத்தைக் காட்டியும் எளியோரை தூரத்தில் நிறுத்துபவர்கள் இருக்கிறார்கள்.

சமீப காலமாக நடிகர் கிங்காங் தன் மகள் திருமணத்துக்கு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் காட்சியை சமூக ஊடகங்களில் கவனிக்கிறேன். அண்மையில், அவர், நடிகர் விஜய்சேதுபதிக்கு பத்திரிக்கை தருகிறார்.

விஜய் சேதுபதி முட்டிபோட்டு, தன் உயரத்தைக் குறைத்து, அவரிடம் அழைப்பிதழைப் பெறுகிறார். அவரது இச்செய்கையில் நெகிழ்ந்தேன்.

உயரம் குறைந்த வாயிற்படியைக் கடக்கும்போது மனிதர்கள் குனிந்து போகிறார்கள். தலை இடித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக.

நாகரிகம் தன் தலையில் இடித்துக் கொள்ளக்கூடாது! விஜய்சேதுபதி போல் தேவைப்படுகிற இடத்தில் நம்மைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இந்நடத்தையால் ஒரு கவியின் மனதில் விஜய் சேதுபதி மேலும் உயரமாகிறார்.

நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு

You might also like