சத்யராஜ் இயக்கிய ஒரே திரைப்படம்!

தமிழ் திரையுலகில் எத்தனையோ நாயக நடிகர்கள் வில்லன்களாகத் தலை காட்டியிருக்கின்றனர். ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், பாலாஜி போன்றவர்கள் ஆரம்பகாலத்திலேயே அப்படியொரு மாற்றத்தை எதிர்கொண்டனர் என்றால் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ், விஜயகுமார் போன்ற நாயகர்கள் பின்னாட்களில் வில்லன்களாக மாறித் தமது திரையுலக இருப்பை நீட்டித்துக் கொண்டனர்.

அதேகாலகட்டத்தில்தான் வில்லனாக அறிமுகம் ஆன ரஜினிகாந்த் நாயகன் ஆனார். விஜயகாந்த், சத்யராஜ், ஆனந்தராஜ், சரத்குமார் என்று பலரும் அதே பாணியைப் பின்பற்றினார்கள். இவர்களில் சத்யராஜின் இருப்பு மற்றவர்களில் இருந்து நிறையவே வேறுபட்டது.

ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தலைகாட்டினால் போதும் என்று நடிப்பு வாழ்வைத் தொடங்கி, அடியாளாகத் தலைகாட்டி, வில்லனாக மாறி, அதன் வழியே கிடைத்த பெயரையும் புகழையும் கொண்டு ‘ஆன்ட்டி ஹீரோ’வாக உருவெடுத்தவர். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்த உருமாற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.

எண்பதுகளின் பிற்பாதியில் அந்த உழைப்பும் சிரத்தையுமே அவருக்கான ‘நடிப்பு பாணி’யை அமைத்து தந்தது. பிற நாயகர்கள் ஏற்க இயலாத அல்லது ஏற்கத் துணியாத பாத்திரங்களில் நடிக்க வைத்தது. அதன் வழியே தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் தந்தார் சத்யராஜ்.

கூடவே, ஆரம்பகாலத் திரையுலக அனுபவங்கள் எப்படித் திரையிலும் பொதுவெளியிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற பாடங்களை அவருக்குக் கற்றுத் தந்தது.

அதனாலேயே, 1985 முதல் 1995 வரை அவர் தந்த வெற்றிப்படங்களின் எண்ணிக்கையும் அவற்றின் உள்ளடக்கமும் பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.

ஆனால், அதனை மீறி சத்யராஜும் குறிப்பிட்ட காலகட்டத்தில் சரிவை எதிர்கொண்டார். வால்டர் வெற்றிவேல் அமைதிப்படை போன்று ‘ப்ளாக்பஸ்டர்’ அமையாமல் ரொம்பவே தடுமாறினார்.

அப்போது, இயக்குனர் ஆவதென்று முடிவெடுத்தார் சத்யராஜ். ஏற்கனவே மணிவண்ணன் இயக்கிய படங்களின் கதை விவாதங்களில் பங்கெடுத்த அனுபவம் அவருக்கிருந்தது.

தனது திரையுலக இருப்பை வலுப்படுத்துகிற வகையில் ஒரு திரைப்படத்தை அவர் எழுதி இயக்கி நடித்தார். அந்த படத்தின் பெயர் ‘வில்லாதி வில்லன்’. 1995-ம் ஆண்டு ஜுன் 23 அன்று அப்படம் வெளியானது.

வெற்றிக்கான உள்ளடக்கம்!

’அமைதிப்படை’யின் அதிரிபுதிரி வெற்றியில், அக்கதையின் மையமான நாகராஜ சோழன் பாத்திரத்தின் பங்கு மிக மிக அதிகம். அதனால், அது போன்றதொரு ‘நெகடிவ்’ பாத்திரத்தில் நடித்தால் வரவேற்பு அள்ளும் என்பது நிச்சயம் கதை விவாதத்தின் போது பேசப்பட்டிருக்கும்.

தொண்ணூறுகளில் பெரும்பாலான படங்களில் தெனாவெட்டு, அலட்சியம் மற்றும் திமிர் கலந்த உடல்மொழியை வெளிப்படுத்துவதற்கேற்ற பாத்திரங்களில் சத்யராஜ் நடித்தார். அதுவும் நிச்சயம் விவாதிக்கப்பட்டிருக்கும்.

அனைத்தையும் தாண்டி, அன்றிருந்த இளம் நாயகர்களுக்குப் போட்டியாக நாயகி உடன் சத்யராஜ் நடனமாடினால் ரசிகர்கள் குதூகலமாவார்கள் என்று விவாதத்தின்போது சொல்லாமல் இருந்தால் ஆச்சர்யம் தான். அதுவும் நிகழ்ந்திருக்கும் என்றே படுகிறது.

இப்படிப்பட்ட எண்ணங்களின் விளைவாக, ‘வில்லாதி வில்லன்’னில் எடிசன், மீனாட்சி சுந்தர சேஷாத்திரி, பூ கண்ணன் என்று மூன்று பாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் ஒரு நாயகன் நடிக்க வேண்டுமானால், அப்பாத்திரங்களை ரத்த சம்பந்தம் கொண்டதாகக் காட்ட வேண்டும் அல்லது இரட்டையர்களாகக் காட்ட வேண்டும். இந்த படம் அதிலிருந்து வேறுபட்டிருந்தது. சிறு வயதில் இப்படத்தைப் பார்த்தபோது அந்த ஒரு விஷயம் குழப்பத்தை விதைத்தது.

சத்யராஜ் நடித்த பிரம்மா, தாய்மாமன் உட்படப் பல படங்களில் கவுண்டமணி உடன் அவர் தோன்றிய நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வரவழைத்தன. கிட்டத்தட்ட அதே பாணியில் ‘வில்லாதி வில்லன்’னில் நாயகனுடன் வருகிற பாத்திரத்தில் வந்து போயிருந்தார் கவுண்டமணி.

இயக்குனர் நாற்காலியில் இருந்து எழுந்து நடிகராக ‘பார்ம்’ ஆன மணிவண்ணன், இப்படத்திலும் தனது வழக்கமான நக்கல் நையாண்டியை வெளிப்படுத்தியிருந்தார்.

கவர்ச்சி காட்சிகளுக்காகவே விசித்ரா, சில்க் ஸ்மிதா இதில் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களைப் பின்னுக்குத் தள்ளும்விதமாகப் படம் முழுக்கக் கவர்ச்சியை வாரியிறைத்திருந்தார் நக்மா. உண்மையைச் சொல்லப்போனால், அவரைத் திரையில் கண்டு ரசிகர்கள் திகட்டலுக்கு ஆளானார்கள். அதன்பிறகு அவரது மார்க்கெட்டும் சரிந்தது தனிக்கதை.

இத்தனை விஷயங்கள் இருக்கட்டும். படத்தின் கதை என்ன என்று கேட்கிறீர்களா?

ஏழை நாயகன் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலித்துக் கைபிடிக்கிற ‘எம்ஜிஆர் பார்முலா’ கதை தான். அதில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்கிற தனது ஆசையையும் திரைக்கதையில் ‘மசாலா’ நெடியையும் அதிகளவில் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் சத்யராஜ்.

ஒரு பெண் அமைச்சர் கொலையாவது, அதற்கு நாயகன் காரணமாவது, அவரை விடுவிக்க ஒரு நீதிபதியே முயற்சிப்பது என்று இப்படத்தின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.

ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவு, சாய் சுரேஷ் படத்தொகுப்பு, வித்யாசாகரின் இசை என்று இதில் பலரது கூட்டுழைப்பு அடங்கியிருந்தது.

வயசு பத்திக்கிச்சு, தீம்தலக்கடி தில்லாலே, மடிசாரு கட்டிண்டு பாடல்கள் ரசிகர்களை வசீகரித்தன. அப்பாடல்களில் நக்மாவின் கவர்ச்சி ஆட்டம் தியேட்டரில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைத்தது.

ராதிகா, ஆர்.சுந்தர்ராஜன், மயில்சாமி, அல்வா வாசு உட்படப் பலரது பங்களிப்போடு, வழக்கமான ‘கமர்ஷியல்’ வெற்றிப்பட உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது ‘வில்லாதி வில்லன்’.

எப்படிப்பட்ட வெற்றி?

வண்டிச்சோலை சின்ராசு, தோழர் பாண்டியன், வீரப்பதக்கம், எங்கிருந்தோ வந்தான் என்று தொடர்ந்து தோல்விப் படங்களாகத் தந்த சத்யராஜுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்தது ‘வில்லாதி வில்லன்’. அதேநேரத்தில் பார்த்திபனுக்கு ஒரு ‘உள்ளே வெளியே’ போலச் சில அனுபவங்களை இப்படம் சத்யராஜுக்குப் பரிசளித்தது.

அதுவரை சத்யராஜ் படங்களில் நிறைந்திருந்த முதிர்ச்சியும் பக்குவமும் ’வில்லாதி வில்லன்’னில் காணாமல் போயிருந்தது. ’கனம் கோட்டார் அவர்களே’ உட்பட அவர் நடித்த சில படங்களின் சாயல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

அனைத்துக்கும் மேலாக, இயக்குனர் பொறுப்பைக் கவனிப்பதற்காகச் செலவாகிற கால அவகாசம் ரொம்பவே அதிகமாக இருந்தது.

அதனாலோ என்னவோ, அதன்பிறகு சத்யராஜ் படம் எதையும் இயக்கவில்லை. தன் மகன் சிபிராஜுக்காகச் சில படங்களைத் தயாரித்தார்.

’வில்லாதி வில்லன்’ படத்திற்குப் பிறகு சிவசக்தி, சேனாதிபதி, வள்ளல், பகைவன், பெரிய மனுஷன், கல்யாண கலாட்டா, பொண்ணுவீட்டுக்காரன், மலபார் போலீஸ், அழகர்சாமி, வீரநடை என்று தனது இமேஜுக்கு பொருத்தமான, வேறுபட்ட கதைகளில் நடித்தார் சத்யராஜ். ஆனாலும், ஒரு சில படங்களே ரசிகர்களால் கவனிக்கப்பட்டன.

’2000’-ல் வெளியான ‘என்னம்மா கண்ணு’ திரைப்படம் அவருக்கு வேறொரு பாதையைக் காட்ட, அதன் வழி நடந்து லூட்டி, அசத்தல், குங்குமபொட்டு கவுண்டர் போன்ற படங்களில் நடித்தார். பிறகு மெல்லத் தனக்கான வரவேற்பு குறைந்ததை உணர்ந்து குணசித்திர பாத்திரங்களுக்கு மாறினார். 2010-ல் அது நிகழ்கிற வரை அவர் நாயகனாகவே தொடர்ந்து வந்தார்.

ஒருவேளை ‘வில்லாதி வில்ல’னை சத்யராஜ் உருவாக்காமல் போயிருந்தால், அவரது திரையுலகப் பயணம் வேறு மாதிரியானதாக மாறியிருக்கக் கூடும்.

வேறுபட்ட கமர்ஷியல் படங்களில் ஈடுபடுகிற அவரது வேட்கை அப்படியே தொடர்ந்திருக்கக் கூடும்.

பிற மொழிப் படங்களிலும், குணசித்திர பாத்திரங்களை ஏற்பதிலும் வெகு சீக்கிரமே அவர் முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.

இது போன்ற காரணங்களால், சத்யராஜின் திரைவாழ்வில் ஒரு ‘மைல் கல்’ ஆக மாறி நிற்கிறது ‘வில்லாதி வில்லன்’. அதன் உருவாக்கம் தொடர்பான அனுபவங்கள், நாயகனாக இருந்து இயக்குனராகவோ, தயாரிப்பாளராகவோ மாற விரும்புவோருக்கான பால பாடங்களாக அமையலாம்.

’வில்லாதி வில்லன்’ வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த அனுபவங்களைச் சத்யராஜ் பகிர்ந்து கொண்டால் திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அவை சுவாரஸ்யமானதாக அமையும்..!

  • மாபா
You might also like