கலைவாணருக்கும் கண்ணதாசனுக்குமான நட்பு உன்னதமானது!

அருமை நிழல்:

கலைஞருக்கும் என்.எஸ்.கே.வுக்கும் எப்படி நெருக்கமான நட்பு இருந்ததோ, அதேபோல கண்ணதாசனிடமும், பாசமான நட்புக் கொண்டிருந்தார் கலைவாணர்.

இன்னும் சொல்லப் போனால் அண்ணாவிடம் கண்ணதாசனை முதன்முதலாக அறிமுகப்படுத்தி வைத்ததே கலைவாணர்தான்.

சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் எழுத்தாளர் சங்க மாநாட்டில் அண்ணாபேசிய பேச்சினை ஒருவரி கூட விடாமல், தான் ஆசிரியராக இருந்து பணியாற்றிய ‘தாய் நாடு’ இதழிலே வெளியிட்டார் கண்ணதாசன்.

அப்போது அந்தப் பேச்சினை ‘வணங்காமுடி’ என்ற பெயரிலேதான் அதனை வெளியிட்டிருந்தார்.

அதனைப் படித்துப் பார்த்த அண்ணா, யார் இந்த ‘வணங்காமுடி’ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், என்.எஸ்.கே. கண்ணதாசனை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“ஓ… தாய் நாடு இதழில், எனது பேச்சினை மிகச் சிறப்பாக வெளியிட்ட அந்த வணங்காமுடி நீங்கள் தானா?” என்று அண்ணாவிடம் பாராட்டுப் பெற்றார் கண்ணதாசன்.

அதற்குப் பின்னர்தான் அண்ணாவிடம் கண்ணதாசனுக்கு நெருக்கம் அதிகமானது. இந்தச் செய்தியை தனது வனவாசம் புத்தகத்திலேயே கண்ணதாசன் பதிவு செய்திருக்கிறார்.

என்.எஸ்.கே., தான் தயாரித்த படங்களுக்கு எல்லாம் வசனம் எழுத கலைஞரைப் பயன்படுத்தியது போல் பாட்டெழுத கண்ணதாசனையே அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார். இருவருக்கும் இடையே ஓர் ஆழமான நட்பு வேரூன்றி இருந்திருக்கிறது.

ஒரு சமயம், ஒரு படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டிருந்த கண்ணதாசனால் அப்போதிருந்த நேர நெருக்கடியில் எழுத முடியாமல் போய் விட்டது.

அந்தத் தயாரிப்பாளர் வேறு ஒரு எழுத்தாளரை வைத்து வசனம் எழுதிக் கொண்டு போய் என்.எஸ்.கே.விடம் கொடுத்திருக்கிறார்.

“இந்த வசனம் கண்ணதாசன் எழுதியது போல் இல்லையே… அவருடைய எழுத்து நடை எனக்கு நன்றாகத் தெரியுமே.

கண்ணதாசனைச் சந்தித்து எழுத வைத்து எடுத்து வாருங்கள். அப்பொழுது தான் என்னால் நடிக்க முடியும்” என்று திருப்பி அனுப்பிவிட்டார் என்.எஸ்.கே.

அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் அன்பும், பாசமும், மதிப்பும் கொண்டிருந்தனர் என்பதே உண்மை.

குறிப்பு: கண்ணதாசன் அவர்களின் ‘தென்றல்’ பத்திரிகையைப் படிக்கும் கலைவாணர், உடன் மதுரம் அம்மா, கவியரசர் கண்ணதாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

– நன்றி: என்.எஸ்.கே நல்லதம்பி

You might also like