வயநாடு பேரழிவுக்கு யார் காரணம்?

எம்.எஸ். செல்வராஜ்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29–ஆம் தேதி பெருமழை பெய்தது.  தொடர்ச்சியாக 30–ஆம் தேதி நள்ளிரவு முதல் விடியற்காலை வரையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 
அதனால் அங்கே ஓடும் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரை உடைத்து இரண்டாகப் பிரிந்தது. அதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் புரட்டி எடுக்கப்பட்டு மண்ணுள் புதைந்தது.  இதில் ஒரு தேவாலயம், ஒரு பள்ளிவாசல், கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.
தாங்கள் அபாயக் கட்டத்தில் உள்ளோம் என்பதை முன்கூட்டியே அறிந்த மக்கள் பக்கத்தில் உள்ள முகாமில் தஞ்சமடைந்தனர்.
ஆனாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 400-ஐக் கடந்துள்ளது. 250 பேர் காணாமல் போன கணக்கில் வந்துள்ளனர்.
இந்த இயற்கை சீற்றத்தில் அடித்து செல்லப்பட்டது முக்கிய மூன்று கிராமங்கள் என்றாலும், அதற்கு மேலே இருந்த குட்டிக் குட்டி பழங்குடி கிராமங்கள் நிலைமை என்ன ஆயின என்பது தெரியவில்லை. 
காணாமல் போன வீடுகள் ஆயிரத்திற்கும் மேல் என்ற கணக்கில் பார்த்தால் இந்த இறப்பு எண்ணிக்கை ஆயிரங்களைக் கடக்கலாம் என்றும் புள்ளி விவரம் சொல்லுகிறார்கள் களத்தில் உள்ளவர்கள்.
நிலச்சரிவில் மண்ணில் புதைந்து கிடப்பவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்திய ராணுவம், பேரிடர் மீட்புப்படை, கடற்படையினர், இஸ்ரோ விஞ்ஞானிகள், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
‘அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் இருந்து தொடங்கிய மண்சரிவு, 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது.
இதில் 86 ஆயிரம் சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது’ என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதன் பின்னே அரசியலும் புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளது.
‘இங்கே ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் 2009 –ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வரும் அரசுகளே காரணம்.  இது ஒரு சோகம் அல்ல.  குற்றச் செயல்!” என்று முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான ராஜுவ் சந்திரசேகரர் விமர்சித்துள்ளார். 
களத்தில் ராகுல் காந்தி நேரில் சென்று பேரிடரைப் பார்வையிட்ட நிலையில், “இந்த நிலச்சரிவு துயரத்திலும் பாஜக அரசியல் செய்கிறது. பேரிடரை முன்கூட்டியே அறிந்தும் அமித்ஷா ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை? 
முன்னெச்சரிக்கை செய்தி மற்றும் தகவல்களை மாநில அரசுக்கு ஏன் வழங்கவில்லை? இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்!” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை  கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசு அறிக்கை தர பசுமைத் தீர்ப்பாயத் தென்மண்டல அமர்வு உத்திரவிட்டுள்ளது.
ஆமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே. சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில்  நடந்த விசாரணையில், 
“நிலச்சரிவு தொடர்பாக  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் மற்றம் அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள், இதுபோன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விவரங்களும் அறிக்கையில் இடம் பெற வேண்டும்.  
வயநாடு நிலச்சரிவு விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலர், தமிழகத் தலைமைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கின்  விசாரணை செப்டம்பர் 9–ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த நிலச்சரிவுக்கு என்னதான் காரணம் ?
லாபவெறியும், சுரண்டல்களும் இருக்கும் வரை பூமியும் அதை சார்ந்து வாழும் மனிதன் உட்பட உயிரினங்களின் பேரழிவுகளைத் தவிர்க்க முடியாததாகும்.
வளர்ச்சி முன்னேற்றம் என்ற பேர்வையில் பிரமாண்டமாக கட்டிடங்கள், எட்டுவழி,  பத்து வழிச் சாலைகள், சொகுசு விடுதிகள், கனிம வளங்களை பூமிக்கு அடியில் இருந்து அபத்தமாக சுரண்டுவது, இயற்கையாக அமைந்துள்ள பல வகையான சோலைக் காடுகளையும், புல்வெளிகளையும் அழிப்பது. இதை எல்லாம் பாதுகாக்க வேண்டிய வனத்துறை பல கோடிகளை ஏப்பம் விட்டதோடு சரி. 
கடந்த 75 ஆண்டுகள் வனத்துறை எதையும் பாதுகாக்காமல் தோல்வி அடைந்ததை நேர்மையானவர்கள் யாரும் மறுக்க முடியாது.
இயற்கையின் கோரத் தாண்டவம் இன்று கேரள மாநிலம் வயநாட்டை உலுக்கி வருகின்றது.  வெள்ளக்காடுயெங்கும் மனித உடல்கள் மிதக்கின்றன.
காற்றெங்கும் மரண ஓலங்கள். எஞ்சிய மக்கள் என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நிற்கும் பரிதாபம்!
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை பல நூறுகளை தாண்டியுள்ளது. இவர்களின் பெரும்பாலனவர்கள் கடை நிலையில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் என்பது மனதை உருக்குலைக்கின்றது.
இவர்கள் தங்களது ரத்தத்தையும், வேர்வையையும் சிந்தி உருவாக்கிய தேயிலைத் தோட்டம் மண்ணுக்கு அடியில் புதைந்து இவர்களையும் அடித்து சென்றுவிட்டது. 
இதில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களான திரு. காளிதாஸ், திரு. கல்யாணகுமார் இறந்து போய்விட்டார்கள்.
கூடலூர் பகுதி டேன்டியில் பாதி தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டதாலும் வேலை தேடி இந்த பகுதிக்கு விடியற் காலையில் கிளம்பி, மேப்பாடி தோட்டங்களில் வேலை செய்து மாலை வீடு திரும்பி விடுவது வழக்கம். 
சிலர் அங்கே தங்கி விடுவது வழக்கம். கடுமையான மழை பெய்வதால் அன்றைய தினம் மக்கள் போகவில்லை. இல்லையென்றால் இவர்களில் பலர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். 
முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களைச் சேர்ந்த (தேயிலைத் தோட்டங்கள்) மலைப்பகுதி உச்சியில் ஒரே சமயத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 29–ஆம் தேதி நீர் கொப்பளித்து (நீர் இடி) பெருக்கெடுத்து கோரத் தாண்டவம் போட்டு அனைத்தையும் அழித்துவிட்டது. 
விடியற்காலை 2 மணிக்கு கனவுகளோடு உறங்கியவர்கள் நிரந்தரமாக தூங்கிவிட்டார்கள்.  அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் அனைத்தையும் அடித்துச் சென்ற வெள்ளப் பெருக்கு நிலம்பூர் வழியாக சாலியாறில் கலந்து கள்ளிக்கோட்டையை தாண்டி சென்றுவிட்டது.
வெள்ளைக்காரர்கள் காலத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை இணைத்து அரிசன் மலையாளம், சென்டில்லி ராக் (Sentile Rake) என்ற பெருந்தோட்டங்கள்  உருவாக்கப்பட்டது. 
தேயிலை, காப்பி, ஏலம், மிளகு, பாக்கு போன்ற பணப்பயிர்கள் வெள்யைர்களின் லாப நோக்கத்துக்காக பயிரிடப்பட்டது. 
சாதியக் கொடுமைகளாலும், வறுமையாலும் எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து கண்காணிகள் மூலம் (வெள்ளைகார ஏஜேன்) அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இந்தத் தொழிலாளர்களுடன் காலப்போக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலபார் மாப்பிள்ளை ஏழை,  இஸ்லாமியர்கள் இந்தத் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் பலர் வெளியேறிவிட்ட நிலையில் சமீப காலங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தோட்ட முதலாளிகளும் நிர்வாகம் செய்தவர்களும் மாறிவிட்டார்கள்
• வனத்துறையினரின் உடந்தையுடன் இயற்கையின் சோலைக் காடுகள் தொடர்ந்து சிதைக்கப்பட்டது.
• இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக அதிகாரிகளின் உடந்தையுடன் பெரும் முதலாளிகளின் சுற்றுலா சொகுசு விடுதிகள், சுகவாசிகள் தங்களது கால்களை நனைத்துக் கொண்டும் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து கொண்டும் இயற்கையை ரசிக்கிறோம் என்ற பெயரில் சுற்றுலா ஊக்கப்படுத்தப்பட்டது.
இந்த இயற்கை சீரழிவுகள் அனைத்தும் வனத்துறை மற்றும் இதர அதிகாரிகளின் உடந்தையுடன் தான் நடந்துள்ளது. இதன் விளைவுகள்தான் இந்த கோரமான நிலச்சரிவு.
இதற்கு பலியானவர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்த அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களான உழைக்கும் மக்கள்.
2019–ஆம் ஆண்டு இதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது பகலில் ஏற்பட்டதால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இதற்கு முன்பும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை எல்லாம் முன்னெச்சரிக்கையாக எடுக்கவில்லை. 
• ‘பூமி’ பல கோடிக்கணக்கான உயிரினங்களால் உருவானது. அதனைக் காயப்படுத்தி, பல தொல்லைகள் கொடுக்கும்போது, அது சிதைந்து போகும் என்பது மறுக்க முடியாத ஒன்று. 
இந்த பூமியில் போர்வையாக மரங்களும், புல் பரப்புகளும், கொடிகளும், புதர்களும் இருக்கின்றன. பிரபஞ்சம் முழுவதுமே சம நிலையுடன் இருக்கிறது.
இந்த நியதி மாறினால் எல்லாமே நாசமாகிவிடும். இதை மனிதன் உணர்ந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கம் லாபவெறியாலும் சுயநலத்தாலும் பேராசையாலும் அழித்து வருகின்றனர். 
இந்த பூமி தன்னுடைய மேற்பரப்பில் மரங்களையும், புற்களையும், செடிக் கொடிகளையும், பாறைகளையும், மண்ணையும், மலைகளையும், நீரையும், இயற்கை விதிக்கு ஏற்ப வைத்துள்ளது. 
அவற்றை மாற்றினால் பல்வேறு நாச விளைவுகள் ஏற்படும். ஆனால் பேராசை சுயநல மனிதர்கள் மரங்களையும், செடிக்கொடிகளையும் கண்மூடித்தனமாக அழிப்பதோடு கனிம வளங்களை சுரண்டுவதோடு பாறைகளையும், மலைகளையும், நதிகளையும் அவன் சுயநலத்திற்கு ஏற்ப மாற்றி அழிக்கிறனர்.
• இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு இயற்கை வளங்களை அபகரமாக சுரண்டி செல்வம் கொழிப்பதுதான் மிக முக்கிய நோக்கம்.  இதற்கு ஏற்றவாறு பெரும் சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள், போர்க் கருவிகள், மின்சாரம், டேம் என பூமியை சீரழித்ததோடு சூடாக்கிவிட்டனர்.
இதன் விளைவுதான் பருவநிலை மாற்றம். வருடம் முழுவதும் பேய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கின்றது.
உலகில் பல இடங்களில் சூரியனின் வெப்பத்தால் பலர் மடிவதைக் காண்கிறோம். இதை எல்லாம் விட்டுவிட்டதால் தான் மக்கள் மடிவதைக் காண்கிறோம்.  
• மக்கள் காரணம் என்று பேசுபவர்கள் மேற்கண்ட இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்களை காப்பாற்றவும், இதற்கு உடந்தையான ஊழல் அதிகாரிகளையும், ஆதிக்க வர்க்கத்தையும் காப்பற்றவே.   
இயற்கை விதிகளைப் புரிந்துக் கொண்டு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபோது இயற்கை திருப்பி அடிக்கும் என்பதை வயநாட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்.

 

 

You might also like