தமிழில் ‘பேண்டஸி’ படங்கள் வெகு அரிதாகத்தான் வெளிவரும். கடந்த சில ஆண்டுகளில் அந்த வகைமையில் வெளியான படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அப்படியொரு சூழலிலும் தொடர்ந்து தங்களது படைப்புகளில் ‘பேண்டஸி’யை கலக்கத் துடிக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே. அவர்களின் முதன்மையான இடத்தைப் பிடிப்பவர் இயக்குநர் சிம்புதேவன்.
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ பாணியில் அவர் தந்திருக்கும் இன்னொரு புனைவே ‘போட்’.
யோகிபாபு முதன்மை வேடமெற்று நடித்திருக்கும் இப்படத்தில் கொளப்புல்லி லீலா, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன், ஆர்ஜே ஷரா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர்.
‘போட்’ தரும் காட்சியனுபவம் எத்தகையது?
நடுக்கடலுக்குள் 48 மணி நேரம்!
1943ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரை ஒட்டி இந்தியாவின் மீது ஜப்பான் குண்டு வீசப் போவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிற சூழல். அந்த காலகட்டத்தில் ஜப்பானை எதிர்க்க வழி தெரியாமல் தனது பிடியிலுள்ள நாடுகளில் திக்கித் திணறுகிறது பிரிட்டன்.
அப்படிப்பட்ட நாள் ஒன்றில், ஆங்கிலேயப் படை கைது செய்த தனது சகோதரனைத் தேடி வருகிறார் குமரன் (யோகிபாபு). அவர், சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட மீனவர்.
ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் தனது சகோதரரைக் காப்பாற்றும் வகையிலான சிபாரிசுக் கடிதத்தையும் அவர் எடுத்து வருகிறார். அவருடன் பாட்டியும் (கொளப்புல்லி லீலா) வந்திருக்கிறார்.
அந்த கடிதத்தைக் காட்டியபிறகும், ஒரு ஆங்கிலேய அதிகாரி குமரனின் சகோதரரை விடுவிக்க மறுக்கிறார். அந்த நேரத்தில், ஜப்பான் விமானங்கள் அந்தப் பகுதியை நோக்கி வருவதாகச் சொல்கிறார் ஒரு நபர்.
அவ்வளவுதான். அந்தப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள், ஆங்கிலேயப் படையினர் என்று அனைவரும் சிதறி ஓடுகின்றனர்.
அந்த நிலையைக் கண்டதும், ‘உன் தம்பியை அழைச்சுக்கிட்டு ஓடு’ என்கிறார் ஒரு போலீஸ்காரர். உடனே, ‘வா’ என்று தனது சகோதரரை அழைக்கிறார் குமரன். காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டவாறே, அவரும் ஓடி வருகிறார்.

தன்னுடன் வந்த பாட்டியையும் சகோதர்ரையும் அழைத்துக்கொண்டு கரையில் நிறுத்தியிருக்கும் படகுக்கு ஓடுகிறார் குமரன்.
அப்போது, ‘நீ பாட்டியை அழைச்சுக்கிட்டு முன்னாடி போய் ஏறு. நான் மெதுவா வந்துர்றேன்’ என்கிறார் அவரது சகோதரர்.
அதனைக் கேட்டதும், ‘சரி’ என்று முன்னே செல்கிறார் குமரன்.
தப்பிச் செல்லும் கைதிகளைப் பிடிக்கச் சில போலீஸ்காரர்கள் பாய்ந்தோடி வருகின்றனர். அந்த நேரத்தில், மேலும் சிலர் குமரனின் படகில் ஏறுகின்றனர். அவசரத்தில், தனது சகோதரர் ஏறியதைப் பார்க்காமலேயே படகைக் கடலில் செலுத்துகிறார் குமரன்.
சில மீட்டர்கள் சென்றதும், தனது சகோதரரை அழைக்கிறார் குமரன். அவர் இல்லையென்று தெரிந்ததும், படகைக் கரை நோக்கித் திருப்புகிறார். ஆனால், கரையில் இருக்கும் அவரது சகோதரரோ, ‘வர வேண்டாம்’ என்று சைகை செய்கிறார்.
அந்த நேரத்தில், ’அந்தப் படகுல ஒரு தீவிரவாதி மறைஞ்சிருக்கான்’ என்கிறார் கரையில் இருக்கும் போலீஸ்கார்ர் ஒருவர்.
அரைகுறையாக அந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, கடலை நோக்கிப் படகைத் திருப்பிச் செல்கிறார் குமரன்.
அந்தப் படகில் அவரையும் பாட்டியையும் தவிர்த்து கர்ப்பிணிப் பெண் விஜயா (மதுமிதா), பத்து வயதே ஆன அவரது மகன், கேரளத்தைச் சேர்ந்த ராஜா முகமது (ஆர்ஜே ஷரா), மயிலாப்பூரைச் சேர்ந்த நாராயணன் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமி (கௌரி கிஷன்), தேனியைச் சேர்ந்த முத்தையா (எம்.எஸ்.பாஸ்கர்) எனும் முதியவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் (சாம்ஸ்) ஆகியோர் இருக்கின்றனர்.
படகில் ஏறிய சில மணி நேரங்களிலேயே சாதி, மதம் என்கிற பெயரில் அவர்களுக்குள் விவாதம் எழுகிறது. ஒருவர் மீது ஒருவருக்குப் பிரியமும் வெறுப்பும் அதிகமாகிறது.

இந்த நிலையில், நடுக்கடலில் ஒரு படகு கவிழ்ந்து கிடப்பதைப் பார்க்கிறார் குமரன். அந்த விபத்தில் தப்பித்த ஆங்கிலேய அதிகாரியான இர்வின் (ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன்), அந்தப் படகில் ஏறுகிறார்.
வந்த நொடியில் இருந்தே, ‘நான் உங்களை எல்லாம் விட அதிகாரம் படைத்தவன்’ என்கிற தொனி அவரிடத்தில் தென்படுகிறது. நேரம் ஆக ஆக, அது உச்சம் அடைகிறது.
அந்த நேரத்தில், இர்வின் கொண்டுவந்த வயர்லெஸ் ரேடியோ ஒலிக்கிறது. ‘படகில் ஒரு தீவிரவாதி மறைந்திருக்கிறான்’ என்று எதிர்முனையில் இருக்கும் குரல் சொல்கிறது. அதனைக் கேட்டதும், ஒவ்வொருவருக்கும் எதிரே இருக்கும் நபர்கள் தீவிரவாதியாகவே தெரிகின்றனர்.
அந்த உண்மையைத் தான் கண்டறிவதாகக் கூறி, அவர்களை அமைதிப்படுத்துகிறார் முத்தையா.
அப்போதும், ‘நான் சொல்வதைத் தான் இந்த படகில் இருப்பவர்கள் கேட்க வேண்டும்’ என்று அதிகார தோரணையை வெளிப்படுத்துகிறார் இர்வின். அது குமரனை எரிச்சலூட்டுகிறது.
இருவரும் நேருக்கு நேர் மோத, துப்பாக்கியை எடுத்து சுடுகிறார் இர்வின். அதனால் படகில் பொத்தல் விழுந்து கடல் நீர் புகத் தொடங்குகிறது.
அதையடுத்து, மேற்கொண்டு படகைச் செலுத்துவது ஆகாத காரியம் என்றும், மூன்று பேர் படகில் இருந்து வெளியேறினால் மட்டுமே அதனைச் செலுத்த முடியும் என்றும் சொல்கிறார் குமரன். ‘நானும் எனது பாட்டியும் இதில்தான் இருப்போம்’ என்றும் கூறுகிறார்.
அதையடுத்து, மற்றவர்கள் அனைவரும் இணைந்து ‘யாரை படகில் இருந்து வெளியேற்றுவது’ என்று ஆலோசிக்கின்றனர்.
ஒவ்வொருவரும் ஒரு துண்டுச் சீட்டில் இரண்டு பெயர்களை எழுதுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, பாட்டியையும் குமரனையும் வெளியேற்றுவது என்று முடிவெடுக்கப்படுகிறது.
அதன்பிறகு என்னவானது? தீவிரவாதி யார் என்று முத்தையா கண்டறிந்தாரா? அந்த படகில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்ததா? அனைவரும் உயிர் பிழைத்தார்களா என்று சொல்கிறது ‘போட்’ படத்தின் மீதி.
குமரனின் தங்கைக்கு வேறொருவருடன் (ரமேஷ் திலக்) திருமணம் நடக்கவிருப்பதாக, இதில் இன்னொரு கிளைக்கதையும் உண்டு.
அந்த நபரின் நடத்தை சரியில்லை என்று சகோதரர் எழுதிய கடிதம் கண்டதும், உடனடியாகப் படகைக் கரைக்குத் திருப்ப குமரன் விரும்புவது தனியே சொல்லப்பட்டிருக்கும்.

இது தவிர, படகில் ஏறிய ஒவ்வொருவருக்கும் ஒரு முன்கதை உண்டு. அவையனைத்தும் சேர்ந்து, இதனை நல்லதொரு ‘ட்ராமா’ ஆக்குகின்றன.
நடுக்கடலுக்குள் 48 மணி நேரம் சில மனிதர்கள் ஒரு படகில் சுற்றித் திரிவதே ‘போட்’ படத்தின் மையக்கதை.
ஜப்பானியப் படைகள் இந்தியாவின் மீது குண்டு மழை பொழியப்போவதாக வதந்திகள் பரவிய காலகட்டத்தில் அது நிகழ்வதாகக் காட்டியதே இயக்குனர் சிம்புதேவனின் சாமர்த்தியம்.
அந்தக் கதை சொல்லல் அயர்ச்சியூட்டும் வகையில் அமையவில்லை என்பதுவே ‘போட்’ படத்தின் சிறப்பு.
அசத்தும் நடிப்புக் கலைஞர்கள்!
பெரும்பாலான காட்சிகள் ஒரு படகில் நிகழ்கின்றன என்று தெரிந்தபிறகு, அதற்கேற்பப் பல நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் தங்களை மிகச்சரியாக வெளிப்படுத்திக் கொள்வது கடினமான காரியம்.
அதனைத் திறம்பட வெளிக்காட்டி நம்மை அசத்துகின்றனர் இதிலுள்ள நடிப்புக் கலைஞர்கள்.
இதர கமர்ஷியல் படங்களில் பேசுவது போன்று இதிலும் ‘காமெடி கவுண்டர்’ அடித்திருக்கிறார் யோகிபாபு. ஆனால், கதையின் தன்மைக்கு ஏற்ப கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ் மற்றும் ஆர்ஜே ஷரா இடையிலான உரையாடல்கள் ஒரு பட்டிமன்றத்தைப் பார்க்கும் உணர்வை உண்டாக்குகின்றன.
அதேநேரத்தில், காலம்காலமாகப் பொதுவெளியில் வைக்கப்படும் கேள்விகளாகவும் பதில்களாகவும் அவை இருப்பது சிறப்பு.
இவர்கள் தவிர்த்து கொளப்புல்லி லீலா, கௌரி கிஷன், மதுமிதா, அவரது மகனாக வரும் அக்ஷத் தாஸ் மற்றும் இர்வின் ஆக வரும் ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.
இவர்களனைவரையும் மீறி சாம்ஸ் அடிக்கும் ‘கவுண்டர்கள்’ நம்மை வெடிச்சிரிப்பில் ஆழ்த்துகின்றன.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், காட்சிகளில் இடம்பெறும் விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளடக்கத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்.
கதை சொல்லலில் குழப்பம் நிகழா வண்ணம், காட்சிகளை மாற்றி அடுக்காமல் மிகத்தெளிவாகப் படத்தைக் கோர்த்திருக்கிறார் பட்த்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்.
கிப்ரானின் பின்னணி இசை, காட்சியின் தன்மையை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
‘சோக்கா நானும் நிக்கறேன்’ பாடல் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன.

ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத்தும் அவரது குழுவினரும் காட்சிகளில் ‘ஜெர்க்’ தெரியா வண்ணம் தங்களது உழைப்பை வெளிக்காட்டியிருக்கிறது.
தமது படங்களில் வசனத்தைச் சிறப்பாக வடிவமைப்பது இயக்குனர் சிம்புதேவனின் வழக்கம். இதில் ‘பஞ்ச்’ பெரிதாகக் கிடையாது. ஆனால், சாம்ஸ் பேசும் வசனங்கள் அக்குறையைப் போக்குகின்றன.
சாதி, மத வேறுபாடுகள் குறித்த அருவெருக்கத்தக்க கருத்துகள், சமகாலச் சமூகம் பின்பற்றும் மேற்கத்திய வழக்கங்கள் என்று பலவற்றைச் சாடும்விதமாக இதில் வசனங்களை அமைத்திருக்கிறார்.
திரைக்கதையில் அதற்கான தேவையில்லாதபோதும், துருத்தலாகத் தெரியாத வகையில் அவற்றைப் புகுத்தியிருப்பது இயக்குநரின் சமூக அக்கறையை வெளிக்காட்டுகிறது.
‘போட்’ படத்தின் கதை புதியது அல்ல. சில வெளிநாட்டுப் படங்களில் இது மாதிரியான கதையம்சத்தைச் சிலர் கண்டிருக்கலாம்.
ஆனால், தமிழில் இப்படியொரு கதையைப் பெரிய பொருட்செலவு இல்லாமல், அயர்ச்சியூட்டும் சித்தரிப்புகள் இல்லாமல், முடிந்தவரையில் நேர்த்தியாகத் திரையில் காட்டியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

போலவே, திரைக்கதையில் தொய்வு வரும்போதெல்லாம் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்திருக்கும் உத்தியும் சிறப்பானது. அது போன்ற சிறப்புகளே படத்தின் உள்ளடக்கத்தில் நாம் காணும் குறைகளை மீறிக் கொண்டாடத் தூண்டுகிறது.
சில உண்மை நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவில் புனைவினைக் கலந்து, சமகாலச் சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனமாக ‘போட்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். அவரது முந்தைய படங்களைப் பார்த்துச் சிலாகித்தவர்களுக்கு இதில் குறைகள் தென்படாது.
அவற்றில் குறைகள் கண்டவர்களுக்கும் கூட, இப்படத்தில் பெரிதாக எதிர்மறை விமர்சனங்கள் இருக்காது. காரணம், இதில் சிம்புதேவன் குழுவினர் மேற்கொண்டிருக்கும் அபாரமான முயற்சி மட்டுமே..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்