89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட தேர்தல்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.

2-ம் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை (வெள்ளிக் கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 13 மாநிலங்களில் இந்தத் தேர்தல் நடக்கிறது.

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14  இடங்களில் நாளைய தினம் தேர்தல்.

ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (7), அசாம் (5) , பீகார் (5), சட்டீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), ஜம்மு-காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்களிலும் நாளை தேர்தல் நடக்கிறது.

ராகுல்காந்தி – ஹேமமாலினி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் சசி தரூர், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நடிகை ஹேமமாலினி, நடிகர்கள் சுரேஷ்கோபி, அருண்கோவில் ஆகியோர் நாளைய தேர்தலில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

பிரியங்கா ஆவேசம்

ராகுல்காந்தியை ஆதரித்து, அவரது சகோதரி பிரியங்கா, வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ”கார்களில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் செல்லும் பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை – இதனை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்” என தெரிவித்தார்.

‘’ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும் துன்புறுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள் – பல்வேறு ஊழல் வழக்குகளில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெயர் அடிபடுகிறது – ஆனால் அவர் மீது மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என பிரியங்கா குற்றம் சாட்டினார்.

அமேதியில் ராபர்ட் வதேரா போட்டியா?

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதி ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது.

ஆனால் கடந்தத் தேர்தலில் அங்கு போட்டியிட்ட ராகுல், பாஜகவின் ஸ்மிருதி ராணியிடம் தோற்றுப் போனார்.

அந்தத் தொகுதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் போட்டியிட இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ‘அமேதியில் ராபர்ட் வதேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என அந்த தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

’இது, எதிரிகளின் சதி வேலை’ என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

– பி.எம்.எம்.

You might also like