தேர்தல் இல்லை: பாஜகவுக்கு ஒரு எம்.பி.!

‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ எனும் கோஷத்தை ஆரம்பித்த பாஜக, இப்போது, ‘ஒரே வேட்பாளர்.. ஒரே எம்.பி.’ என்ற நடைமுறையை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத்.
அங்கு, மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் மே-7-ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இங்குள்ள சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் தலால் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். காங்கிரஸ் சார்பில் நிலேஷ் மனு செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக சுரேஷ் உள்ளிட்டோர் மனு செய்திருந்தார்.

நிலேஷை முன் மொழிந்தோரின் கையெழுத்துக்களில் முரண்பாடு உள்ளதாகச் சொல்லி, அவர்கள் மனுக்களை, தேர்தல் அதிகாரி நிராகரித்தார். காங்கிரஸ் மாற்று வேட்பாளர்கள் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளில், அங்கு மனு தாக்கல் செய்திருந்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 8 பேரும் தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர்.

இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ், போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

அதாவது தேர்தல் நடத்தாமலேயே பாஜகவுக்கு ஒரு எம்.பி. கிடைத்துவிட்டார். அதுவும் பிரதமர் மாநிலத்தில்.

ஒரு ஓட்டுகூட வாங்காமல் ஜெயித்துள்ள முகேஷ், “எனது வெற்றி, பாஜக, 400 பிளஸ் தொகுதிகளில் வெல்வதற்கான முன்னோட்டம்” என்று பெருமிதப்பட்டுள்ளார்.

ஒரு சின்ன வரலாறு…

போட்டி இன்றி எம்.பி.க்கள் வெற்றி பெறுவது இந்தியாவில் ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. 1951-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 34 பேர் போட்டி இல்லாமல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடைசியாக உத்தரப்பிரதேச மாநிலம் கன்னாஜ் மக்களவைத் தொகுதியில், கடந்த 2012-ம் ஆண்டு, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, முகேஷ் போட்டி இல்லாமல் தேர்வு பட்டிருக்கிறார். பாஜகவைப் பொறுத்தவரை போட்டியில்லாமல், தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் மக்களவை உறுப்பினர் முகேஷ்.

வெற்றி பெற்ற முகேஷுக்கு, அதற்கான சான்றிதழை மாவட்டத் தேர்தல் அலுவலர் சவுராப், நேற்று வழங்கினார்.

குஜராத் மாநில பாஜக தலைவர் பாட்டீல், தனது எக்ஸ் தள பக்கத்தில், “பிரதமர் மோடிக்கு முதல் தாமரையை சூரத் அளித்துள்ளது” என உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

’சூரத் தொகுதியில் பாஜகவின் வெற்றி ‘மேட்ச் பிக்சிங்’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பாஜக கோட்டை

கடந்த 1989-ம் ஆண்டு முதல் சூரத் தொகுதியில் பாஜகவே வெற்றி பெற்று வருகிறது. கடந்தத் தேர்தலில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுமார் ஐந்தரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.

சூரத் மட்டுமல்ல, குஜராத் மாநிலமே பாஜகவின் கோட்டை தான். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக, அந்த மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

– பி.எம்.எம்.

#பாஜக #மோடி #அமித்ஷா #குஜராத் #சூரத்_மக்களவைத்_தொகுதி #முகேஷ்_தலால் #நிலேஷ் #காங்கிரஸ் #சூரத்_தொகுதி #bjp #mukesh_dalal #Surat_Lok_Sabha_constituency #bjp #modi #amithsa #congress #gujarat

You might also like