பெரியாரும் கர்நாடக சங்கீதமும்!

“பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல்” என்ற தலைப்பில் Voice of TN நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காமராசன், இந்தக் கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கூறினார்.

டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகடாமி வழங்கும் சங்கீத கலாநிதி என்கிற பட்டம் தொடர்பில், சாதி ஆதிக்க மனநிலையோடு பார்ப்பன திமிரில் எழும் பேச்சுகள், டி.எம். கிருஷ்ணாவை மட்டுமல்ல, இந்நாட்டில் வசிக்கும் 97 சத பார்ப்பனரல்லாத வெகுமக்களை இழிவு செய்பவை, இதனை எதிர்ப்பது அவசியம் என்பதை விளக்குவதற்காகவும்; “கர்நாடக சங்கீதம்” என்பது பார்ப்பன ஆதிக்கத்தை – சாதிமுறை அமைப்பின் ஆதிக்கத்தைக் காப்பாற்றும் தேசியவாதக் கருவிகளில் ஒன்று என்பதை விளக்குவதற்காகவும் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது என்று கூறினார்.

இதனை அடுத்து, தோழர் மதுர் சத்யா டி.எம். கிருஷ்ணா விருது சர்ச்சை தொடர்ப்பாகச் சமூக ஊடகங்களில் நிலவும் இருவேறு கருத்துப் போக்குகளைச் சுட்டிக் காட்டினார். ஒன்று, இச்சர்ச்சை பார்ப்பனர்களிடையே உள்ள சண்டை; மற்றொன்று, இதன் மூலம் டி.எம். கிருஷ்ணா புதுவிதமாக பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்துகின்றார். இந்தக் கருத்துப் போக்குகளில் உள்ள சிக்கல்களை எடுத்துக்கூறினார்.

பார்ப்பன எதிர்ப்பு மரபின், சாதி ஆதிக்க எதிர்ப்பு மரபின் நோக்கில், டி.எம். கிருஷ்ணா செய்துள்ள கலகத்தின் முக்கியத்துவத்தையும், அதே வேளையில் பண்பாட்டு அரங்குகளில் – இசைக் களத்தில் நிலவும் சாதி ஆதிக்க மனப்பாங்கை எவ்வாறு இன்னும் கூர்மையாக எதிர்த்துப் போராட வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறினார்.

தோழர் பூபாளம் பிரகதீஸ்வரன், வெகுமக்களின் இசை ரசனையை அளவுகோலாகக் கொண்டு, கர்நாடக சங்கீதம் என்று சொல்லப்படுவதற்கும் மக்கள் இசைக்கும் உள்ள வேற்றுமையையும், மக்கள் இசையில் உள்ள உயிரோட்டத்தையும், கர்நாடக சங்கீதத்தில் உள்ள உப்புசப்பற்ற தன்மையையும் விளக்கிக் கூறினார். தோழர் பிரகதீஸ்வரன் உரையைக் கேட்டு அனைவரும் வாய்விட்டு சிரித்து, மகிழ்ந்தனர்.

தோழர் மருதையன் அவர்கள் கர்நாடக சங்கீதம் என்பது பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பார்ப்பன வகுப்பார் செய்த இசைக் களவு, பார்ப்பன சாதி ஆதிக்கக் கருவி, சாதி அமைப்பைப் பாதுகாக்கும் பண்பாட்டுக் கருவிகளில் ஒன்று என்பதை வரலாற்று நோக்கிலும், டி.எம். கிருஷ்ணா எழுதியுள்ள நூல்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார்.

டி.எம். கிருஷ்ணா ஆழ்ந்த தெளிவுடன், கூர்மையான விமர்சனங்களுடன் எழுதியுள்ளதை மறுக்க முடியாமல்தான், இத்தகைய வெற்று பார்ப்பன திமிர் பேச்சுகளைப் பேசி வருகின்றனர் என்பதை எடுத்துக் கூறினார்.

தோழர் மருதையன் அவர்களின் ஆழ்ந்த இசை அறிவையும் அரசியல் உணர்வையும் கண்டு, கருத்தரங்கிற்கு வந்திருந்தோர் வியந்தனர்.

இறுதியாக அரை மணி நேரம், கருத்தரங்கிற்கு வந்திருந்தோர் கேள்விகளும் கருத்துகளும் முன்வைத்து உரையாடினர்.

#பெரியார் #கர்நாடக_சங்கீதம் #இசை_அரசியல் #டி_எம்_கிருஷ்ணா #Voice_of_TN #கர்நாடக_சங்கீதம் #பார்ப்பன_ஆதிக்கம் #சாதி_ஆதிக்கம் #periyar #karnatic_music #tm_krishna #caste

You might also like