சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான தொடர்பு!

‘பைலட் பிரேம்நாத்’ திரைப்படத்தின் ஒருசில காட்சிகளில் நடிப்பதற்காக 1978-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கைக்கு சென்றபோது, ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

அப்போது, அவரிடம் பேட்டி காண்பதற்காக ஊடகவியலாளர்கள் முண்டி அடித்துக் கொண்டு இருந்தனா். அந்த சமயம் இலங்கை வானொலி சார்பாக அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீத் அவர்களும் போயிருக்கிறார்.

இவரை அடையாளம் கண்டு கொண்ட நடிகர்திலகம்… “வாங்கோ கேப்டன் சாம்பசிவம்” என்று சொல்லயிருக்கிறார். 

ஹமீத் அவர்களுக்கு உடம்பெல்லாம் சில்லிட்டுப் போனதாம். ஏனெனில் அவர் தயாரித்து நடித்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் அது. அவருக்கு இன்ப அதிர்ச்சியால், பேச நா எழவில்லையாம்.

இவரது நிலையை புரிந்துகொண்ட நடிகர் திலகம், எழுந்து இவரது தோளில் கையைப்போட்டு அணைத்தவாறே… “இங்கே கடல் காற்று அதிகம் இரைச்சலாயிருக்கு… வாங்க நம்ம அறைக்குச் சென்று இந்தப் பேட்டியை பதிவு செய்யலாம் என்று அழைத்துச் சென்றாராம்.

அப்போது, “முன்பெல்லாம் இலங்கை வானொலி என்றாலே மயில்வாகனன், அவர்களை மட்டுமே நாம் அறிவோம். அதற்குப்பிறகு அப்துல் ஹமீட்.. என்ற உங்களது குரலும் உரையாடல்களும் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன”.. என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம்.

அவருக்கு நன்றி தெரிவித்து ஹமீத் அவர்கள் புறப்படத் தயாராகும் போது… “நில்லுங்கள், இரவு உணவு அனுப்பியிருக்கிறார்கள். என்னோடு சேர்ந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்” என்றாராம் நடிகர் திலகம்.

இவ்வாறு நடிகர் திலகத்தோடு அன்று ஏற்பட்ட நெருக்கமும் பாசமும் காலங்காலமாய் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

முதல் நாள் நடிகர் திலகத்தைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காத பத்திரிகைத் துறையாளர்களில் ஒருவர், குறிப்பாக ஒரு பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக இவ்வாறு எழுதினாராம்.

ஒரு சினிமா நடிகரைப் பேட்டி காண இலங்கை வானொலியே அவர் இருக்குமிடம் தேடிச் சென்றிருக்கிறது.

இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கே அவமானம், என்று எழுதி இருந்தாராம்.

மகிழ்ச்சியோடு இருந்தவனுக்கு, சிறு முள் தைத்தது போல வலித்தது.

அப்போதெல்லாம் பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு மறுப்புச்செய்தி எழுதவோ, வானொலி மூலமே பதில் சொல்லவோ கூடிய சுதந்திரம் ஒலிபரப்பாளர்களுக்கு இருக்கவில்லை. எனினும் இந்த விமர்சனத்தை முறியடிக்க வேண்டுமே என்றொரு வெறி இவனுக்குள் எழுந்தது.

–  அப்துல் ஹமீத் எழுதிய ‘வானொலிகளில் ஒரு வழிப்போக்கன்’ நூலிலிருந்து.

You might also like