காவிரிக் கரையில் நிற்கும் சவுமியா: கரை ஏற்றுமா தர்மபுரி?

காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்.

தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க ‘பசுமைத் தாயகம்’ நடத்தி வந்த சவுமியா அன்புமணி, பாமக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். மாமனார் ராமதாஸ், கணவர் அன்புமணி ஆகியோர் அரசியல் தலைவர்கள் என்றாலும், சவுமியாவுக்கு அரசியலும் தேர்தல் களமும் புதிது.

ஒரு காலத்தில் ‘சந்தன வீரப்பன்’ கோட்டையாக திகழ்ந்த தர்மபுரி பகுதியை பாமகவின் கோட்டை என்றும் சொல்லலாம். தர்மபுரியில் பாமக நான்கு முறை ஜெயித்திருப்பதே அதற்கு சாட்சி.

வென்றோர் விவரம்

1977-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 12 தேர்தல்களில் எந்தெந்த கட்சிகள் வென்றன என்பதை பார்க்கலாம்.

ஆண்டு         —       வேட்பாளர்      —      கட்சி :

1977     வாழப்பாடி ராமமூர்த்தி       காங்கிரஸ்
1980     அர்ஜுனன்               திமுக
1984    தம்பிதுரை                அதிமுக
1989    எம்.ஜி.சேகர்             அதிமுக
1991    கே.வி.தங்கபாலு   காங்கிரஸ்
1996    தீர்த்தராமன்            தமாகா
1998    பாரிமோகன்            பாமக
1999    பு.தா. இளங்கோவன்      பாமக
2004     செந்தில்                             பாமக
2009    தாமரைச்செல்வன்       திமுக
2014    அன்புமணி                        பாமக
2019   செந்தில் குமார்                திமுக

 

நிலம் இருக்கு… நீர் இல்லை…

விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட இந்த தொகுதியில், பருவமழையை நம்பியே சாகுபடி நடைபெறும், மானாவரி நிலங்கள் அதிகம் உள்ளன.

சொந்த நிலம் இருந்தும் நீர் வளம் இல்லாததால் வேறு மாவட்டங்கள், வேறு மாநிலங்களுக்கு இங்குள்ள மக்கள் பிழைப்பு தேடி போகும் சூழல்.

நிறைவேற்ற வேண்டிய நீர்ப்பாசனத் திட்டங்கள் கோரிக்கை வடிவிலேயே உள்ளன. அவற்றை செயல்படுத்தினால், இங்குள்ளோர், வேலைக்காக வெளியூர்களுக்கு அலைந்து திரிய தேவை இல்லை. சொந்த ஊரில் நிரந்தரமாக குடியிருக்கலாம்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலான சிப்காட் தொழிற்பேட்டை திட்டம், ஏட்டளவில் தான் உள்ளது.

இவைதவிர, வேளாண்மை, சுற்றுலா, கட்டமைப்பு, அடிப்படை வசதி உள்ளிட்டவை தொடர்பான பல கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

களத்தில் நான்கு வேட்பாளர்கள்

தர்மபுரி மக்களவைத் தொகுதியில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

பாமக சார்பில் சவுமியா அன்புமணி, திமுக வேட்பாளராக ஆ.மணி, அதிமுக வேட்பாளராக அசோகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி, அபிநயா என்ற பெண் வேட்பாளரை நிறுத்தி உள்ளது.

சவுமியாவுக்கு வாய்ப்பு எப்படி?.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 வாக்குகளை பெற்று வென்றார்.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

அந்தத் தேர்தலில் டிடிவி தினகரனின், அமமுக தனித்துப் போட்டியிட்டு 53 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது.

எனினும் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 6 தொகுதிகளையும் அதிமுக – பாமக கூட்டணி அள்ளியது. ஒரு இடத்திலும் திமுக கூட்டணி ஜெயிக்கவில்லை.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

இந்தத் தொகுதியில் பெரிய அளவில் பலம் இல்லாத பாஜக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது பாமக,

அந்தத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமகவின் அன்புமணி ஜெயித்தார்.

’’இப்போது எங்கள் அணியில் தேமுதிக, மதிமுக இல்லாவிட்டாலும் பாஜக, தினகரனின் அமமுக, ஜான் பாண்டியனின் தமமுக, உள்ளிட்ட கட்சிகள் இருப்பதால், நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்” என்கிறார்கள் பாமகவினர்.

ஆனாலும் அதிமுகவை வெற்றி பெற வைக்க தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ இரவு, பகல் பாராமல் தொகுதி முழுக்கப் பணியாற்றி வருகிறார்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்த தொகுதியில் கணிசமான வாக்குகள் உள்ளன.

தர்மபுரியில் போட்டி கடுமையாக உள்ளது என்பதே கள நிலவரம்.

 – பி.எம்.எம்.

You might also like