தமிழக கோடீஸ்வர வேட்பாளர்கள்!

ஈரோடு வேட்பாளரிடம் ரூ.653 கோடி

முன்பெல்லாம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெருத் தெருவாக ஓட்டுக்கேட்டு வருவார்கள். அவர்களுக்கு முன்னால் வரும் ஆட்டோவில் ‘’உங்களைத்தேடி ஏழைப்பங்காளன் வருகிறார்” என ஒலிப் பெருக்கியில் குரல் ஒலிக்கும்.

அந்த வேட்பாளர் ஏழைப்பங்காளனா, கோடிஸ்வரரா என வாக்காளர்களுக்கு தெரியாது. ஆனால் இப்போது, ”மனுத் தாக்கல் செய்யும் போதே, சொத்து விவரங்களை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதால், நமது வேட்பாளர்களின் சொத்து விவரங்களை, அவர் மனுத் தாக்கல் செய்த அடுத்த வினாடியே தெரிந்துகொள்ள முடிகிறது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நமது வேட்பாளர்களின் சொத்து மதிப்பை பார்ப்போமா?

அதிர வைக்கும் ‘ஆற்றல்’ அசோக்குமார்

தமிழ்நாட்டில் அதிக சொத்து வைத்துள்ள வேட்பாளர் அசோக்குமார். இவர், ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

அவரது மொத்த சொத்து மதிப்பு – 653 கோடி ரூபாய். இவர், திருச்செங்கோடு தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி.யான கே.எஸ்.சவுந்திரத்தின் மகன்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்படும் ‘தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல்’ பள்ளியை நடத்தி வருகிறார். பாஜகவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். இப்போது அதிமுக வேட்பாளர்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு – 152 கோடி ரூபாய்.

அங்கங்கே நிலங்கள் – மனைகள்

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு சுமார் 88 கோடியே 80 லட்சம் ருபாய். இவர் அமைச்சர் துரை முருகனின் மகன்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கண்டிப்பேடு, வண்டறந்தாங்கல், சேர்க்காடு, தாரா படவேடு, ஏலகிரி மலை, கரிகிரி, கீழாச்சூர், சென்னை நீலாங்கரை, ஈரோடு, தாராபுரம், கும்மிடிப்பூண்டி சிப்காட், தி.நகர், திருப்போரூர், அடையாறு என பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள், காலி மனைகள், கட்டிடங்கள் என அசையா சொத்துகள் கதிர் ஆனந்த் பெயரில் உள்ளன.

தமிழிசை – சவுமியா – ராதிகா

பிரதான கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு விவரம்:

தயாநிதி மாறன் (திமுக) – ரூ. 3.65 கோடி.
டி.ஆர்.பாலு (திமுக)  – ரூ. 10.92 கோடி
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) – ரூ. 2.06 கோடி
சவுமியா அன்புமணி (பாமக) – ரூ. 60.02 கோடி
அண்ணாமலை (பாஜக) – ரூ. 1.9 கோடி
கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)  – ரூ. 47.02 கோடி
கனிமொழி (திமுக) – ரூ. 30.08 கோடி
ராதிகா சரத்குமார் (பாஜக) – ரூ . 53.45 கோடி

 

வட இந்தியாவில் இதை விட, நிறைய கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஒரே ஒரு உதாரணம்

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நகுல்நாத் என்பவரின் சொத்து மதிப்பு 697 கோடி ரூபாய்.

இவர், மத்தியபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் மகன்.

நகுல்நாத் குறித்து, இன்னொரு கொசுறு தகவல்.

மத்தியபிரதேசத்தில் மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் அங்குள்ள 28 இடங்களை பாஜக அள்ளியது.

ஆனால், பாஜக அலையில் இருந்து தப்பிய ஒரே ஆள் நகுல்நாத். இப்போது அவர், சிந்த்வாரா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

– பி.எம்.எம்.

#அசோக்குமார் #அதிமுக #பாஜக #திமுக #ஆற்றல்_அசோக்குமார் #Aatral_Ashok_Kumar #டி_எம்_கதிர்_ஆனந்த் #துரை_முருகன் #தயாநிதி_மாறன் #டி_ஆர்_பாலு #கனிமொழி #கார்த்தி_சிதம்பரம் #ராதிகா_சரத்குமார் #தமிழிசை_சவுந்தரராஜன் #சவுமியா_அன்புமணி #tm_kathir_ananth #durai_murugan #dayanithi_maran #tr_balu #kanimozhi #karthi_chithambraram #rathika_sarathkumar #tamilisai_soundarajan #sowmiya_anbumani #mega_millionaire_candidate #கோடீஸ்வர_வேட்பாளர்கள் #நகுல்நாத் #nagulnath

You might also like