காங்கிரசுக்குத் தேவை அரசியல் துணிச்சல்!

நாடும் நடப்பும்:

இப்போது நாடு முழுவதும் மோடி அலை எங்கு பார்த்தாலும் இருப்பது போல தோற்றத்தை வெளிப்படுத்துவதில் பாரதிய ஜனதா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு அந்தக் கட்சி மட்டுமே காரணம் என சொல்ல முடியாது.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் இயலாமை எனவும் சொல்ல முடியாது. அந்தக் கட்சியின் மக்கள் அறிந்த ஒரே தலைவரான ராகுல் காந்தி, உண்மையிலேயே மிகவும் சிரமப்பட்டு யாத்திரைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த யாத்திரை அவர்களே எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரும் கூட்டங்களை ஈர்த்திருக்கிறது. அதைக் கூட அந்தக் கட்சியால் பிரபலப்படுத்த முடியவில்லை.

இத்தனைக்கும் நாட்டை அறுபது வருடங்களுக்கு மேல் ஆண்ட கட்சி. அந்தக் கட்சிக்கு விளம்பரம் செய்யத் தெரியவில்லை எனக் கூறிவிட முடியாது. ஆனாலும் இன்னமும் அந்த யாத்திரை பற்றி இந்தியா முழுதும் கூட கொண்டுசெல்ல முடியவில்லை.

பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை கூட அகில இந்திய கவனத்தைப் பெற்றது. அந்த அளவுக்குக் கூட காங்கிரசுக்கு அதன் தலைவரின் யாத்திரையை பிரபலப்படுத்த முடியவில்லை.

இதற்குக் காரணம் காங்கிரஸ் என்ற கட்சி அதற்கான சுய நம்பிக்கையை இழந்து விட்டது. அடுத்தடுத்து வந்த தோல்விகள் அதனை நிலைகுலைய வைத்துவிட்டன.

மனிதன் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது. அப்படி இழந்தால், எஞ்சியிருப்பதும் மறையத் துவங்கும். இதற்கு காங்கிரஸ் சரியான உதாரணமாக மாறிக் கொண்டிருக்கிறது.

அவர்களது பிரதமருக்கான வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே. உண்மையில் பார்த்தால், நாடு முழுக்கவும் தெரிந்த ஒரே தலைவர் மோடியை எந்த அளவுக்குத் தெரியுமோ, அந்த அளவுக்கு பிரபலமான ஒரே நபர் அவர் மட்டும்தான்.

மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், நிதிஷ் குமார், நவீன் பட்நாயக் (இவர் போட்டியில் இல்லாவிட்டாலும்) சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்ரே போன்ற தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், இவர்களை இந்தியாவிலுள்ள ஊடகங்கள் எவ்வளவுதான் தொடர்ந்து தூக்கிப் பிடித்தாலும், அகில இந்திய அடையாளமோ, ஏற்புடைமையோ நிச்சயம் வராது. இதுவரை வரவும் இல்லை. ஏற்கெனெவே இதெல்லாம் தேவைப்படாத ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே.

ஆனால் காங்கிரசைப் பொறுத்தவரையில், அது தொடர் தோல்விகளை சந்தித்ததால், தாற்காலிகமாக உணவு கிடைக்காத பெரும் காட்டு யானை, அதன் காரணமாக பல பாகன்களிடம் மாட்டிக் கொண்டாற்போல மேற்படி தலைவர்களிடம் காங்கிரஸ் மாட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தியா கூட்டணி உருவானபோது காங்கிரஸ் உற்சாகமாக ஒப்புக் கொண்டதே, எல்லாரும் சேர்ந்து ராகுலை பிரதமருக்கான பொது வேட்பாளராக நிறுத்துவார்கள் என்கிற நியாயமான எதிர்பார்ப்பில்தான்.

ஆனால், நடந்தது முற்றிலும் வேறாக இருந்தது. இதற்கும் காரணம் இல்லாமலில்லை.

மேற்படி தலைவர்கள் ஆளும் மாநிலங்களில், அவர்களது பெயர் அவர்கள் செய்த தவறுகளால், மிக மோசமான முறையில் கெட ஆரம்பித்து இருந்தது.

உதாரணமாக மம்தா பானர்ஜியும், கலவரச் சூழலும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை போன்ற நிலைதான் மேற்கு வங்காளத்தில்.

ஆனால் அவரது பலமும், பலவீனமுமான, எது நடந்தாலும், தொடர்ந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும், தவறுகள் எதனையும் ஒருமுறை கூட ஒத்துக்கொள்ளக் கூடாது என்ற முறையைப் பின்பற்றுவதுதான்.

இந்த அணுகுமுறை இது வரையில் கை கொடுத்து வந்தது உண்மைதான். ஆனால், இந்த முறை ஆட்சிக்கு வந்ததும், இந்த வகையிலான செயல்பாடு கை கொடுக்கவில்லை.

அதற்குக் காரணம் அவர்களை தொந்தரவு செய்தது ஊழல் குற்றச்சாட்டுகளோ, அதிகார துஷ்பிரயோகமோ அல்ல. மாறாக அவர்களது கட்சிக்கார்கள், தேவையில்லாமல் சிறுபான்மையினரின் தவறுகளைத் தடுக்காமல், தட்டிக் கேட்காமல் அதன் விளைவுகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் அந்த சிறுபான்மையினர் வழக்கமாக நம்பும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளை நம்பாமல், மம்தா பானர்ஜிக்கு முழுமையாக வாக்களித்தனர்.

அதற்கு நன்றிக் கடன் போல திரிணாமுல் காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், எந்த அளவுக்கு மதம் சார்ந்த கலவரங்கள், பிரச்சினைகள் இந்துக்களுக்கு எதிராக நடக்கிறதோ, அந்த அளவுக்கு பாரதிய ஜனதா அந்த அதிருப்தியை வாக்குகளாக மாற்றுவதை பல தேர்தல்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

இது மம்தாவிற்கும் தெரியும். அதைவிட காங்கிரசுக்கு இதைப் பற்றி முழுமையாகத் தெரியும். ஆனால் வழக்கமான பழைய காங்கிரசாக இருந்தால், நடுநிலையாகப் பேசுகிறார் போல பேசி, முஸ்லீம்களுக்கு சமாதானத்தையும், இந்துக்களுக்கு ஒரு வித தைரியத்தையும் கொடுக்கும்.

குறைந்த பட்சம் பாதித்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு வேண்டியதை ஓரளவிற்காவது நிவாரணம் செய்து அதன் மூலம் ‘நடுநிலையை’ உணர்த்தும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது போன்ற திறமைசாலிகள் கொண்ட காங்கிரசின் மத்திய செயற்குழு இல்லை. இதற்குக் காரணம், ராகுல்காந்தியின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை.

இது அவர்களது கட்சியின் பிரச்சினை. ஆனால் நாடு முழுதும் மோடிக்கு எதிராக அனைவராலும் அறியப்பட்ட முகம் ராகுலாகத்தான் இருக்க முடியும். இதை காங்கிரசே மறந்து விட்டது. மற்ற கட்சிகள் இதுதான் சமயம் என காங்கிரசை பலவீனப்படுத்துவதற்கு முழு முயற்சி செய்கின்றனர்.

அவர்கள் நாடு முழுமையையும் பார்க்காமல், தங்களது மாநிலத்தில் காங்கிரசை சிறுமைப்படுத்தினால், அதனால் தங்களுக்கான லாபம் என்னவாக இருக்கும் என்றே கணக்குப்போடுகிறார்கள்.

இது அகிலேஷ் யாதவ், மாயாவதி, என ஆரம்பித்து அனைவருக்குமே பொருந்தும்.

ஆனாலும் பாராளுமன்றம் என்பது பிரதமருக்கான, மத்திய அரசுக்கான தேர்தல். அதற்கு நாடு முழுதும் நன்கு அறிமுகமான நபரின் முகம் தேவை.

தங்களது மாநிலங்களில் காங்கிரசை பலவீனப் படுத்துவதில் ஏறக்குறைய வெற்றி கண்டு விட்டதால், அவர்களால், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனாலேயே ராகுல்காந்தி தனிமைப்பட்டு இருக்கிறார். ஆனாலும் கூட அவரது சமீபத்திய நியாய யாத்ரா காங்கிரசே கூட எதிர்பார்க்காத கூட்டத்தை ஈர்த்தது.

அதற்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இடங்களைக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டிருந்த அகிலேஷ் யாதவ், இப்போது இரட்டை இலக்கத்துக்குப் போயிருக்கிறார். மேலும் பல மாநிலங்களில் சூழல் மாறி வருகிறது.

இதை காங்கிரஸ் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், “நாங்கள் நாடு முழுதும் தனியாக நிற்கப் போகிறோம். ராகுல்தான் எங்கள் பிரதமர். நாடு முழுவதும் அறிமுகமான ஒரே தலைவர் எங்கள் கட்சியில்தான் இருக்கிறார்” என அறிவித்து செயல்பட்டால், ஜெயித்தாலும், தோற்றாலும் கௌரவமாவது மிஞ்சும்.

இப்படி அறிவிக்கும்போது, நாடு முழுவதும் உள்ள குழம்பிப்போன பாரம்பரிய காங்கிரஸ் வாக்காளர்கள் உற்சாகம் பெறுவார்கள்.

நிச்சயமாக காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை சந்திக்காது.

இப்போதைக்கு மோடி மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் அதற்கு சரியான, பலமான எதிர்க்கட்சியாகவாவது காங்கிரஸ் வர வேண்டுமானால் இந்த துணிச்சல் தேவை! இருக்குமா என்பது சந்தேகம்தான். இருந்தால் உண்மையிலேயே மிக நல்ல ஒரு தேர்தல் போட்டியைக் காணலாம். அல்லது இப்போது இருப்பது போல மிக அதிகமான ஒரு சார்பு தேர்தலாகவே இருக்கும்.

– தனஞ்செயன்.

You might also like