மேலிருந்து கீழாக, சீராகப் பாவும் அதிகாரம்!

ஏப்ரல் 24 – தேசிய உள்ளாட்சி தினம்

கிராமங்களும் சிறுநகரங்களும் பெருநகரங்களும் விரவிக் காணப்படும் இந்தியா போன்ற வளர்ச்சியடையும் நாடுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் என்பது மிக அவசியம்.

மேலிருந்து கீழாக, சீராகப் பாவும் அதிகாரத்தின் வழியே வளர்ச்சிக்கான செயல்பாடுகளை எல்லா நிலைகளிலும் ஒரேமாதிரியாகச் செயல்படுத்த முடியும்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சியின் அடிப்படையை வைத்துக் கணக்கிடப்பட அது வகை செய்யும். அதன் வழியே, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சுதந்திரமடைந்த காலகட்டத்தில் சாதி, மதம், இனம் உள்ளிட்ட பல்வேறு

வேற்றுமைகளால் பிளவுண்டு கிடந்த இந்தியச் சமூகத்தைத் தலையெடுக்க வைக்க, அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவது அவசியம் என்று அன்றைய அரசியல் தலைவர்களும், சமூகவியல் நிபுணர்களும் கருதினார்கள்.

பொருளாதார, சமூக அடிப்படையில் நாம் இன்று அடைந்திருக்கும் வாழ்க்கை நிலைக்கு, இந்தச் சிந்தனைகளும் முன்னெடுப்புகளுமே முக்கியக் காரணம்.

ஒரு நாட்டின் ஆன்மா!

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றார் மகாத்மா காந்தி.

கிராமங்களில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

தொலைதொடர்பு என்பது எட்டாக்கனியாக இருந்த அந்நாட்களிலேயே, அவரது விருப்பத்தைச் செயல்படுத்தப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதிகாரம் என்பது இந்தியாவின் கடைக்கோடி வரை பரவலாக்கப்பட வேண்டுமென்ற சிந்தனை பரப்பப்பட்டது.

அதன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகள் குறித்து வரையறுக்கும்விதமாகப் பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் 1957ஆம் ஆண்டு குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி, ஜில்லா பரிஷத் ஆகிய மூன்று அடுக்குகள் கொண்டு கிராமப்புறங்களில் உள்ளாட்சி அமைப்பை அமைக்கலாம் என்றது அக்குழு.

அதன்பிறகு அசோக் மேத்தா குழு, ஜீ.கே.வி.ராவ் குழு, எல்.எம்.சிங்வி குழு ஆகியன பல்வேறு காலகட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தன.

1993-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அதிகாரத்தை வழங்கும் 73வது திருத்தச் சட்டம் 1992 நிறைவேற்றப்பட்டது.

அந்த நாளைத்தான், நாம் ஒவ்வொரு ஆண்டும் ‘தேசிய பஞ்சாயத்துராஜ் தினம்’ அல்லது ‘தேசிய உள்ளாட்சி தினமாக’க் கொண்டாடி வருகிறோம்.

அதிகாரப் பரவல்!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவதன் மூலமாகப் பெருமளவில் வளர்ச்சி செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

அந்த நம்பிக்கையுடன், நம் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதையும், அவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதையும் அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

ஒரு வலுவான ஜனநாயகத்தைக் கட்டமைக்க, உள்ளூர் மக்கள் அதிகாரம் பெற வழி வகுப்பது சிறந்த பலனைத் தரும்.

குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் தொடங்கி கழிப்பிட வசதிகள், சுகாதாரப் பராமரிப்பு, ஆரோக்கியமான உடல்நலம், சிறப்பான வாழ்வாதார வசதிகள், உள்ளூர் தொழில் முன்னேற்றம் உட்படப் பலவற்றைச் செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக இருந்தாக வேண்டும்.

இன்று நாம் அடைந்திருக்கும் நிலை என்னவென்பதை அளவிட்டாலே, அவற்றில் பெரும்பாலானவை இல்லாத முந்தைய காலம் குறித்த சித்திரம் நம் மனதில் பரவும். அதன் வழியே உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் எத்தகையது என்று தெரிய வரும்.

இன்று கிராமப்புறப் பகுதிகள் பல கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்திருக்கின்றன. வாகனங்கள் பெருகியிருக்கின்றன.

நெடுஞ்சாலைகளும் மாவட்டச் சாலைகளும் நல்லதொரு பயணத்தைத் தருகின்றன.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து எளிதாகியிருக்கிறது. ஆனாலும் ஆரோக்கியம் சார்ந்த, கழிவு மேலாண்மை சார்ந்த பல்வேறு பிரசனைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

பல ஊர்களில் கழிவு நீர் மேலாண்மைக்கு என்று தனியாகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. கால்வாய், ஓடை போன்ற நீர்நிலைகளில் சாக்கடைகள் கலப்பது கண்கூடு.

மழை நீரைத் தேக்கி வைப்பதற்கான திட்டங்களும் மிக அரிதாகவே முன்னெடுக்கப்படுகின்றன. வீடுகளின் பெருக்கத்தால் விளைநிலங்களும் அவற்றை ஒட்டியுள்ள நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.

தொழிற்சாலைகளுக்கான அனுமதிகளைப் பெறுவதில் இருக்கும் பிரச்சனைகளைத் தனியாகக் குறிப்பிடலாம் எனும் நிலை.

மேற்சொன்னவற்றைச் சீர் செய்தால் மட்டுமே, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் இல்லாமல் கிராமங்களின் முன்னேற்றம் அமையும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் கூட, இது போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இது நாடு முழுக்கவிருக்கும் பிரச்சனை என்பதால், உள்ளாட்சி அமைப்புகளைத் தற்கால மாற்றங்களுக்கேற்ப இன்னும் நவீனப்படுத்த வேண்டும்.

அவற்றின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதன் மூலமாக, நம் சுற்றத்தைச் சீர்திருத்தம் செய்வதில் அனைவரும் கைகோர்த்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும்.

உள்ளாட்சி தினம்!

தமிழ்நாட்டில் நவம்பர் 1-ம் தேதியன்று ‘உள்ளாட்சி தினம்’ கொண்டாடப்படுகிறது.

அந்த நாள் உட்பட ஆண்டில் ஆறு நாட்கள் கட்டாயமாகக் கிராம சபை, நகர சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்பதைப் பின்பற்றி வருகிறது மாநில அரசு.

அது போலவே, ‘தேசிய உள்ளாட்சி தினம்’ அன்று உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதங்களை ஏற்படுத்த வேண்டியது முக்கியம்.

பருவநிலை மாற்றங்களும், கிராமத்தில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் மக்களின் அதீத எண்ணிக்கையும், நாடு முழுவதும் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அடுத்தகட்ட பாய்ச்சலை வலியுறுத்துகின்றன.

அவற்றை முன்னெடுப்பதன் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளை வலுவுடன் தொடரச் செய்வோம். அதிகாரப் பரவலின் அடுத்த நிலை நோக்கி நகர்வோம்!

– மாபா

You might also like