எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தொழிலில் மட்டுமே போட்டி!

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சிறு வயது முதலே அண்ணன் – தம்பியாக வளர்ந்தவர்கள்தான். இருவருமே பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு வந்தவர்கள்.

நாடகங்களில் நடிக்கும்போது பல நாட்கள் எம்.ஜி.ஆரின் வீட்டில்தான் சிவாஜி சாப்பிடுவார். அதேபோல், எம்.ஜி.ஆரும் சிவாஜியின் வீட்டிற்கு சென்று சாப்பிடுவார்.

சிவாஜி ‘பராசக்தி’ எனும் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து பிரபலமானார். எம்.ஜி.ஆரோ 10 வருடங்கள் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த பின்னரே ‘ராஜகுமாரி’ படத்தில் ஹீரோவாக நடித்தார்.

நல்ல கதையம்சம் கொண்ட செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் படங்களில் சிவாஜி நடித்தார்.

எம்.ஜி.ஆரோ வாள் சண்டை, கத்திச் சண்டை, குதிரை ஓட்டுவது என ஆக்‌ஷன் சரித்திரக் கதைகளில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

சினிமாவில் போட்டி நடிகராக இருந்தாலும் நிஜவாழ்வில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நல்ல நட்புடன் பழகி வந்தனர்.

ஆனால், அவர்கள் இருவரையும் அரசியல் எனும் சக்தி பிரித்தது. எம்.ஜி.ஆர் திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவை ஆதரித்து அரசியல் மேடைகளில் பேசி வந்தார்.

சிவாஜியோ காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்து திமுகவை விமர்சனம் செய்து வந்தார். இதனால் எம்.ஜி.ஆரையும் விமர்சிக்கும் சூழ்நிலை சிவாஜிக்கு வந்தது.

சில மேடைகளில் எம்.ஜி.ஆரை விமர்சித்து சிவாஜி பேசியிருக்கிறார்.

ஒருமுறை ”கத்திச்சண்டை போடுவது மட்டும்தான் நடிப்பா?” என சிவாஜி கேட்க, எம்.ஜி.ஆர் “கத்திக் கத்தி பேசுவதுதான் நடிப்பா?” என பதிலடி கொடுத்தார்.

அதேபோல் ஒரு மேடையில் பேசிய சிவாஜி ”அண்ணனுக்கு நான் இரண்டு சவால்களை விடுகிறேன்.

நடிப்பில் என்னோடு அவர் போட்டி போட வேண்டும். அதேபோல், சண்டையிலும் என்னோடு போட்டு போட எம்.ஜி.ஆர் தயாரா?” என சவால் விடுத்தார்.

அதன்பின் ஒரு மேடையில் பேசிய எம்.ஜி.ஆர், “தம்பி கணேசன் எனக்கு இரண்டு சவால்களை விட்டிருக்கிறார். எல்லோருக்கும் தெரியும். நடிப்பில் அவரின் பாணி வேறு. என் பாணி வேறு. எனவே, அவரின் முதல் சவாலில் அர்த்தமே இல்லை.

இரண்டாவது அவரோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியுமா? என கேட்டிருக்கிறார்.

“ஐயோ பாவம்” எனக் கூறி எம்.ஜி.ஆர் சிறு இடைவெளி விட அங்கிருந்த எல்லோரும் கைத்தட்டி கூச்சலிட்டனர்.

ஏனெனில், எம்.ஜி.ஆர் முறையாக சண்டை பயின்றவர். மல்யுத்தம், கத்தி சண்டை, வாள் சண்டைகளை வேகமாக செய்யும் திறன் கொண்டவர்.

அதனால்தான் ஆக்‌ஷன் ஹீரோவாக அவர் உருவானார். இது ரசிகர்களுக்கும் தெரியும். அதனால்தான், சிவாஜி விட்ட சவால் எம்.ஜி.ஆர் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like