சக்சஸ் ஸ்டோரி: 5
திருவள்ளூருக்கு அருகிலுள்ள தண்ணீர்க்குளம் கிராமத்தில் பத்து ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்கிறார் குமார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலமடை.
மதுரையில் பிஎஸ்சி படித்தார். பிறகு ஏஸி மெக்கானிக் டிப்ளமோ முடித்துவிட்டு, மலேசியாவில் ஆறு ஆண்டுகள் வேலைபார்த்தார்.
சென்னைக்குத் திரும்பிய குமார், எலக்ட்ரிக்கல் ஒப்பந்தப் பணிகளில் ஆர்வம் காட்டினார்.
இயற்கை விவசாயம் பக்கம் திரும்பிய தருணம் பற்றி பேசிய குமார், “தமிழகம் முழுவதும் 240 செல்போன் டவர்களை அமைத்தோம். சென்னை விமான நிலையத்திலும் சில வேலைகள் செய்தோம்.
மலேசியாவிலிருந்து திரும்பும்போது யாரிடமும் போய் வேலை செய்யக்கூடாது. சொந்த தொழில் செய்யவேண்டும் என நினைத்தேன்.
தூத்துக்குடியில் இருந்துகொண்டு நியூட்ரிசன் அண்ட் வெல்னஸ் துறையில் ஈடுபட்டேன்.
என் நண்பர் ஒருவர் ஆட்டுப் பண்ணை, கோழி வளர்ப்பு, தோட்டக்கலை என ஆர்வமாக இருந்தார்.
பத்து ஏக்கர் நிலம் குத்தகைக்கு வருகிறது, நாம் இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வலியுறுத்தினார்.
ஒருவழியாக முடிவெடுத்து கொய்யா சாகுபடி தொடங்கும்போது கொரோனா பரவல் தொடங்கிவிட்டது.
வேறு வழியில்லாமல் பண்ணையிலேயே தங்கவேண்டியிருந்தது. ஊரடங்குக் காலத்தில் நிலத்தைப் பண்படுத்தி, செடிகளை நட்டுப் பராமரித்தோம்.
பொதுவாக விவசாயத்தில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். இயற்கை விவசாயத்தில் தீர்க்கமுடிந்த ஆனால் தீர்க்கமுடியாத சிக்கல்கள் உள்ளன. எங்களுக்கு சந்தைப்படுத்தலில் பிரச்னைகள் இருந்தன. அதுதான் மிகப்பெரிய தடை.
விளைபொருட்களை நாமே நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தோம்.
கொரோனா காலத்தில் விற்பனையில் சிரமம் ஏற்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதை சரிசெய்தோம்.
வழக்கமாக பத்து மாதங்களிலேயே கொய்யா காய்க்கத் தொடங்கிவிடும். செடி நன்றாக வளர்வதற்காக பூ, பிஞ்சுகளை கிள்ளிவிட்டோம். ஓர் ஆண்டுக்குப் பிறகே அறுவடை செய்ய ஆரம்பித்தோம்.
முதல் ஆண்டில் ஊரடங்கு. எதையும் விற்கமுடியவில்லை. முதல் விளைச்சலில் 30 டன் பழங்கள் வீணாகிப்போயின.
கொய்யாவை அடர் நடவு முறையில் வைத்திருப்பதால் காய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். நாங்கள் 16 ஆயிரம் செடிகள் வைத்துள்ளோம். ஆண்டுக்கு 35 டன் கொய்யா கிடைக்கும்.
ஆடு, கோழிகள், காய்கறி சாகுபடி, காளான் வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணையாக வளர்த்துவருகிறோம்.
இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்துவதால், பழங்கள் சுவையாக கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களின் ஆனந்தம்தான் எங்களுக்கான உத்வேகம்.
வருமானத்தைப் பெருக்கும் வழிகள் பற்றி திட்டமிட்டுவருகிறோம். கொய்யா பழங்களில் இருந்து ஜாம், பல்பொடி, புரூட் ரோல் உள்பட பல மதிப்புக்கூட்டுப் பொருட்களை உருவாக்க முயற்சி செய்துவருகிறோம்” என்றார்.
எஸ். சங்கமி