வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!

முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால், பெரும் வலிமை பெற்றிருந்தார். அவர் உருகித் தியானித்தால், கடவுளே நேரில் வந்து நிற்குமளவு சக்தி படைத்தவர்.

ஆற்றங்கரையோரம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவர்மேல் சுற்றுப்பட்டு கிராம மக்கள் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். சாமியின் வரவால், கிராமமே செழிப்பாக இருக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை.

ஒருநாள், அவர் நித்திரையில் இருந்தபோது, ஆசிரமக் கதவு தடதடவென தட்டப்பட்டது. நித்திரை கலைந்த கோபத்தில் கதவைத் திறந்தவர், ஒரு மாடு மேய்ப்பவன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார்.

“என்ன சங்கதி?” என்றார்.

“சாமீ ஆத்துல வெள்ளம் வருதுங்க! அதான் தகவல் சொல்லலாம்னு வந்தேன்!” என்றான்.

கோபத்தில் இருந்த சாமி, “அதையேன் என்னிடம் சொல்கிறாய். உனக்குப் பயமாக இருந்தால், ஓடி ஒளிந்து தப்பித்துக் கொள்” என்று சொன்னபடி கதவைச் சாத்திவிட்டு நித்திரையைத் தொடர்ந்தார்.

சிறிது நேரத்தில் படுக்கை ஈரமானது. கண்ணைத் திறந்த துறவி, ஆசிரமத்தின் நீர்புகுந்திருப்பதைக் கண்ணுற்று எழுந்து உட்கார்ந்தார் நீரின் வேகம் அதிகரித்தது.

நீரின் வேகத்தில் ஆசிரமத்தின் மண் சுவர்கள் ஆட்டம் கண்டு விழ ஆரம்பித்தன. எழுந்து நின்ற துறவியின் மார்பளவு நீர் சூழ்ந்தது. இறைவனை எண்ணித் தவம் செய்யலானார்.

அப்போது, பதற்றமான குரலில் அவரை அழைத்தபடி வந்தாள் ஒரு படகோட்டி “சாமி சீக்கிரம் எறிக்கங்க அணைக்கட்டு உடைஞ்சிடுச்சாம். ஊர்ல ஒருத்தரும் தப்பிக்க முடியாதுன்ற நிலை நீங்க எங்களுக்கு முக்கியம் ஏறிக்கங்க சாமி தப்பிக்கடலாம்” என்றான்

அற்பப் பதராக அவனைப் பார்த்த துறவி, “நீ யாரடா என்னைத் தப்பிக்க வைப்பதற்கு! கடவுளின் அருள் பெற்றவன் நான் என்னைக் காக்க ஆண்டவன் இருக்கிறான்!” என்றபடி தியானத்தைத் தொடர்ந்தார்.

கழுத்தைத் தாண்டிய நீர் மூச்சை முடக்கத் தொடங்கியது. அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டு தியானத்தைத் தொடர்ந்தார்.

காதருகில் ராட்சத கொசுவின் ரீங்காரம் கேட்டது. கண்விழித்துப் பார்த்தார் ஒரு கயிறு தொங்கியது கயிற்றின் மறுமுனையை அண்ணாந்து பார்த்தார்.

ஒரு ஹெலிகாப்டர், ராணுவ உதவியாளர்கள்.. “கமான் கயிறைப் பிடிச்சு மேலே வாங்க” என்றார்கள் ராணுவ வீரர்கள்.

கயிறைத் தள்ளிவிட்டு கடவுளைத் தியானிக்கத் தொடங்கினார். வெள்ளம் மேலும் அதிகரித்து, துறவியைக் கபளீகரம் செய்தது.

அவரது ஆன்மா மேலுலகம் சென்றபோது, அவர் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டார்.

“எங்கேய்யா அந்தக் கடவுள் அவனை எத்தனை வருஷம் தியானிச்சிருப்பேன். நன்றி கெட்ட கடவுள்.

கடைசி நிமிடத்தில் தியானித்தும் காட்சி தந்து என்னைக் காப்பாற்றாத அவனெல்லாம் நிஜமாவே கடவுள்தானா?

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி நான்கு வார்த்தை கேட்கணும். எங்கேய்யா அந்தாளு” என்று ஏக வசனத்தில் கொந்தளித்தார்.

எதிர்ப்பட்டார் கடவுள் வழக்கமாக ஒரு கும்பிடு போடும் துறவி, இம்முறை வணங்கவில்லை.

மாறாக, “அதான் உயிரை எடுத்துட்டியே! ஏமாத்தி கழுத்தறுத்திட்டியே” என்றார் கோபமாக.

“பக்தா! நான் உனக்கு உதவியதை மறந்து நீ இப்படி ஏசலாகாது” என்றார்.

“என்னத்த உதவியிருந்தா. நாம் ஏன் இங்கே நின்னு பேசறோம்..? என்றார் துறவி.

“என்ன பக்தா இப்படிக் கூறிவிட்டாய்.. மாடு மேய்ப்பவன் உன்னை எச்சரித்தானே! அவன் நான் அனுப்பியவனே! படகே இல்லாத ஊரில் ஒரு படகோட்டி வந்ததெப்படி… அவனும் எனது தூதனே!

அதையெல்லாம் விடு மரத்தில் பறவை போல ஒண்டியிருந்த உன்னை; சரியாக அடையாளம் கண்டு கயிறு வீசியதே ஒரு ஹெலிகாப்டர்! அது உனக்காக மட்டுமே அனுப்பப்பட்ட கடைசி உதவி.

நான்தான் உனக்காக அனுப்பி வைத்தேன். கடவுள் மானிடர்களுக்காக எப்போதும் மேலோக காஸ்ட்யூமிலேயே வரமாட்டார். சகமனிதர்கள் மூலம்தான் வருவார்.

வாய்ப்பு தருவார். அதைப் புரிந்து கொள்ளாத நீ எப்படி முக்காலமும் உணர்ந்த துறவி என்று பெயரெடுத்தாயோ.?” என்று ஏளனமாகக் கேட்டார். நொந்து நூலான துறவி, கடவுளின் காலைப் பிடித்துக் கதறினார்.

கதையிலிருந்து வெளியே வருவோம். வாய்ப்புகளும் கடவுள் போலத்தான். பொற்காசுகள் கூரையிலிருந்து கொட்டாது.

வாயில் கதவைப் புதிய வாய்ப்புகளைத் தரும் மனிதர்கள் மூலம்தான் தட்டும். அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு புதிய வாய்ப்பையும் உடனடியாக நிராகரிக்காமல் ஆழ்ந்து சிந்தித்துப் பிறகு ஏற்றுக் கொள்வது பற்றித் தீர்மானியுங்கள்.

ஒரு செல்வந்தரைப் பொருத்தவரை, கதவைத் தட்டும் ஒவ்வொருவரின் முகமும் ஒரு பிளாங்க் செக் போலவே இருக்கும்.

இதில் எவ்வளவு தொகை எழுதலாம் என்பதே அவரது சிந்தனையாக இருக்கும். அதனால்தான் அவரிடம் செல்வம் சேர்கிறது என்பதை உணருங்கள்.

  • ராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை, ஒரு விதை’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி!

https://ramkumarsingaram.com

You might also like