வள்ளலாரை வாசிக்க வேண்டிய தருணம் இது!

கவிஞர் யுகபாரதியின் பதிவு

நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், வள்ளலாரின் ’இது நல்ல தருணம்’ பாடலைப் புதுவிதமாகப் பாடிக் காண்பித்தார்.

அப்பதிகத்திலுள்ள ’மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது / வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது’ என்கிற வரிகளை இசைக்கேற்ப அவர் அழகுபடுத்தியிருந்த நுட்பம் வியக்க வைத்தது.

அதேபோல அடுத்து வரக்கூடிய ’கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது / கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது / குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று / குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று / வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது / விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது’ என்பனவும் அருட்பாவின் தெளிவினைத் தெரிவித்தது.

திரைப்பாடல்களைக் கடந்தும் இப்படியான பாடல்களை மக்கள் மத்தியில் பரவச் செய்ய அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.

குறிப்பாக, வள்ளலாரின் அருள் வார்த்தைகளை பரவலாக்க ’இதுநல்ல தருணம்’ என்றே தோன்றிற்று. யாப்பில் மட்டுமல்லாது உரைநடையிலும் வள்ளலார் கொண்டிருந்த தனித்துவத்தை ’மனுமுறை கண்ட வாசகம்’ மூலம் அறியலாம்.

அதில் அவர் மனுநீதிச் சோழனின் புலம்பலாகச் சிலவற்றை அடுக்கியிருப்பார்.

’நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ? / வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ? / தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ? / கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?’ என்று தொடங்கி வரிசையாக பலவற்றைப் பட்டியலிட்டிருப்பார்.

ஓர் அரசன் தன் நிலையிலிருந்து தாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றை ஒன்றுவிடாமல் சிந்தித்தவர் வள்ளலார் மட்டுமே என்பது மிகையில்லை.

அவர் காலத்தில் கற்பும் இன்னபிற கருத்தாக்கங்களும் எப்படிப் பார்க்கப்பட்டன என்பதையும் அவ்வரிகளில் இருந்து ஊகிக்கலாம்.

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ? /குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ? / ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ? /தருமம் பாராது தண்டம் செய்தேனோ? / மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ? /உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ? /களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ? / பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ? /

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?/ வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ? /வேலையாட்களுக்குக் கூலி குறைத்தேனோ? / பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?’ என்றெல்லாம் வருகின்றன.

தற்போதைய அரசியல் சூழலில் அதிகாரத்திலும் பதவியிலும் இருப்பவர்கள் என்னென்ன செய்துவருகிறார்கள் என்பதை அவ்வரிகளால் கணிக்கலாம். ஒருமுறைக்குப் பலமுறை மனுமுறை கண்ட வாசகத்தை வாசிக்கவேண்டிய தருணம் இது.

You might also like