செந்தூரம் ஜெகதீஸ் குறிப்புகள்
சென்னையில் பழைய புத்தகங்களுக்கு பேர்போனது மூர் மார்க்கெட். பழைய மூர் மார்க்கெட் புத்தகங்களின் சொர்க்கமாக இருந்திருக்கிறது.
தற்போது அங்கு சென்று வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஸ்.
காலையில் விக்கியை அழைத்து வர சென்ட்ரல் வரை போனேன். அரை மணி நேரம் இருந்தது. மூர் மார்க்கெட் புத்தகக் கடைகளுக்கு போய் விட்டேன்.
காலை மணி 11. பலர் இன்னும் கடைகளைத் திறக்கவே இல்லை. வெளியே கண்ணில் பட்ட முதல் கடையில் கடைக்காரர் தெரிந்தவர்தான்.
என் வாசிப்பு எது என்று நன்றாக தெரிந்து சார் பத்து புத்தகங்கள் வந்து இருக்கு. பாருங்கள் என்று போட்டார்.
எல்லாம் கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்கள் வெளியிட்ட பருத்த வால்யூம் தொகுப்புகள்.

உளவியல் மன அழுத்தம் மனப்பிறழ்வு மனோபாவம் சார்ந்த சைக்காலஜி நூல்கள்.
ஆலிவர் சாக்ஸ் மார்சல் பிரௌஸ்ட் போன்ற இலக்கிய ஆளுமைகள் மூலமாக இது போன்ற நூல்களை வாசிப்பதே இன்பம்.
மருத்துவ மனநல ஆய்வுகள் புரியாது தவிர அவை ஏட்டுச் சுரைக்காய் போல பயன்படாது என்று தயக்கத்துடன் வைத்து விட்டேன்.
விலையும் அதிகமாக இருக்கும். பாதி விலை என்றாலும் பல ஆயிரம் ஆகும். ஆனால் விட்டு வைக்க மனமில்லாமல் விட்டு விட்டேன்.
இவற்றைப் படிக்கவும் புரிந்துக் கொண்டு இலக்கியமாகவும் மாற்ற முடியும் எனில் எவ்வளவு லாபம் தமிழுக்கு.
என்னைப் போல தகுதி படைத்த இலக்கிய ஆர்வலனுக்கு இவை எட்டாத கனியாகி ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று எண்ண வைத்து விடுகின்றன.
எளிய அறிமுகமாக இருந்த ஒரு சிறிய புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். உள்ளே போனால் பல நல்ல நூல்கள் தென்பட்டன.
அதில் Vintage complete fairy tales தொகுப்பும் மோசார்ட் பற்றிய வாழ்க்கை வரலாறு நூலும் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுத்தி விட்டன. விக்கி அழைத்ததால் திரும்பி விட்டேன். மீண்டும் நாளை ஒரு ரவுண்டு போக வேண்டும்.