ஜப்பானின் சாமுராய் வீரர்கள் யார்?

தம்முயிர் மண்ணுக்கு ஈயும் தனிப்பெரும் ஈகம் என்ற தலைப்பில் பேஸ்புக் பக்கத்தில் விரிவாக சமுராய் வீரர்களின் தீரம் பற்றி எழுதியுள்ளார் எழுத்தாளர் மோகனரூபன்.

ஜப்பானில் ஒருகாலத்தில் சாமுராய் வீரர்கள் இருந்தார்கள். எடுத்த சபதத்தை முடிக்கத் தவறினால் கத்தியால் மார்பைப் பிளந்து ஹராகிரி செய்து அவர்கள் மடிந்து போவார்கள்.

18-ம் நூற்றாண்டிலே வாழ்ந்த சாமுராய் வீரர்கள் தொடர்பான கதைகள் அடங்கிய புத்தகத்தின் பெயர் ஹகாகுரே.

இரண்டாம் உலகப்போர் மூண்டதும் ஜப்பான் மன்னர் ஹிரோஹிடோ, அதிக அளவிலே இந்த புத்தகத்தை அச்சடித்து ஒவ்வொரு ஜப்பானிய வீரனும் அதை கையோடு வைத்திருக்க உத்தரவிட்டார்.

ஜப்பானிய வீரர்களுக்கு மிகப்பெரிய உளத்தூண்டுதலை உருவாக்கிய புத்தகம் அது.

ஜப்பான் மொழியில் தற்கொலைத் தாக்குதலுக்கு கமிகஸே (கடவுளின் காற்று அல்லது தெய்வீகக் காற்று) என்று பெயர்.

பசிபிக் கடலில் ஹவாய் தீவில் இருந்த பெர்ல் துறைமுகம் மீது, 1941ஆம் ஆண்டு, ஜப்பான் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்க கடற்படையின் முதல் கடல் விமானமான யு.எஸ்.எஸ். கர்டிஸ் மீது ஜப்பானியர்கள் ஒரு தற்கொலைத் தாக்குதலை முயற்சித்தார்கள்.

கியார்யு அல்லது கோர்யோ (கடல் டிராகன்) என்று அழைக்கப்படுகிற குட்டி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு டார்பிடோ ஏவப்பட்டது. அந்த டார்பிடோவுக்குள் ஒரு ஜப்பானிய வீரர் இருந்தார்(!)

டார்பிடோவை கடல்விமானத்தை நோக்கி அவர் அழகாக வழிநடத்தினார். ஆனாலும் அவரது குறிதவறிவிட்டது. அவர் ஈகமானார்.

அதன்பிறகு, டைப் 93 என்கிற 30 அடி நீளம், 2 அடி குறுக்களவு கொண்ட டார்பிடோக்களை ஜப்பான் உருவாக்க ஆரம்பித்தது. எடை 490 கிலோ. தாக்குதல் தொலைவு 22,000 மீட்டர். வேகம் மணிக்கு 59 மைல் அல்லது 52 நாட்.

இந்த டார்பிடோவுக்குள் ஜப்பான் நாட்டு தற்கொலைப்படை வீரர் ஒருவர் உடலை பிதுக்கி உள்ளே நுழைந்து கொள்வார்.

அது ஒருவழிப்பாதைதான். உள்ளே போனால் திரும்ப வெளியே வர முடியாது. உள்ளே மூச்சு திணறும். அது கொஞ்ச நேரத்துக்குத்தான். இலக்கைத்தாக்கி சிதைத்தபிறகு அவரது மூச்சு, கடல்மீது காற்றோடு காற்றாகக் கலந்துவிடும்.

அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு எதிராக ஜப்பான் பயன்படுத்திய இன்னொரு வகை டார்பிடோவின் பெயர் கைத்தான். மீண்ட சொர்க்கம் என்பது இதற்கு அர்த்தம்.

இதுபோக, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக சின்யோஸ் (கடல்குலுக்கி) என்கிற அதிவேக தற்கொலைப் படகுகளையும் ஜப்பான் பயன்படுத்தியது.

மற்றொருபுறம், ஃபுக்குர்யு என்கிற ஜப்பானிய முக்குளிப்பு வீரர்கள், கடலுக்கு அடியிலே நீர்மூழ்கி உடையுடன் நீந்தி வந்து, எதிரி கப்பல்களுக்கு அடியில் குண்டுவைத்து தகர்த்தனர். யு.எஸ்.எஸ். மிசௌரி போர்க்கப்பல் இப்படித்தான் கண்டம் ஆனது.

கடலில் மட்டுமல்ல. வானத்திலும் ஜப்பான் நாடு தற்கொலைத் தாக்குதல்களை முன்னெடுத்தது. ‘நமக்கு ஒரு விமானம், எதிரிக்கு ஒரு கப்பல்’ என்ற கொள்கை நடைமுறைக்கு வந்தது.

1944-ம் ஆண்டு, ஜப்பான் கடற்படை தளபதி ஒருவர் விமானத்தில் பறந்து, , அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிராங்ளின் மீது கமிகஸே தாக்குதலை நடத்தினார்.

அந்த தாக்குதலில், பிக் பென் என்ற செல்லப் பெயர் கொண்ட யு.எஸ்.எஸ். பிராங்ளின் கப்பலுக்கு பலத்த அடி!

சீரோ, ஆஸ்கர், கேட்ஸ், பெட்டி ரக விமானங்களையும் ஜப்பான் தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ‘பன்சாயீ’ என்று ஒரு பாடல் தொடங்கும் இல்லையா? பன்சாயீ என்பது ஒரு போர்முழக்கம்.

‘உங்களுக்கு பத்தாயிரம் ஆண்டு நீண்ட வாழ்க்கை கிடைக்க நான் வாழ்த்துகிறேன்’ என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.

ஜப்பான் நாட்டு கமிகஸே விமான வலவர்கள் ‘பன்சாயீ’ என்று கத்திக்கொண்டே எதிரிகளின் போர்க்கப்பல் மீது விழுவது வழக்கம்.

நடுவானத்தில், அமெரிக்க பி-29 பெரியரக குண்டுவீச்சு விமானங்களுக்கு எதிராக ஜப்பானிய வலவர்கள், கி-44 சோகி டோஜோ விமானம் மூலம் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள்.

எல்லாவற்றிலும் உச்சமாக, நடுத்தர வீச்சு குரூய்ஸ் ஏவுகணைகள் மூலமாகக் கூட ஜப்பான் நாடு மனிதகுண்டு தாக்குதல்களை நடத்தியது.

3 ராக்கெட் இயந்திரம், 250 கிலோ வெடிப்பொருளுடன் மணிக்கு 1,040 கிலோ மீட்டர் வேகத்தில் கடலைத் தொட்டபடி, இந்த குரூய்ஸ் ஏவுகணைகள் பறந்து வரும்.

இந்த மனித குரூய்ஸ் ஏவுகணைகள் அமெரிக்க கடற்படையைக் கதிகலங்க வைத்தன.

இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் 3,700 கடற்படை வீரர்கள், 9 பீரங்கிகள் கொண்ட யமட்டோ என்ற பெரிய போர்க்கப்பலையே ஜப்பான் நாடு தற்கொலைத்தாக்குதலுக்குப் பயன் படுத்த முடிவு செய்தது.

ஆபரேசன் ‘டென் கோ’ என்ற பெயரில் எதிரியின் போர்க்கப்பல் மீது இந்தக் கப்பலை மோதவிட முடிவானது. ஆனால், எதிர்பாராத வெடிவிபத்தில் யமட்டோ போர்க்கப்பல் வெடித்து மூழ்கிப்போனது.

ஜப்பானில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய வீரர்கள் அத்தனைப் பேரும் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோவுக்கு தங்களது சொந்த விருப்பப்படியே தாக்குதலை நடத்தப் போவதாக முன்கூட்டியே கடிதம் எழுதியிருந்தனர்.

அதனால், மன்னர் ஹிரோஹிடோ மீது நேச நாடுகளால் போர்க்குற்றம் எதையும் சுமத்த முடியவில்லை.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஹிட்லரின் நாஜிப்படையைச் சேர்ந்த 50 லட்சம் வீரர்கள் சரணடைந்தார்கள். ஆனால், ஜப்பானைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கையில் 5 விழுக்காடு பேர் கூட நேச நாடுகளிடம் சரணடையவில்லை.

ஜப்பானில் அமெரிக்கப்படை தரையிறங்கினால், ஜப்பானிய மக்களும் கூட தற்கொலைப்படையாக மாறுவார்கள் என்ற பயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

(அந்த பயம் இருக்கட்டும்!) அதன் காரணமாகத்தான் ஜப்பான் மீது அமெரிக்கா 2 அணுகுண்டுகளை வீசி, போரை நயவஞ்சமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஜப்பான், இறையாண்மையுடன் திகழ்ந்த ஒரு தொழில்வளநாடு. அதனால், குரூய்ஸ் ஏவுகணைகள், விமானங்கள், கப்பல்களை ஜப்பானால் உருவாக்க முடிந்தது.

ஆனால், எந்தவித பெரிய வளங்களும் இன்றி கடலிலும், தரையிலும் கணக்கற்ற கலங்கள், ஊர்திகளை உருவாக்கி, ஆகப்பெரிய அதிரடிகளை நடத்தியவர்கள் நமது போராளிகள்.

– நன்றி: மோகன ரூபன் 

You might also like