பழங்கால மதங்களில், மக்களின் பண்பாடுகளில் பல பெண் தெய்வங்கள் இருந்தன.
ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், ‘இதெல்லாம் சரியில்லையே’ என்று சிலருக்குத் தோன்றியது.
பெண்களில் படிப்பறிவு உள்ள பெண்கள், பெண் துறவிகள், ஜிப்சி என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த குறி சொல்லும் பெண்கள், இயற்கையை நேசிக்கும் பெண்கள், காட்டில் மூலிகை சேகரிக்கும் பெண்கள்.. இவர்கள் எல்லாம் மானிடகுலத்தின் எதிரிகளாக சிலரால் கருதப்பட்டார்கள்.
சிந்திக்கத் தெரிந்த பெண்கள் ஆபத்தானவர்களாக அடையாளம் காணப்பட்டார்கள். ‘ஒரு பெண் கவிதை எழுதுகிறாளா? அது ஆபத்தாச்சே? அவளை உடனே தூக்கு’ என உத்தரவு பறந்தது.
பிள்ளைப் பேற்றின் போது வலியைக் குறைக்க மருந்து கண்டுபிடிக்க முயன்ற மருத்துவச்சிகளின் பாடு பெரும் திண்டாட்டமாக இருந்தது.
‘ஆதிகாலத்தில் விலக்கப்பட்ட கனியைக் கடித்த குற்றத்துக்காக ஏவாளுக்கு கடவுள் தந்த தண்டனைதான் பிரசவ வலி. இது ஒட்டுமொத்த பெண் குலத்துக்கான தண்டனை. ஆனா, நீங்க நோகாம பிள்ளைப் பெற பார்க்கிறீங்களோ?’ என்று, மருந்து கண்டறிய முயன்ற மருத்துவச்சிகள் சூனியக்காரிகளாக கருதப்பட்டு உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்.
ஆண்-பெண் உறவு என்பது தெய்வீகமாக இருந்தநிலை போய், பாலுறவுக்கான உந்துதல் என்பது சைத்தானின் தூண்டுதல் என்று பயப்படும் நிலை உருவானது.
இதன் தாக்கம் பிற்காலத்தில் மிக நன்றாக எதிரொலித்தது.
ஆம். ஐரோப்பாவில் ஒரு கட்டத்தில் பெண் கடவுள்களே இல்லாமல் போனார்கள். முதன்மையான மதங்களில் பெண் குருமார்கள் என்று யாரும் இல்லாமல் போனார்கள்.
ஆண்மை வலதுபுறம் பெண்மை இடதுபுறம் என்பதில், இடது என்ற சொல்லே கூட பிரெஞ்சு, இத்தாலியன் போன்ற மொழிகளில் தரக்குறைவான எதிர்மறை வார்த்தையாக மாறியது.
அறிவுக்கு ஒவ்வாத சிந்தனைகள் மூளையின் இடதுபக்கம் உதிப்பதாகக் கருதப்பட்டது. இடது என்பது எதிர்மறையான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
ஐரோப்பாவில் பெண்கள் எல்லாம் மானிடகுலத்தின் எதிரிகளாகக் கருதப்பட்ட காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது?
அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சங்கத் தமிழகத்தில், வெண்ணிக் குயத்தியார் கரிகால் சோழனை ‘நின்னினும் நல்லன் அன்றே’ என கவிதை என்ற பெயரில் இடித்துரைக்க ஆரம்பித்து விட்டார்.
ஔவையார் ஐ.நா. மன்றம் போல செயல்பட்டு அதியமான், தொண்டைமான் இளந்திரையன் இடையே நடக்க இருந்த போரை நிறுத்தியிருக்கிறார். (ஐ.நா. என்கிற பன்னாட்டு மன்றம் எந்தக் காலத்தில் போரை நிறுத்தியது என்று யாரும் கேட்கக் கூடாது!)
சிறுவயதிலேயே கற்றுத்தேர்ந்து பெரியவர்களுக்கு இணையாக அறிவோடு விளங்கிய சிறுமிகள் பழந்தமிழகத்தில், ‘சிறுமுதுகுறைவி’ என்று கொண்டாடப்பட்டிருக்கிறார்கள்.
ஆக, ஐரோப்பா அப்படியிருந்தபோது தமிழகம் இப்படியிருந்திருக்கிறது.
தமிழர்களாய் இருப்பதில் நாம் பெருமைப்பட நிறைய இருக்கின்றன. பெருமைப்படுவோம்.
– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு