221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!

சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் கடந்த 3-ம் தேதி வரையில் ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்ட்ராகிராம்’, ‘டுவிட்டர்’, ‘யூடியூப்’ போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவுகள், கருத்துகள் ஆகியவை ‘சைபர் கிரைம்’ காவல்துறை நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது.

அதோடு சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி 386 அவதூறு ‘வீடியோ’ பதிவுகள் இருப்பதை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த ‘வீடியோ’ பதிவுகளை முடக்க வேண்டும் என்று ‘யூடியூப்’ நிறுவனத்துக்கு ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர். 

தற்போது ‘ஸ்மார்ட்’ செல்போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த செயலி மூலம் கடன் வாங்கி கூடுதல் வட்டியை கட்ட முடியாமல் பலர் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் நடவடிக்கையால் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் மேலும் 61 கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த செயலிகளையும் முடக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

You might also like