டிஜிட்டல் உலகில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்!

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு ஆசையை தூண்டி விட வேண்டும் என்கிற ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட வசனத்தை நினைவூட்டும் வகையில் மோசடி பேர்வழிகள் உலகளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை வளர்ச்சியடைந்து வரும் இத்தருணத்தில் நம்மை ஏமாற்ற விதவிதமாக சிந்தித்து நமக்கு ஆசையை தூண்டி விடுகின்றனர்.

முன்பெல்லாம் அனாமேதய தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் நம்மை தொடர்பு கொள்ளும் வடமாநில ஆசாமிகள் குறிப்பிட்ட வங்கியின் பெயரைச் சொல்லி நான் மேனேஜர் பேசுகிறேன்.

உங்கள் ATM அட்டை Lock ஆகி விட்டது. அதனை இப்போதே சரி செய்ய வேண்டும், அதற்கு உங்கள் ATM அட்டையின் 16 இலக்க எண், பின்புறம் உள்ள CCV எண், அதன் பிறகு கடவுச்சொல் (Pin Number) சொல்லுங்க” என கேட்டு அறைகுறை தமிழில் பேசியதும் அதனை உண்மை என நம்புபவர்கள் Pin Number-ஐ சொன்னதும் நமது வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் வாரிச் சுருட்டி விடுகின்றன.

தற்போது அதன் அடுத்தகட்ட டிஜிட்டல் வளர்ச்சியாக GPay, PhonePay உள்ளிட்ட UPI பயன்படுத்துவோருக்கு குறிப்பிட்ட தொகை Cash Back கிடைத்திருப்பது போல முதலில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு பின்னர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த UPI நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம்,

“உங்களுக்கு குறிப்பிட்ட தொகை Cash Back கிடைத்துள்ளதால் உங்களுக்கு வந்துள்ள மெசேஜின் கீழே உள்ள Pay பட்டனை கிளிக் செய்தால் உங்கள் கணக்கிற்கு அந்த தொகை வந்து விடும்.

அந்த பணம் வேண்டும் என்றால் உடனடியாக கிளிக் செய்யுங்கள் எனக் கூறி மோசடி பேர்வழிகள் ஆசையை தூண்டி விட தொடங்கியுள்ளனர்.

அந்த ஆசை வார்த்தைகளை நம்பி Pay பட்டனை கிளிக் செய்தால் அந்த தொகை நமது வங்கி கணக்கில் இருந்து மோசடி பேர்வழிகளால் சுரண்டப்பட்டு விடும் என காவல்துறை தரப்பில் இருந்தும், வங்கிகள் தரப்பில் இருந்தும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை அளித்து கொண்டிருக்கின்றனர்.

எனவே எளிய வழியில் பணம் வருகிறது எனக் கூறும் மோசடி பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியோ அல்லது நமது வங்கி கணக்கின் நெட் பேங்க் லாக் ஆகி விட்டது உடனே அதனை சரி செய்ய வேண்டும் என்றோ அல்லது நமது வங்கி கணக்கில் ஆதார், பான் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்றோ கூறி வரும் தொலைபேசி அழைப்புகளையோ, குறுஞ்செய்தி தகவல்களையோ நம்பி எவரும் ஏமாற வேண்டாம்.

தற்போதைய டிஜிட்டல் உலகில் விழிப்புணர்வோடு இருந்து விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்.

அல்லது உழைக்காத பணத்திற்கு ஆசைப்பட்டு பேராசை எனும் புதை குழிக்குள் விழுவோரெல்லாம் தங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை.

– தேஜேஷ்

You might also like