- பிரதமர் மோடி பெருமிதம்
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரில் புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில் சுரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா நாட்டு அதிபர் முகமது இர்பான் அலி தலைமை விருந்தினராகவும் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “நாடு சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்தப் பயணத்தில் புலம்பெயர் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இந்தியா அறிவுசார் மையமாக மட்டுமின்றி, திறமையின் தலைநகராகவும் மாறும் திறன் படைத்தது. இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உள்ளனர். புலம்பெயர் இந்தியர்கள் தாங்கள் குடியேறிய நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இன்று இந்தியாவின் குரலுக்கும், வார்த்தைகளுக்கும் உலக அரங்கில் மாறுபட்ட முக்கியத்துவம் உருவாகியுள்ளது. வளர்ந்து வரும் இந்தியாவின் சக்தி இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் 5-வது இடத்தையும், அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொண்ட நாடுகளில் 3-வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது” எனக் கூறினார்.