தொண்ணூறுகளில் தூர்தர்ஷனில் வரும் சீரியல்கள் பார்த்த அனுபவம் உண்டா? அப்படியானால், அவற்றின் கதைகள் எப்படிப்பட்டதாக இருந்தன என்பதும் தெரிந்திருக்கும். பதிமூன்று அல்லது 26 வாரங்களில் ரொம்பவும் சுவாரஸ்யமாக கதை சொல்வார்கள்.
வெறுமனே பேமிலி சென்டிமெண்டோடு நின்றுவிடாமல் சயன்ஸ் பிக்ஷன், த்ரில்லர், ஹாரர், ஆக்ஷன், ஹிஸ்டரி, பயோக்ராபி என்று பல வகைப்பட்ட கதைகளாகவும் அவை இருந்தன என்பது மறந்துபோன ஒரு ஆச்சர்யம்.
தமிழில் நிலைமை இப்படி என்றால், இந்தியில் அவற்றின் தரம் கொஞ்சம் மேம்பட்டதாக இருந்தது என்பது மறக்க நினைக்கும் உண்மை.
ஓடிடி தளங்களில் வெளியாகும் பல வெப்சீரிஸ்கள் அந்த காலகட்டத்தை நினைவூட்டுகின்றன. சமகால வெப்சீரிஸ்கள் வகுத்த இலக்கணங்களை உடைத்துக்கொண்டு அந்த பொற்காலத்தை நோக்கிப் பாய்கின்றன.
டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘ஃபால்’ சீரிஸ் பார்த்தபோது, அதுதான் மனதில் தோன்றியது. அது வேண்டுமா, வேண்டாமா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.
கோமா நிலையில் நாயகி!
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வகுமார் சிவசங்கரன் (தலைவாசல் விஜய்) – லட்சுமி (பூர்ணிமா பாக்யராஜ்) தம்பதிக்கு ரோகித் (எஸ்.பி.பி.சரண்) என்ற மகன், திவ்யா (அஞ்சலி), மாயா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) என்ற இரு மகள்கள்.
பணத்தைத் தாறுமாறாகச் செலவழிக்கும் ரோகித்தையும், செல்லப்பிள்ளை என்ற அந்தஸ்துடன் சுகபோகமாக வாழத் துடிக்கும் மாயவையும் சிவசங்கரனுக்குப் பிடிக்காது. தன்னைப் போன்றே வெற்றிகரமாக வர்த்தகத்தைக் கையாளும் திவ்யாவையே தன் வாரிசு என்று கொண்டாடுகிறார்.
இளையோர்க்கான விளையாட்டு மையத்தை நடத்திவரும் திவ்யா, அதன் அலுவலக மேல்தளத்திலேயே தங்கி வருகிறார்.
ஒருநாள் இரவு அங்கிருந்து கீழே விழுகிறார். அவரது உயிர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினாலும், கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார்.
சில மாதங்களுக்குப் பின், கோமாவில் இருந்து குணமடைகிறார்; ஆனால், திவ்யாவுக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. தன் பெற்றோர் முதற்கொண்டு எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்.
அப்போது, டேனியல் (சந்தோஷ் பிரதாப்) என்பவரைக் காதலித்தது தெரிய வருகிறது. விளையாட்டு மையம் இருக்குமிடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் வரவிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த இடத்தை விற்றுவிடுமாறு திவ்யாவை டேனியல் வற்புறுத்தும்போது இருவருக்குள்ளும் பிரச்சனை முளைக்கிறது.
திவ்யா கோமாவில் இருக்கும்போது, கிருத்திகா (சாஸ்திகா ராஜேந்திரன்) என்ற பெண் மூலமாக அந்த இடத்தை வாங்க முயற்சிக்கிறார் டேனியல். மெட்ரோ திட்டம் பற்றிய தகவல் அறிந்ததும், நிலம் விற்றால் கிடைக்கும் பணத்தில் தனக்குப் பாதி வேண்டுமென்று டேனியலை மிரட்டுகிறார் ரோகித்.
திவ்யாவைப் பழிவாங்குவதாக எண்ணி, டேனியல் மீது காதல் பார்வை வீசுகிறார் மாயா. அதனை ஒரு தவறாக கருதாத அளவுக்கு, அவர் மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கிறார்.
பதினாறு வயதில் காதல் தோல்வியால் திவ்யா தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்டாலும், அது தொடர்பான முழுமையான உண்மைகள் தாய் லட்சுமிக்கு மட்டுமே தெரியும். அப்படிப்பட்டவர் விளையாட்டு மையத்தில் புதிதாகச் சேரும் ஜீவா (யோஹன்) என்ற வாலிபனைப் பார்த்த்தும் எரிச்சல் அடைகிறார்.
கோமாவில் இருந்து மீண்ட திவ்யாவிடம் ஜீவா அதிகமாக நெருக்கம் பாராட்ட முயற்சிப்பது லட்சுமியை மேலும் கோபப்படுத்துகிறது. எப்படியாவது அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று துடிக்கிறார்.
ஜீவாவுக்கும் திவ்யாவுக்கும் என்ன தொடர்பு, ரோகித் ஏன் அதிக பணத்திற்கு ஆசைப்படுகிறார், திவ்யா எப்படி மாடியில் இருந்து விழுந்தார் என்பது பற்றிய உண்மைகள் மாயாவுக்குத் தெரியுமா, இதில் டேனியல், கிருத்திகாவின் பங்கு என்ன என்ற கேள்விக்குப் பதில்கள் தெரிய வருவதுடன் ‘ஃபால்’ முடிவடைகிறது.
அஞ்சலி அழகு!
அறிமுகமான ‘கற்றது தமிழ்’ படத்திலேயே, தனது இயல்பான அழகையும் நடிப்புத்திறனையும் நிரூபித்துவிட்டார் அஞ்சலி. ஆனாலும் மங்காத்தா, கலகலப்பு மாதிரியான கமர்ஷியல் சினிமாக்களே அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
இந்த சீரிஸில் அவருக்கு மேக்அப் அதிகமென்றாலும், நடிப்பில் பழைய அஞ்சலியைப் பார்க்க முடிகிறது.
சரண், நமீதா, தலைவாசல் விஜய், சாஸ்திகா, சந்தோஷ் பிரதாப், புதுமுகம் யோஹன் ஆகியோரின் நடிப்பு அழுத்தமாக நம் மனதில் காட்சிகளைப் பதிக்க உதவியிருக்கிறது. பூர்ணிமா, சோனியா இருவரது நடிப்பும் ‘மெகா சீரியல்’ பார்த்த அனுபவத்தைத் தருகிறது.
டைட்டில் காட்சிகளில் அமைந்திருக்கும் அஜீஷின் இசை ‘கொக்கி’ போட்டு நம்மை இழுக்கிறது. ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் பின்னணி இசை காட்சிகளோடு பொருந்தி நிற்கிறது.
நளதமயந்தி, மும்பை எக்ஸ்பிரஸ் முதல் அரவான், திருடன் போலீஸ் வரை தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகத் திகழ்பவர் சித்தார்த் ராமஸ்வாமி.. அவர் இதனை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.
அழகழகான பிரேம்கள் பளிச்சென்று பாத்திரங்களைக் காட்டுகின்றன. ஆனால் கதையமைப்பு தொடங்கி கேமிரா கோணம் வரை எதுவுமே ஒரு ‘வெப்சீரிஸ்’ பார்த்தோம் என்ற திருப்தியை உருவாக்குவதாக அமையவில்லை.
ஜவ்வோ ஜவ்வு!
’வெர்டிஜ்’ என்ற பெயரில் கனடாவில் வெளியான மினிசீரிஸ் இது. அதேபோல தொலைக்காட்சித் தொடர் பாணியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், வெறும் 4 எபிசோடுகளில் செறிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதை 7 பகுதிகளாக நீண்டிருக்கிறது.
கருந்தேள் ராஜேஷ் உடன் இணைந்து இதன் திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார் சித்தார்த் ராமஸ்வாமி.
கதாபாத்திரங்களின் முரண்கள், திரைக்கதை முடிச்சுகள், அடுத்தடுத்த சம்பவங்களால் தெரியவரும் உண்மைகள் போன்றவை இருந்தாலும் ஒரு சீரியல் பார்த்த உணர்வெழுவது அயர்ச்சியைத் தருகிறது.
வெப்சீரிஸ்களுக்கும் சீரியல்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. ஆனால், சினிமாவைவிட ஒருபடி மேலான தரத்தில் கதை சொல்வதிலும் திரைக்கதை பரபரப்பிலும் நேர்த்தி கூட்டுபவை வெப்சீரிஸ்கள்.
அந்த வகையில், சீரியல் திரைக்கதைகளில் இருக்கும் ‘ஜவ்வுத்தன்மை’ வெப்சீரிஸ்களில் இருக்கவே கூடாது. ஆனால், ‘ஃபால்’ அதையே மையம் கொண்டு சுற்றி வருகிறது.
’டிராமா’ என்றளவில் வேறுபட்ட கதாபாத்திரங்களோடு பார்வையாளர்கள் ஒன்ற நினைத்தாலும், அதற்கேற்ற வகையில் கதைக்களமோ, கதாபாத்திரங்களின் சமூக அந்தஸ்தோ படைக்கப்படவில்லை.
மிக முக்கியமாக, ‘ஃபால்’ முடிவில் சொல்லப்பட்டிருக்கும் திருப்பம் முந்திய காட்சிகளில் எங்குமே மிகச்சரியாகக் கோடிட்டுக் காட்டப்படவில்லை. அதுவொரு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்குமென்று நினைத்திருப்பது தவறாகியிருக்கிறது.
கோமாவில் இருந்து வெளியே வரும் ஒரு பெண், தான் எதிர்கொள்ளும் தொடுகையில் இருந்து இந்த உலகைப் புரிந்துகொள்கிறாள் என்று புதிதாக ஒரு கதை கூட தயார் செய்திருக்கலாம். அதனை ‘மிஸ்’ பண்ணியிருக்கிறது ‘ஃபால்’. அவ்வாறு நிகழ்ந்திருக்கலாமே என்றும் வருத்தப்பட வைத்திருக்கிறது.
– உதய் பாடகலிங்கம்