சென்னையும் பிடிக்கும், சென்னைத் தமிழும் பிடிக்கும்!

– நாசரின் சென்னை அனுபவங்கள்:

சென்னையைப் பற்றிய என் நினைவுகள் 12 வயதிலிருந்தே தொடங்குகின்றன. 70-களில் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று சுபா(ங்) மேரே ஸாத் மதராஸ்கு ஆத்தா க்யாரே நாளைக்கு என்னுடன் மெட்ராஸக்கு வரயாடா என்று கேட்டார்.

எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் இருந்த செங்கல்பட்டிலிருந்து சென்னை வெறும் 60 கிலோ மீட்டர்தான் என்றாலும் அப்போதெல்லா சென்னைக்கும் போவது என்பது ஏறக்குறைய லண்டன் போவது போலத்தான்.

டிரான்ஸ்பர் ஆபி வந்த சக மாணவர்கள், மெட்ராஸின் பின்னணியில் எடுக்கப்பட்ட சினிமா பாட்டுக்கள் வழியாகத்தான் மெட்ராஸ் அறிமுகம். அங்கே போக வேண்டும் என்றெல்லாம் நினைத்ததுகூட இல்லை.

அன்று இரவு தூங்கவில்லை. சென்னை பற்றிய கற்பனைகள், கனவுக்கான நேரத்தை ஆக்கிரமித்திருந்தன. எனறு நாள் காலை பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து நாங்கள் இருவரும் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும் காற்று தாலாட்ட, நன்றாகத் தூங்கிவிட்டேன்.

அப்பாவின் உலுக்கலில் விழித்த என் கண்களுக்குமுன் மதராஸ் பரந்து விரிந்து கிடந்தது. பாரீஸ் கார்னரில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. அப்பா என் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார்.

பஸ் ஸ்டாண்ட் நேரெதிரில் குறளகம். அது வேனிற் காலமென்பதால் பாட்டிலில் நிறைக்கப்பட்ட பதநீர் விற்பனைக்கு இருந்தது. கொடுத்தார். பதநீரின் இனிப்பைவிட ஸ்ட்ராவில் குடிக்கிறோம் என்ற எண்ணம்தான் பரவசமாய் இருந்தது. அப்படியே நடந்து பூக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடம்.

அங்குதான் என் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பித்தளை நாராலான ப்ரஷ்கள், புங்கங்கொட்டை, மயிரிழை போலான செப்புக் கம்பிகள், சில ரசாயனங்கள் ஆகியவற்றை வாங்குவார். மெட்ராஸைப் பார்த்துவிட்ட பிரமிப்பில், என்ன நடக்கிறது என்ற எண்ணமே இல்லாமல், அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தேன்.

சாமான்கள் வாங்கி முடித்து அங்கிருந்து பஸ் பிடித்து, தேவி பாரடைஸ் தியேட்டர் அருகே இறங்கி அந்த வளாகத்தில் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே தியேட்டரைச் சுற்றிக் காண்பித்தார்.

அங்கே வட்டமான, சரிவுப் பாதை (ராம்ப்) ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்றடி தடிமனுள்ள சிவப்பிந்தியன் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி ஒரு செயற்கை நீரூற்று அமைத்திருந்தார்கள்.

முதன்முதலில் அதைப் சென்னையும் நானும் பார்க்கும்போது மெய்மறந்து போனேன். அந்த தியேட்டரில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் அது. இன்று அந்தச் சிலை இல்லை. தியேட்டருக்கு அப்போது இருந்த கவர்ச்சி இன்று இல்லை. இப்போது அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் எதையோ இழந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும். ஐயோ அது இல்லையே என்று மனது அடித்துக்கொள்ளும்.

எனக்கு அழுகைகூட வரும். சென்னையின் சாலைகளை, மக்களைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒரு விஷயம் இருப்பதாக யாரும் சொன்னதில்லை. திடீரென்று ஒரு அதிசயத்தைப் பார்த்தது போன்ற பிரமிப்பில் ஆழ்ந்தேன்.

சினிமா பார்க்க வரும் கூட்டத்தைவிட அதைப் பார்க்க வரும் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு செல்லும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் மேலே போய் கீழ் நோக்கிப் பார்ப்பேன். கீழே வந்து மேல் நோக்கிப் பார்ப்பேன். சலித்ததேயில்லை.

தேவி பாரடைஸிலிருந்து அப்படியே பஸ் ஏறி, தேனாம்பேட்டையில் இறங்கினோம். அங்கே காமதேனு என்கிற மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட் ஒன்று இருந்தது. கடல் மாதிரி இருக்கும். இரண்டாவது மாடியிலோ மூன்றாவது மாடியிலோ ஒரு ஹோட்டல் இருக்கும்.

அங்கேதான் முதன்முதலில் நான் பன் பட்டர் ஜாம் வாங்கிச் சாப்பிட்டேன். அதுவரை அப்படி ஒரு தின்பண்டம் இருப்பதையே நான் கேள்விப்பட்டதில்லை. அப்போதிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் பன் பட்டர் ஜாம் வாங்கிக் கொடுக்கச் சொல்லி அடம் பிடிக்கும் அளவுக்கு அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அந்தக் கல்லூரி வளாகமும்தான் என்னை உருவாக்கியது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அங்குதான் நான் கற்றுக்கொண்டேன். எனக்கு வாய்த்த மிகச் சிறந்த ஆசிரியர்களை என்னால் மறக்க முடியாது. லயோலா மாணவன் என்ற பெருமித உணர்வு என்னிடம் இப்போதும் உள்ளது.

வெளியூர்க்காரர்களுக்குச் சென்னை பற்றி நிறைய புகார்கள் உள்ளனவே?

எனக்கு இந்த ஊர் மிகவும் பிடிக்கும். தட்பவெப்ப நிலையை எடுத்துக் கொண்டாலும், என்னைப் பொருத்தவரை உலகிலேயே மிகச் சிறந்த ஊர் சென்னை என்றுதான் சொல்வேன். நல்ல கதகதப்பான தட்பவெப்ப நிலை இங்குள்ளது. வெய்யில் அடித்தால், வெய்யில், கிப் வெய்யில் என்று சொல்கிறோம். மழை பெய்தால், மழை, மழை என்று கூறுகிறோம். ஆனால் சென்னை சரியான பாலன்சில்தான் உள்ளது. சென்னையில் இருப்பவர்கள் ஊட்டிக்குப் போனால், பத்து நாள்கூட இருக்க முடியாது.

பொதுவாக ஒரு ஊரில் உள்ளவர்களுக்கு இது என் ஊர் என்ற கர்வமும் அந்த ஊருக்கு வருபவர்கள் மேல் ஒரு அக்கறையும் இருக்கும். இதுவே வேறு இடங்களிலிருந்து வருபவர்களுக்கு அதை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறை இருக்காது. சென்னையைக் கெடுப்பவர்கள் எல்லாருமே வெளியூரிலிருந்து வருபவர்கள்தான். சென்னைவாசிகள் வேறு எங்கோ இருப்பவர்கள் போல கஷ்டப்படுகிறார்கள்.

சென்னையின் விருந்தோம்பலைப் பற்றியும் நெரிசலைப் பற்றியும் எதிர்மறையாகச் சொல்வார்கள்…

நெரிசலுக்குக் காரணமே அதைப் பெரிய குற்றமாகச் சொல்பவர்கள்தான். சென்னைதான் நெரிசலாக இருக்கிறதே, ஊருக்குத் திரும்பிப் போங்களேன்! என்னைப் பொருத்தவரை எனக்குக் கூவம்கூடப் பிடிக்கும். அதை அசுத்தப்படுத்துவதே நாம்தானே. 60-கள்வரை அங்கு படகு சவாரி நடைபெற்றுக் கொண்டுதானே இருந்தது?

நாம் அதைப் புறக்கணித்ததால்தானே அதற்கு இந்த நிலை? இதைச் செய்தவர்கள்கூட வெளியூர்களிலிருந்து இங்கே வந்தவர்கள்தான். வாய்ப்பு வசதிகள் குவிந்து கிடக்கும் ஓரிடத்தில் எல்லாரும் வந்து சேர்வதும் அதனால் ஏற்படும் நெரிசலும் இயல்புதான். ஒன்று அவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும் அல்லது அவற்றைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை வாழ்க்கையின் பரபரப்பு அழுத்தத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடியது என்று கூறுகிறார்களே?

அவர்கள் மும்பை, டோக்கியோ, நியூயார்க் போன்ற ஊர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மிகவும் அமைதியாக, சவுகரியமாக வாழக்கூடிய இடம் சென்னை. சென்னையைப் பற்றி ஏதாவது குறை உள்ளது என்றால் அது, வட சென்னையைப் பற்றியதுதான். சென்னையை உருவாக்கியதும், உருவாக்கிக் கொண்டிருப்பதும் வட சென்னை மக்கள்தான். வட சென்னைதான் அசல் சென்னை.

ஆனால், ஆசியாவிலேயே மிகவும் கெட்டுப்போன தண்ணீர் இருப்பது எண்ணூரில்தான். காரணம், அங்கிருக்கும் தொழிற்சாலைகள் எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. அரசு வட சென்னையை மறந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.

அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

சென்னை அங்கிருந்து நகர்ந்துவிட்டது என்றுதான் சொல்வேன். அவர்களுக்கு எந்த சவுகரியங்களும் போய்ச் சேர்வதில்லை. ஏதாவது அவசரம் என்றால் ஆம்புலன்ஸ்கூட அங்கு போக முடியாது. முழுவதும் கன்டெய்னர்களால் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட விஷயங்கள் இவர்களுடைய எதிர்கால வாய்ப்புகளையும், சாத்தியங்களையும் நிச்சயம் பாதிக்கும்.

இப்போது அண்ணாநகரில் உள்ள பத்தாம் வகுப்புப் படிக்கும் பத்துப் பேரை எடுத்துக் கொண்டால், இன்னும் பத்து வருடங்களில் அவர்களில் பெரும்பாலானோர் நல்ல நிலையில் இருப்பார்கள். நல்ல வேலையில் வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருப்பார்கள். ஒரே ஒருவன் மட்டும்தான் சுமாரான நிலையில் இருப்பான்.

ஆனால், வட சென்னையில் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் பத்துப் பேரைப் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால், அதில் மூன்று பேர் மட்டுமே ஏதோ தேறியிருப்பார்கள். மீதி ஏழு பேர் ஏதோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். பத்தாவதுக்கு மேல் படித்திருக்க மாட்டார்கள்.

வட சென்னையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அங்கே பெரிதாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய முடியாது. பெரிய தியேட்டர் கட்ட முடியாது. முன்னேற்றப் பாதையின் கீழ்ப் பக்கத்தில் வட சென்னை இருக்கிறது.

எல்லா கிராமங்களைப் போலவும் சென்னைக்கு என்றே நிறைய தனிப்பட்ட கலாச்சார அடையாளங்களும், வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும் உள்ளன. இவற்றையெல்லாம்கூட நாம் பதிவு செய்ய வேண்டும். கிராமத்தில் இருக்கும் அதே இணக்கமான, அன்பான சூழல் வட சென்னையிலும் உள்ளது. எல்லா வீட்டிலும் முருங்கை மரம் இருக்கிறது என்பதுபோலவே வீட்டிற்கு வெளியே வாசலில் (ஆண்கள் பெண்கள் எல்லாரும்) உட்கார்ந்து எதிர் வீட்டில் உள்ளவர்களுடன் பேசுவார்கள், படுத்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

நீங்கள் பொதுவாக சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதிகளைச் சுற்றித்தான் இருந்தீர்கள். ஆனால் வட சென்னையைப் பற்றிய உங்களுடைய அக்கறையும் அறிவும் அதிகமாக உள்ளன. பொல்லாதவன் படத்திலும் அந்த இடத்தின் குறுக்குவெட்டுத் கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எப்படி இது?

நான் சென்னைவாசியாக இருப்பது, அதைக் குறித்துப் பெருமிதப்படுவது ஆகியவற்றின் விரிவாக்கம்தான் வட சென்னை. அதன் அமைப்பே அலாதியானது. எவ்வளவு தடைகள், இடர்கள் வந்தாலும் எவ்வளவு காலமானாலும் தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. சென்னை என்பது இப்போது மிகவும் விரிவானதாகப் பார்க்கப்பட்டாலும், உண்மையில் சென்னை என்பது இதுதான்.

வட சென்னை என்று ஒரு படம் எடுக்கப் போகிறீர்கள். வடசென்னையை ஒரு களமாகப் பார்க்கிறீர்களா? அல்லது அதை ஒரு வாழ்க்கையாகப் பார்க்கிறீர்களா?

வட சென்னையைச் சேர்ந்தவர்கள் முரட்டுத்தனம் கொண்டவர்கள் என்று பொதுவாகக் கூறுவார்கள். அது தவறான எண்ணம். என்னைப் பொருத்தவரை சொந்த மண்ணில் இருப்பதால், அவர்கள் தைரியமானவர்களாக இருக்கிறார்கள். இதில் நிறைய விஷயங்கள் உள்ளன.

நான் சொல்லப்போவது அதில் ஒரு பகுதி மட்டுமே. அதில் இருக்கும் சொல்லப்போகிறேன். எங்கெல்லாம் துறைமுகங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் அமைப்பு ரீதியான (ஆர்கனைஸ்டு) குற்றங்கள் நிறைய இருக்கும்.

இவையெல்லாமே இல்லாததை இட்டு நிரப்பிக்கொள்ளும் கவுன்டர் பாலன்ஸ்’ அமைப்புகள்தான். பொதுவாக அனைவருக்கும் முறையாகக் கிடைக்க வேண்டியவை கிடைக்கவில்லை என்றால் அமைப்புகளுக்கு எதிராகச் செயல்படுவதுதான் கவுன்டர் பாலன்ஸ். இப்படித்தான் நான் அவற்றைப் பார்க்கிறேன்.

பொதுவாக இவர்களுடைய மதராஸ் பாஷை, நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறை கூறுபவர்கள், அவர்கள் வாழ்க்கைத் தரம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வேதனைகள் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. இந்த மக்களின் வாழ்வை நாம் நிச்சயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு.

வட சென்னை என்பது 18 கிராமங்களால் ஆன ஒரு பகுதி. படங்களில் வருவது போலவே ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பஞ்சாயத்துத் தலைவர். இன்னமும் கூட அது கிராமங்களாகவும், குடியிருப்புகளாகவும்தான் உள்ளது. கிராமங்களைப் போலவே இங்கும் புதிதாக யாரும் உள்ளே போய்விட முடியாது. ஒருவருக்கொருவர். அன்புடனும், பகிர்தலுடனும் இருக்கிறார்கள்.

ஒரு வீட்டுக் குழந்தையை இன்னொரு வீட்டிலுள்ளவர் பார்த்துக் கொள்வதும், ஒருவருக்கொருவர் உதவுவதும் இயல்பாக நடைபெறும் விஷயங்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், உடனடியாக எல்லாரும் திரண்டு வருவார்கள்.

சென்னையில் மிகவும் பிடித்த இடம் எது?

டீ குடித்து. சவுகரியமாக அரட்டையடித்துக் கொண்டிருந்த எல்லா இடங்களும் எனக்குப் பிடிக்கும். லயோலா கல்லூரி, ஒய்.எம்.சி.ஏ. வளாகங்கள் மிகவும் பிடிக்கும்.

பிடிக்காத இடங்கள்?

இன்று வரை அப்படி ஒரு இடமும் கிடையாது.

சென்னையில் மறைந்துவரும் சில இடங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

டிரைவ் இன் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்துவந்தது. அது போனதில் எனக்கு மிகவும் வருத்தம். மேம்பாலங்கள் நம் சவுகரியத்திற்காகத்தான் கட்டப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நிச்சயம் நமக்கு தேவை. ஆனால், இவை கட்டப்படும்போது, அந்த இடத்தின் முகம் மாறுவதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கும்.

சென்னைத் தமிழைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு அது மிகவும் பிடிக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போதும், கோபமாக இருக்கும்போதும் எனக்கு சென்னைத் தமிழ்தான் வரும். சென்னைத் தமிழின் விசேஷமாக நான் நினைப்பது, பல மொழிகளில் உள்ள வார்த்தைகளை மிகச் சுலபமாகத் தனதாக்கிக் கொள்கிறது. என்னைப் பொருத்தவரை மொழி என்பது மாற்றத்திற்கு உட்பட வேண்டும். அப்போதுதான் அது வளரும்.

ஆங்கிலத்தின் பலமே அது பல மொழிகளிலிருந்து வார்த்தைகளை கிரகித்துக்கொண்டே இருப்பதுதான். சென்னைத் தமிழ் பேசுபவர்களை நாம் குறைவாக நினைப்பது தவறு. மதுரையில் போய் ஏன் தமிழை இப்படிப் பேசுகிறீர்கள் என்று கேட்க முடியுமா? மொழியின் அடிப்படைப் பயன்பாடு, தகவல் தொடர்பு, சர்வைவல்தானே? என்னைப் பொருத்தவரை சென்னைத் தமிழ் வெரி எக்ஸ்பிரசிவ் அன்ட் டைனமிக் லாங்வேஜ்.

வடக்கு, தெற்கு பிரிவுகள், இந்தப் பக்கம் வளர்ந்துகொண்டே போவது, அங்கு வளர்ச்சி குறைந்து காணப்படுவது, இதெல்லாம் எதில் போய் முடியும் என்று நினைக்கிறீர்கள்?

எது எப்படி இருந்தாலும் எல்லாமே அதன் போக்கில் போய்க்கொண்டுதானே இருக்கும்? ஒரு இடம் தனக்குத் தேவையானதைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனுடையது. இப்போது காணப்படும் பிரிவு இன்னும் அதிகமாகத்தான் ஆகும் என்று நினைக்கிறேன். அந்தந்த ஊர்களிலேயே அவர்களுக்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

நாம் இருக்கலாம், இல்லாமல் போகலாம். 50 வருடங்களுக்கு முன் இருந்தவர்களைக் கேட்டால் அப்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சொல்வார்கள். எனக்கு 20 வருடங்களுக்கு முன் மிகவும் பிடித்திருந்தது. நமக்குப் பிடித்தது பிடிக்காதது என்று எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

 – நன்றி சென்னையும் நானும் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like