கொசுவால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் – 20 : உலகக் கொசு தினம் 

மனிதர்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய் தொற்று என்பது கொசுக்களின் மூலம் பரவுகிறது. இப்படிப்பட்ட கொசுக்களின் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொசு தினம் ஏன் அனுசரிக்கப்படுகிறது?

சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகஸ்ட் 20 ஆம் தேதி பெண் கொசுக்கள் மூலம் மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.

இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகஸ்ட் 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதன் காரணமாக சுகாதார மற்றும் வெப்ப வலய மருத்துவத்துக்கான இலண்டன் பள்ளி ஆண்டு தோறும் இந்நாளில் கண்காட்சிகள் உட்படப் பல கொண்டாட்டங்களை 1930களில் இருந்து நடத்தி வருகிறது.

ஆகவே அன்று முதல் இன்று வரை ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கொசுக்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொசுக்கள் இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் போகும் இடம் எல்லாம் கொசு மையம் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் பரவியுள்ளது. இரவு நேர கொசு, பகல் நேர கொசு, மாலை நேர கொசு, கடிக்கும் விதத்தை வைத்து கொசுக்களின் வகையை கூறிவருகின்றனர் மருத்துவர்கள்.

கவிஞர் ஒருவர் கூறியிருப்பார்,

இரவு எல்லாம் உன் நினைவுகள்

கொசுக்கள் என்று…

ஆகா, எத்தனை அருமையான வரிகள். கொசுவையும் தனது காதலியையும் ஒன்று சேர கூறியிருப்பார். காதல் வந்தாலும் தூக்கம் இல்லாமல் இம்சை படவேண்டும், கொசு கடித்தாலும் தூக்கம் தொலைந்து போகும்.

காதலுக்காக கொசுவை சுட்டிகாட்டி கவிதை வடிக்கும் அளவுக்கு அதன் தொல்லை எப்படி இருக்கும் என்பது கொசுக்கடியில் தூக்கம் தொலைத்த அவனுக்குத் தான் தெரியும்.

ஈ அளவை விடவும் சிறு உயிரினம் தான் கொசுவின் உருவம். ஆனால், உயிரையே குடித்து விடும் அளவுக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தி விடுகிறது.

உருவத்தில் சிறியதாக இருந்தாலும் இரத்தத்தில் ஊசி ஏற்றி மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், டெங்கு, என்சிபாலிட்டிஸ், ஜிகா வைரஸ் என்று வாயில் நுழையாத பெயர் கொண்ட நோய்களை எல்லாம் ஏற்படுத்துவதில் வல்லமை கொண்டது கொசு.

ஆண்டுதோறும் மனிதர்களுக்கிடையில் அபாயகரமான நோயைப் பரப்பக்கூடிய இந்த கொசுக்களால் கடிபட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சம் பேர் இறப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நோய் பரப்பும் கொசுவிடம் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.என்பதை பார்க்கலாம்.

பாதுகாப்பு முறைகள்:

முதலில் நம் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். குப்பைகள், நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணிகளை குப்பை போல் போடாமல் அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டும்.

வீட்டின் மூலை முடுக்குகளில் பொருட்களை குவித்து வைக்காதீர்கள் கொசு தங்குவதற்கு வசதியாக இருந்துவிடும். ஆகவே சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

ஒரு சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் பிரிட்ஜ் பின் பக்கம் வெளியேறக்கூடிய தண்ணீர் தேங்கி நிற்கும் அதில் முட்டையிட்டு கொசுக்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே பிரிட்ஜ் பின்புறம் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,

வீட்டு ஜன்னல்கள் கொசு வலைகளை அடித்து கொசுக்கள் வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம்.

மழைக்காலங்களில் போது கொசுக்கள் அதிகரிக்கும் எனவே மாலை நேரங்களில் புகை போடலாம்.

நம் வீட்டில் இருக்கும் சாம்பிராணியில் வேப்ப இலை, துளசி சேர்த்து புகை போட்டால் கொசுக்கள் அதிகமாக வீட்டுக்குள் வருவது தடுக்கப்படும்.

கொசு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

கொசு பற்கள் இல்லை என்றாலும் கூர்மையான தனது வாய் பகுதியை கொண்டே மனிதர்களை கடிக்கிறது.

இரண்டு மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய கொசு, டைனோசர் காலம் முதலே வாழ்ந்து வந்ததாக ஆய்வுகள் கூறுகிறது.

பொதுவாக ஆண் கொசுவை விடவும் பெண் கொசுதான் ரத்தத்தைக் குடிக்கும். பெண் கொசு ஒரே நேரத்தில் சுமார் 300 முட்டைகளை இடும் தன்மை கொண்டதாம்.

இந்த உலகத்தில் 3500க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் வாழ்ந்து வருகிறது.

ஆனால் இதில் 200 முதல் 300 இனங்கள் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

என்னதான் இருந்தாலும் கொசு நமக்கு தொல்லைகள் கொடுத்தாலும் ஆண்டுதோறும் மறக்காமல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, அதற்கு ஒரு தினம் உலக கொசு தினம் அனுசரிக்கப்படுவது கொசுவுக்கு பெருமை தானே.

-யாழினி சோமு.

You might also like