தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு!

தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் அமலில் உள்ள நிலையில், அதில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி பட்டப்படிப்பு மட்டும் தமிழில் படித்தால் போதாது; ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் படித்திருக்க வேண்டும் என திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், ஆங்கில வழியிலிருந்து பல மாணவர்கள் ஆறாம் வகுப்பில் தமிழ் வழிக்கு மாறத் துவங்கியுள்ளனர்.

புதிதாக ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரும் தமிழ் வழியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வந்துள்ளனர்.

“தாய்மொழியில் கற்க வைப்பதற்கு இது சரியான திட்டம். ஆனால் ஆங்கில வழியில் படித்துவிட்டு இட ஒதுக்கீட்டுக்காக பாதியில் தமிழ் வழிக்கு மாறும் போது மாணவர்களுக்கு தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழில் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும்” என்கின்றனர் சில ஆசிரியர்கள்.

தமிழக தமிழாசிரியர் கழக முன்னாள் பொதுச்செயலர் இளங்கோ பேசியபோது, “அரசு வேலைவாய்ப்புக்கு, ஆறாம் வகுப்பில் இருந்து, தமிழில் படித்திருக்க வேண்டும் என்பதற்கு பதில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என சட்டம் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மேலும் தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு அரசு சலுகை அளிப்பது போல சுத்தத் தமிழில் பெயர் வைக்கப்படும் மாணவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்” எனக் கூறினார்.

இதனிடையே, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆறாம் வகுப்பில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

03.03.2021   01 : 40 P.M.

You might also like