உலக நிகழ்வுகள் 2020
உலகையே கொரோனா பெருந்தொற்று உலுக்கியெடுத்து விட்டது. ஊர்விட்டு ஊர்வந்து வேலை பார்த்தவர்கள் கால்நடையாகவே எல்லைகளைக் கடந்தார்கள். பொருளாதார வளத்தில் முன்னேறிய நாடுகள்கூட ஊரடங்கு நாட்களில் தடுமாறி விட்டன.
கொரோனாவை முன்வைத்துத்தான் 2020 ஆம் ஆண்டின் நிகழ்வுகளை நினைவுகூர முடியும். அந்த அளவுக்கு மாற்றங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த ஆண்டாகக் கடந்திருக்கிறது. தாய் இணையதள வாசகர்களுக்காக உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா காட்டுத்தீ
கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடங்கிய காட்டுத்தீ ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலைக் கடுமையாக பாதித்தது. ஐம்பது கோடிக்கும் அதிகமான விலங்குகள், மரங்கள் எனப் பல உயிரினங்கள் காட்டுத்தீக்கு இரையாகி உள்ளன. 6.3 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் கருகின.
நம்பிக்கையான விஷயமும் நடந்தது. ஆனால் அங்கு ஒருசில இடங்களில் சிறு உயிர்கள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

காசிம் சுலைமானி கொலை
ஈரான் நாட்டின் முதன்மை ராணுவ தளபதி காசிம் சுலைமானி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் காரணம் என அந்நாட்டு அதிபர் அவருக்குக் கைது வாரண்ட் பிறப்பித்தார். பழிதீர்க்கும் வகையில் ஈராக் நாட்டில் அமெரிக்கப் படையினர் தங்கியிருந்த இரண்டு படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே உச்சபட்ச பதற்றம் நிலவியது. தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானத்தின் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப் போர் விமானம் என நினைத்துத் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அந்த விமானத்தில் பயணித்த 176 பயணிகள் கொல்லப்பட்டனர்.
முதல் ஊரடங்கு
கொரோனா பெருந்தொற்று உருவான வூகான் மாகாணத்தில் ஜனவரி 23 ஆம் தேதியன்று 76 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதுதான் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட முதல் ஊரடங்கு எனக் கூறலாம். அதன்பிறகுதான் உலகமே விழித்துக்கொள்ளத் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து பல நாடுகளும் முதல்கட்டமாக வெளிநாட்டு விமானச் சேவைகளைக் குறைத்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கின. சீனாவில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸ் தொற்றால் சர்வதேச அளவிலான பொதுச்சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்தது.
இலவச பொதுப் போக்குவரத்து
உலகிலேயே முதல் நாடு என்ற பெருமையை லகம்சம்பர் நாடு எதற்காகப் பெற்றது தெரியுமா? நாட்டின் அனைத்து வகையான பொதுப் போக்குவரத்தையும் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. இங்கு வாகனங்கள் வணிக ரீதியிலான பயணத்துக்கு 47 சதவீதமும், ஓய்வுநேர போக்குவரத்துக்கு 71 சதவீதமும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே சாலைகளில் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இலவச பொது போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலவச போக்குவரத்து 40 சதவீத குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்டது. ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 110 டாலர்களை (சுமார் ரூ. 8 ஆயிரம்) சேமிக்க முடியும். லக்சம்பர்க் நாட்டு மக்கள் ரயில்களில் முதல் வகுப்பில் பயணிக்கவும், பேருந்துகளில் இரவுநேர பயணத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது.
தாலிபான் அமைதிப் பேச்சுவார்த்தை
பிப்ரவரி மாதத்தில் ஆப்கன் நாட்டில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தோடு தாலிபான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், தலைநகர் காபூலில் உள்ள தலைமை சிறைச் சாலையிலிருந்து 200 தாலிபான்கள் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஆப்கன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனா ஒரு பெருந்தொற்று
மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஊரடங்கை அறிவிக்கும் அளவுக்கு மாநிலங்கள் தோறும் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாநில எல்லைகள் மூடப்பட்டன.

கால்நடையாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். கொரோனா வைரஸ் ஒரு ‘பெருந்தொற்று’ என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. கொரோனா பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு நேபாள அரசு தடை விதித்தது.
ஒலிம்பிக் போட்டி ரத்து
உலக நாடுகளில் அவ்வப்போது நடைபெற்றுவந்த கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டன. அதேபோல ஜப்பானில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அதனைச் சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்தது.
கொரோனா பரவல்
உலகளவில் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று அடையாளம் கண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது. உயிரிழப்புகள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியது.
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை முந்தியது. சிரியா, ஏமன், லிபியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையை ஐநா கேட்டுக்கொண்டதால் போராளிக் குழுக்கள் கைவிட்டன.
ஏப்ரல் மாதத்தில் உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. நியூயார்க் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
ஜப்பானில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஏப்ரல் 8 ஆம் தேதியன்று வூகான் நகரில் அறிவிக்கப்பட்டிருந்த 76 நாள் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
சீன எல்லையில் மோதல்
மே 9 ஆம் தேதியன்று லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருபது பேர் உயிரிழந்தனர்.

இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்சினையைப் பேசித்தீர்க்க அரசு ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மிக மோசமான தாக்குதலாக கல்வான் சண்டை அமைந்தது. கடைசியாக 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் நான்கு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்
இன்னும்கூட நிறவெறி இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துவிட்டது அமெரிக்காவில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாய்ட் உயிரிழப்பு. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
சுரங்கத்தில் நிலச்சரிவு
ஜூலை 2 ஆம் தேதியன்று பர்மா என அழைக்கப்படும் மியான்மர் நாட்டில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர்.
கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. சம்பவம் நடந்த அன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாகத் தொழிலாளர்கள்மீது விழுந்து அமுக்கியது. அதே மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழந்தனர்.

வடகொரியா ரகசியம்
வடகொரியாவில் கொரோனா இருக்கிறதா என்பது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளிவராமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டதாகவும், அதனால் அதிபர் கிம் அவசரக் கூட்டத்தைக் கூட்டியதாகவும் தகவல் வெளியாகியது.
பெய்ரூட் துறைமுக வெடிவிபத்து
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளால் வெடிவிபத்து ஏற்பட்டதாகப் பின்னர் கண்டறியப்பட்டது. அதில் 220 பேர் உயிரிழந்தனர். மூன்று லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். பெய்ரூட் நகரமே நிலைகுலைந்தது.
இந்த வெடிவிபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர். பெய்ரூட் வெடிவிபத்து நிகழ்ந்தபோது முதலில் குண்டுவெடிப்பு என்று செய்திகள் வெளியான. மேலும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
கேரளாவில் விமான விபத்து
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தை விட்டு விலகிச்சென்று விபத்து நேர்ந்தது. 191 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்தனர்.
விமானம் விபத்தில் சிக்கியபோது, உள்ளூரில் இருந்த மக்கள் விரைந்து சென்று உதவி செய்தனர். விபத்தில் சிக்கியிருந்த பயணிகளை அவர்கள் மீட்டு, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அதனால்தான் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்
உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக் வி) ரஷ்யா அனுமதி அளித்துள்ளதாக அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் முழுமூச்சுடன் செயல்பட்டன. அந்த ஆராய்ச்சிகள் அடுத்த ஆண்டிலும் தொடரும்.
நியூசிலாந்து பிரதமர்
அக்டோபரில் நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனின் கட்சி மீண்டும் வெற்றிபெற்றது. அவர் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த ஜெசிந்தாவை பார்த்து, உங்களால் தாயாக இருந்துகொண்டு, பொது வாழ்விலும் வென்றுகாட்ட முடியுமா என்று கேட்கப்பட்டது.
இரண்டாவது வெற்றியின் காரணமாக அந்தக் கேள்வி நகைப்புக்குள்ளாகி இருக்கிறது. ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் 120 இடங்களில் 60க்கும் மேலான இடங்களைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது.
அமெரிக்காவின் புதிய அதிபர்
அமெரிக்காவில் நடைபெற்ற புதிய அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பைடனின் வெற்றியைத் தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாகத் தேர்தல் சபையின் அறிவிப்பு வெளியான பின்பு உரையாற்றிய அவர், “அமெரிக்க ஜனநாயகம் அச்சுறுத்தப்பட்டது. ஆனால் அது மீண்டு வரக்கூடியது, உண்மையானது மற்றும் வலிமையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது” என்று உரையில் குறிப்பிட்டார் பைடன்.
விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளது. பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், திரிபுரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இரவு பகலாக அவர்கள் டெல்லி நகரத்தின் எல்லையின் தங்கி போராடி வருகின்றனர். சொந்த ஊர்களில் இருந்து டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினர்.
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாப்தே, விவசாயிகளுக்குப் போராடுவதற்கு உரிமை உள்ளது. அதில் நாங்கள் தலையிடமாட்டோம்.
ஆனால், போராட்டம் எப்படி நடக்கிறது என்பது குறித்து நாங்கள் ஆராய்வோம் என்று தெரிவித்தார். இன்று வரையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகில் நடைபெற்ற போராட்ட வரலாற்றில் விவசாயிகள் போராட்டமும் இடம்பெற்று விட்டது.
தொகுப்பு: தான்யா
01.01.2021 02 : 10 P.M