இலக்கியத்தை எளிமைப்படுத்துவது தவறா?

கண்ணதாசன் பாடல் வழி உணர்ந்த கருத்து

கண்ணதாசனின் காதல் பாடல்களைப் பொறுத்த வரையில் அவரது தனித்துவம் இன்னும் விரிவானது.

காதலை வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பாகவோ, கற்பனையான உணர்ச்சியாகவோ அவர் அணுகவில்லை.

மனித வாழ்வின் இயல்பான, உயர்வான உணர்வாகவே அதனைப் பதிவு செய்தார்.

இதுகுறித்து வி. சுந்தரம்,

“மனிதக் காதலைப் புறந்தள்ளி, தெய்வீகக் காதலுக்கு மட்டும் வழிசெய்திருந்த முந்தைய இலக்கியங்களுக்கு மாறாக, மனிதக் காதலை தெய்வீகமாக அங்கீகரித்தக் கவிஞர் கண்ணதாசனாகத்தான் இருக்கமுடியும்.

காதல் தீண்டத்தகாததாக முத்திரை சுமந்து, மனச்சிறையுள் வாடியபோது, தூது செல்ல வழியின்றி மடிதலைநோக்கி பயணம் செய்ய நேர்ந்த போதெல்லாம் (இந்த) கண்ணதாசனின் காதல் பாடல்கள்தான் பலருக்குக் காதல் தூது சென்றன.”

என்று குறிப்பிடும் கருத்து கவனத்திற்குரியது. காதலைப் பேசுவதற்கான மொழி கிடைக்காமல் தவித்த பலருக்கு அவரது பாடல்கள் வெளிப்பாட்டுக்கான வழியாக அமைந்தன.

காதல் உணர்வை அவர் உயர்த்திப் பாடிய அதே நேரத்தில், அதனை மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை.

அதனால்தான் அவரது காதல் பாடல்கள் தனிப்பட்ட அனுபவங்களைக் கடந்து பொதுவான உணர்வுகளாக மாறின.

கண்ணதாசனின் பாடல்களின் மற்றொரு சிறப்பு, கவிதைக்கான பாடுபொருள்களை அவர் எங்கும் தேடிச் செல்லவில்லை என்பதுதான்.

தன்னைச் சுற்றி நிகழும் சமூகச் சம்பவங்கள், மனிதர்களின் செயல்பாடுகள், அரசியல் நிலைமைகள், வாழ்வியல் முரண்பாடுகள் என அனைத்தையும் கவிதைக்குரிய பொருள்களாகக் கருதினார்.

இதற்குச் ‘சொர்க்கம்’ திரைப்படத்திற்காக அவர் எழுதிய பாடல் ஒரு நல்ல சான்று.

“சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்…

வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?

விதியென்று ஏதுமில்லை
வேதங்கள் வாழ்க்கையில்லை
உடலுண்டு உள்ளமுண்டு
முன்னேறு மேலே மேலே!”

இந்த வரிகள் ஒரு திரைப்படச் சூழலுக்காக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றின் சிந்தனை திரைப்படத்தின் எல்லையைத் தாண்டி நிற்கிறது.

சோம்பலையும் வெறும் பேச்சையும் விமர்சிப்பதுடன், மனிதன் தன்னுடைய ஆற்றலை உணர்ந்து முன்னேற வேண்டும் என்ற சமூகச் செய்தியையும் கவிஞர் முன்வைக்கிறார்.

விதியின் பெயரால் வாழ்க்கையை ஒதுக்கிவிடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்து இன்றைக்கும் பொருத்தமுடையதாக இருக்கிறது.

அதேபோல், ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்று தொடங்கும் பாடல் வாழ்வில் துயரத்தையும் ஏமாற்றத்தையும் சந்திப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பாடலாக அமைந்துள்ளது.

“ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதிநாடு.”

வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நினைக்கும் மனிதனுக்கு, தன்னைவிடத் துயரமான நிலையில் வாழ்பவர்களையும் நினைத்துப் பார்க்கச் சொல்கிறார் கவிஞர். இது வெறும் அறிவுரையாக ஒலிப்பதில்லை.

மனித மனத்தின் துயரத்தைப் புரிந்துகொண்ட ஒருவரின் ஆறுதல் மொழியாக வெளிப்படுகிறது.

எளிய சொற்களில் வாழ்க்கையின் நிலையாமையையும் மன அமைதியின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் இந்தப் பாடல், கண்ணதாசனின் தத்துவப் பார்வைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

000

   இத்தகைய பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு அவர் பழந்தமிழ் இலக்கியங்களோடு கொண்டிருந்த தொடர்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கியங்கள் வெறுமனே சொற்களாலும் கற்பனைகளாலும் உருவாகிவிடுவதில்லை.

அவை தோன்றிய காலத்தின் வாழ்வியல் நிகழ்வுகள், சமூக அமைப்புகள், நம்பிக்கைகள், முரண்பாடுகள், மனித உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக அமைகின்றன.

ஒரு காலத்தில் உருவான இலக்கியத்தின் சிந்தனைகள் பிற்காலப் படைப்புகளிலும் பல்வேறு வடிவங்களில் தொடர்வது இயல்பானது.

சில நேரங்களில் சொற்களும் தொடர்களும் நேரடியாக இடம்பெறலாம்; வேறு சில நேரங்களில் அடிப்படையான உணர்வும் சிந்தனையும் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றமடைந்து வெளிப்படலாம்.

இத்தகைய தொடர்புகளையே இலக்கியத் தாக்கம் என்று குறிப்பிடுகிறோம்.

கண்ணதாசன் இளமைப் பருவத்தில் முறையான கல்வியைத் தொடர முடியாத வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டவர்.

ஆனால், அவருக்குள் இருந்த இலக்கிய ஆர்வம் அவரைத் தொடர்ந்து வாசிக்கவும் சிந்திக்கவும் எழுதவும் தூண்டியது.

அவர் சார்ந்திருந்த இயக்கங்கள், வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள், கா. அப்பாதுரை போன்ற தமிழியல் மற்றும் வரலாற்றியல் அறிஞர்களுடனான தொடர்புகள் ஆகியவை அவரது சிந்தனைப் பரப்பை விரிவுபடுத்தியிருக்கின்றன.

பழந்தமிழ் இலக்கியங்களின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடு, அவற்றிலிருந்து பெற்ற மொழி வளம், கற்பனை, வருணனை ஆகியவை அவரது திரைப்பாடல்களில் பல இடங்களில் வெளிப்படுகின்றன.

இதனை விளக்குவதற்கு சங்க இலக்கியமான புறநானூற்றில் இடம்பெறும் பாரி மகளிரின் பாடலும் கண்ணதாசனின் திரைப்பாடலும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.

புறநானூற்றின் 112ஆம் பாடல் வேள்பாரியின் மகளிர் இருவரும் பாடியதாகக் குறிப்பிடப்படுகிறது.

தந்தை பாரியை இழந்து, கபிலரின் பாதுகாப்பில் வாழ்ந்துவந்த அவர்கள், ஒரு நிலவுக் காலத்தில் தங்களுடைய பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து பாடிய பாடலாக இது அமைந்துள்ளது.

கையறுநிலை உணர்வை வெளிப்படுத்தும் இப்பாடல், இழப்பின் துயரத்தை மிக எளிய சொற்களில் ஆழமாகப் பதிவு செய்கிறது.

“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.”

அன்று இதே நிலவு வானில் இருந்தது. அப்போது எங்களுடைய தந்தையும் எங்களுடன் இருந்தார். எங்கள் பறம்பு மலையும் எங்களுடையதாகவே இருந்தது.

ஆனால், இன்று நிலவு மட்டும் மாறாமல் இருக்கிறது; தந்தையும் இல்லை, மலையும் எங்களிடம் இல்லை.

காலம் மாறிவிட்டது; எங்கள் வாழ்க்கையும் மாறிவிட்டது என்ற ஆழமான இழப்புணர்வை பாரிமகளிர் வெளிப்படுத்துகின்றனர்.

நிலவு இங்கே வெறும் இயற்கைக் காட்சியாக இல்லை; கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் நினைவின் சாட்சியாக இருக்கிறது.

இந்த உணர்வைத் தனது திரையிசைப் பாடலில் கண்ணதாசன் முற்றிலும் புதிய சூழலில் மீட்டுருவாக்கியுள்ளார்.

1966ஆம் ஆண்டு வெளியான ’நாடோடி’ திரைப்படத்திற்காக அவர் எழுதிய பாடலில்,

“அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே – நான்
அடைக்கலம் தந்தேன் என் அழகை – நீ
அறிவாயே வெண்ணிலவே!
அந்த ஒருநாள் ஆனந்தத் திருநாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ!”

-என்று பாடுகிறார்.

புறநானூற்றில் தந்தையையும் மலையையும் இழந்த பாரி மகளிர் நிலவிடம் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

கண்ணதாசனின் பாடலில் காதலனின் பிரிவால் வாடும் காதலி அதே நிலவைப் பார்த்துத் தன்னுடைய பழைய காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறாள்.

பாத்திரங்கள் மாறுகின்றன; சூழல் மாறுகிறது; ஆனால், நிலவின் முன்னிலையில் கடந்த காலத்தை நினைத்து ஏங்கும் மனித மனத்தின் உணர்வு மாறவில்லை.

இதுவே ஒரு பழந்தமிழ் இலக்கியத்தின் உணர்வைத் தற்காலத் திரையிசைச் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றியமைக்கும் கண்ணதாசனின் படைப்பாற்றல்.

பின்னாளில் வெளிவந்த வேறு சில திரைப்பாடல்களிலும் ‘அற்றைத் திங்கள்’ என்ற சொற்றொடர் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால், கண்ணதாசனின் பாடலில் சங்கப் பாடலின் அடிப்படையான கையறுநிலை உணர்வு, புதிய காதல் சூழலுக்குள் இயல்பாகப் பொருந்தியிருப்பது தனித்துவமானது.

பழந்தமிழ் இலக்கியத்தின் ஒரு சொல்லை எடுத்தாள்வதோடு நின்றுவிடாமல், அதன் உணர்வுப் பின்னணியைத் தனது கற்பனையால் புதியதாகப் படைத்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, ’மாலையிட்ட மங்கை’ திரைப்படத்திற்காகப் பாரிமகளிரின் வாழ்க்கையை இசைநாடக வடிவில் வெளிப்படுத்தும் வகையிலும் கண்ணதாசன் பாடல் எழுதியுள்ளார்.

“திங்கள் முடி சூடுமலை தென்றல் விளையாடுமலை
பொங்கருவி வீழுமலை எங்கள் மலையே…”

என்று தொடங்கும் பாடல் பறம்பு மலையின் இயற்கை வளத்தையும் அதன் பெருமையையும் நினைவூட்டுகிறது. தொடர்ந்து,

“சுற்றி இந்த மலையினையே முற்றுகை இட்டாலும்
தொல்லை ஒரு அணுவுமில்லை அறிவீரே!”

என்று மலையின் பாதுகாப்பையும் பாரியின் பெருமையையும் வெளிப்படுத்துகிறார்.

மேலும்,

“முடியுடை மன்னவர் பாரி வழங்கிய
தென்னகம் என்னகம் வாழ்கவே!”

என்ற வரிகளில் பாரியின் கொடையுணர்வும் பெருமையும் வெளிப்படுகின்றன. இறுதியில்,

“வில்லெங்கே கணை எங்கே
வீர உணர்வெடுத்தச் சொல்லெங்கே?”

என்று கேட்கும் வரிகள் வீர உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் இசைநாடகத்தின் இயல்புக்கேற்ப உயிர்ப்பிக்கின்றன.

இவ்வாறு பாரிமகளிரின் துயரத்தை ஒரு காதல் பாடலின் உணர்வாக மாற்றுவதும், பாரியின் வரலாற்றை இசைநாடகப் பாடலாகப் படைப்பதும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமையின் இரண்டு வேறுபட்ட பரிமாணங்களாகும்.

பழந்தமிழ் இலக்கியத்தைப் படித்தவர்களுக்கே உரியதாக வைத்திருக்காமல், திரைப்படத்தைப் பார்க்கும் சாதாரண ரசிகர்களிடமும் அதன் உணர்வுகளைக் கொண்டுசேர்த்திருக்கிறார்.

இலக்கியம் என்பது புத்தகங்களின் பக்கங்களில் மட்டுமே வாழ வேண்டியதில்லை;

அது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் இசையிலும் உரையாடலிலும் இடம்பெற முடியும் என்பதை அவரது பாடல்கள் உணர்த்துகின்றன.

000

               கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களைத் திரும்பிப் பார்க்கும்போது, அவற்றின் நீடித்த வாழ்வுக்குக் காரணம் வெறும் இசையோ, இனிமையான சொற்களோ மட்டுமல்ல என்பது புரிகிறது. அவற்றுக்குள் மனித வாழ்க்கையின் அனுபவங்கள் இருக்கின்றன.

பழந்தமிழ் இலக்கியத்தின் நினைவுகள் இருக்கின்றன. எளிய மக்களின் மொழி இருக்கிறது. ஆழமான தத்துவச் சிந்தனைகள் இருக்கின்றன.

காதலின் நாணமும் பிரிவின் வலியும் இருக்கின்றன. தோல்வியுற்ற மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆறுதலும் இருக்கிறது.

இலக்கியத்தை எளிமைப்படுத்துவது என்பது அதன் ஆழத்தைக் குறைப்பதல்ல; அதன் பொருளை இன்னும் பலரிடம் கொண்டு சேர்ப்பதாகும்.

அந்தப் பணியைத் தனது திரையிசைப் பாடல்கள் வழியாகக் கண்ணதாசன் மிக இயல்பாகச் செய்திருக்கிறார். அதனால் அவர் என்றும் நம் நினைவுகளில் வாழ்கிறார்.

  • மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.
You might also like