பெரும் வெற்றி பெற்ற ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் படங்கள் எல்லாம் சர்ச்சையிலேயே முளைக்கின்றன.
‘தேவர்மகன்’, ’விசுவரூபம்’ பழைய உதாரணங்கள். இப்போது – ‘சண்டியர்’
2003 ஆண்டு கமல், ‘சண்டியர்’ என்ற பெயரில் புதுப்படத்துக்கு பூஜை போட்டார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அவரது அறிவுறுத்தலின் பேரில் அந்தத் தலைப்பை எடுத்துவிட்டு, ‘விருமாண்டி’ என பெயர் வைத்தார் கமல்.
இந்தச் சூழலில் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ என டைட்டில் சூட்டியுள்ளார் கமல்.
23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையை, கிருஷ்ணசாமி இப்போது பேட்டியாக கொடுத்துள்ளார்.
அவர் கூறியது :
“மூத்த நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் சூட்டி இருக்கிறார். 2003-ல் இதே பெயரை வைத்தபோது இரு சமூகங்களிடம் பிரச்சனையை ஏற்படுத்தியது.
இந்தத் தலைப்பை கைவிடக் கூறி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவுரையை ஏற்று ‘சண்டியர்’ படப் பெயரை கமல்ஹாசன் கைவிட்டார்.
இப்போது 23 வருடங்கள் கழித்து ‘சண்டியர்’ என அதே பெயரில் படம் எடுப்பதாக கமல்ஹாசன் சொல்லி இருக்கிறார்.
சாதிய மோதலைத் தூண்டக் கூடிய வகையில் அமைந்த பெயர் அது. ‘சண்டியர்’ என்ற பெயரில் படம் தொடங்கப்படக் கூடாது.
கமல்ஹாசனிடம் நீங்கள் எடுங்கள், நாங்கள் பின்புலமாக இருக்கிறோம் என யாரோ அவருக்குச் சொல்லி இருக்கின்றனர்.
ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட பெயரை அனுமதித்தது தயாரிப்பாளர் சங்கத்தின் தவறு.
‘சண்டியர்’ பெயரைத் திரும்பப் பெற தயாரிப்பாளர் சங்கத்தை நேரில் சென்று வலியுறுத்துவேன்.
கமல்ஹாசனை அழைத்து முதல்வர் விஜய் அறிவுரை சொல்ல வேண்டும். அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாகவே இந்த ‘சண்டியர்’ படம் இருக்கிறது.
‘சண்டியர்’ என்ற பெயர் தாங்கிய படத்தை எடுக்க விடமாட்டோம்.
சட்ட ரீதியாகவும் போவோம், அனைத்து வழிகளிலும் போராடுவோம். கமல்ஹாசன் ‘சண்டியர்’ என்ற படத்தை எடுத்தால் அவர் தமிழகத்தை விட்டே ஓட வேண்டி இருக்கும்” என்று கிருஷ்ணசாமி சற்று காட்டமாகவே பேசினார்.
தலித் மக்களின் நலனுக்கு போராடும் இயக்கத்தை கையில் வைத்துள்ள அவர், கோவையைச் சேர்ந்தவர்.
1990-களில் தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளத்தில் ஒரு கலவரம் மூண்டபோதுதான் கிருஷ்ணசாமி தென்மாவட்ட மக்களுக்கு அறிமுகம்.
அவருக்கு முன்பே தலித் மக்களுக்காக அந்தப் பகுதியில் இயக்கம் நடத்தி வந்தவர்கள், ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோர்.
1996 ஆம் ஆண்டு கொடியங்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடராம் சட்டன்றத் தொகுதியில் தனித்து போட்டியிட்டு ஜெயித்தார் கிருஷ்ணசாமி.
அதன்பின் அதிமுக கூட்டணியில் இணைந்து இரண்டாம் முறை வெற்றி கண்டார்.
அதன்பின், தனித்து நின்றாலும், கூட்டணியில் நின்றாலும் தோல்விகளைச் சந்தித்து வருகிறார்.
“தலித் மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்காகவே அவர் ‘சண்டியர்’ விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் கமல் சாதுர்யமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி கமல் ‘சண்டியர்’ படப்பிடிப்புத் தளத்தில் தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டினார்.
அவரை இடதுசாரி தலைவர்கள் சண்முகம், வீரபாண்டியன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.
அவர்கள் முன்பு கமல் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அவர்களுடன் மதிய உணவும் அருந்தினார்.
இதற்கு முன்பு கமல், அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் விருந்து வைத்ததில்லை.
இதில் என்ன சாதுர்யம் என கேள்வி எழும்:
அன்று கமலை சந்தித்து வாழ்த்து சொன்ன அனைத்து தலைவர்களும் பட்டியலின ஆளுமைகள்.
‘சண்டியர்’ விவகாரத்தில் தலித் தலைவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்ட கமல், கிருஷ்ணசாமியை தனிமைப்படுத்தி விட்டார் என சினிமா ஆய்வாளர்களும் அரசியல் நிபுணர்களும் ஒரு சேரச் சொல்கிறார்கள்.
“இந்த விவகாரத்தில் தாங்கள் கமல் பக்கமே இருப்போம்” என்று விசிக உறுதியுடன் சொல்லி உள்ளது.
அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கை :
“இது கமல்ஹாசன் அவர்களின் படைப்பு சார்ந்த பிரச்சனை; இதனை அவரே எதிர்கொள்வார்.
இதில் உண்மையில் மக்களுக்குச் சமூக ரீதியான பாதிப்பு ஏதேனும் இருப்பதாக உணர்ந்தால், நிச்சயமாக இது குறித்து கமல்ஹாசனிடம் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசுவார்.
அதேவேளையில், ஒரு படைப்பாளியின் நியாயமான படைப்புச் சுதந்திரத்திற்கோ அல்லது உரிமைக்கோ கேடு விளைவிக்கும் நோக்கில் யாரேனும் செயல்பட்டால், அதை அவர் எதிர்கொள்ளத் துணையாக நிற்பதே ஜனநாயகப் பண்பு கொண்டவர்களின் அறம்” என விசிக தங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
இதனிடையே, ‘சண்டியர்’ ஷூட்டிங்கில் பிறந்தநாள் கொண்டாடிய கமலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருப்பதையும் இங்கே நினைவு கூறவேண்டும்.
ஒரு போனஸ் தகவல்.
கமல் கைவிட்ட ‘சண்டியர்’ என்ற பெயரில் புதுமுகங்கள் நடித்து 2014 ஆம் ஆண்டு ஒரு படம் வெளிவந்தது.
அப்போது அந்தத் தலைப்புக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.
