இருட்டைச் சுமந்துகொண்டிருக்கும் அறிவுச்சுடர்!

ஒரு கவிதை என்ன செய்யும்? என்ற கேள்விக்கு, அது என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதை உணர்த்துகிறது கவிஞர் அமுதகீதனின் ‘இருட்டுச் சுமை’.

ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியரான அமுதகீதன், சமகாலக் கல்விப்புலச் சூழலை உள்வாங்கி, சிறுசிறு சொற்களால் பல்வேறு உள-உணர்வுகளையும் சமூக உண்மைகளையும் உடைத்து உருவகித்திருக்கும் கவிதை இது.

இக்கவிதையை வாசித்தபோது, அதன் வரிகளுக்குள் பொதிந்திருக்கும் வலியும் விமர்சனமும் என்னை வெவ்வேறு திசைகளில் சிந்திக்கத் தூண்டின.

கவிதைக்குக் கருத்துரை எழுதத் தொடங்கினால், அதன் கதை வேறு பாதைகளையும் பள்ளங்களையும் காட்டுகிறது.

இலக்கியத்தின் தண்டவாளப் பாதை அத்தனை நேர்கோட்டில் அமைந்துவிடுவதில்லை போலும்!

ஆசிரியர்கள் ‘ஆசு’ களைப்பவர்கள். அவர்கள் மீதான குற்றங்குறைகளுக்குக் கலைவடிவம் கொடுப்பதில்லை என்றொரு பொதுவிதி உண்டெனில், அதனைத் தம் கவிதைகளின் வழியே பொறுப்புணர்வுடன் மீறியிருக்கிறார் கவிஞர் அமுதகீதன்.

இது ஆசிரியர்களைக் குற்றஞ்சாட்டும் கவிதை அல்ல; ஆசிரியர்களின் உள்ளார்ந்த வலிகளையும், கல்வியமைப்பின் அதிகார இருட்டையும், அந்த இருட்டைச் சுமந்துகொண்டிருக்கும் அறிவுச்சுடரின் குறையொளியையும் பேசும் கவிதை.

கவிதையையும், அது சுமந்திருக்கும் இருட்டையும், இருட்டுக்குள் ஒளிரும் அறிவுச்சுடரின் குறையொளியையும் இனி விரிவாக விவரிப்போம்.

முதலில் கவிதைகள்…

பிட்டுக்கு மண் சுமந்து

பிரம்படி படும்

பொம்மைகள்

ஆசிரியர்கள்

0

 

கெளரமான

சம்பளம்

மானங்கெட்ட

பொழப்பு

 

ஆசிரிய

அடிமைகள்

0

 

கிளிப்பிள்ளைகள்

ஊதுகுழல்கள்

கண்ணைக் குத்தும்

சொந்த நகங்கள்

 

கோடரிக் காம்புகள்

கோயபல்ஸ் கள்

அய்யோ பாவம்

ஆசிரியக் கருத்தாளர்கள்

0

 

ஆசிரியம்

என்கிற

வேதாளத்தை

சுமந்து

கொண்டிருக்கிறோம்

 

கேள்விகளுக்கு

பதில்

சொல்லாவிட்டால்

சுக்கல்

சுக்கலாகும்

குடும்பத் தலைகள்

0

ஆசிரியன்

அதிகார

அழுக்கு மூட்டை களைச்

சுமக்கும் போது

அது வாகிறான்

 

உதைக்கத் தெரிந்தவை

முதுகில்

ஏற்ற முடியாது

இருட்டுச் சுமை

  • அமுதகீதன்.

 

ஆசிரியர் என்பவர் அறிவொளி ஏந்தியவர் என்ற பொதுப்பிம்பத்தைத் தாண்டி, அதிகாரத்தின் இருட்டுச் சுமைகளைத் தம் முதுகில் சுமக்க நேரும் ஓர் அவல மனிதராக ஆசிரியரை முன்னிறுத்துகிறது இக்கவிதை.

“பிட்டுக்கு
மண் சுமந்து
பிரம்படி படும்
பொம்மைகள்
ஆசிரியர்கள்”

– என்ற தொடக்க வரிகளே கவிதையின் மையத்தைத் திறந்துவிடுகின்றன.

மண் சுமந்த மாணிக்கவாசகரின் புராணப் படிமத்தை ஆசிரியரின் இன்றைய அவலத்தோடு இணைக்கும் கவிஞர், ஆசிரியரை உயிரற்ற பொம்மைகளாக மாற்றும் அதிகார அமைப்புகளைக் கேள்விக்குட்படுத்துகிறார்.

“கௌரவமான சம்பளம்

மானங்கெட்ட பொழப்பு”

என்ற முரண், ஆசிரியர் பணியின் சமூக மதிப்புக்கும் நடைமுறை அவமதிப்புக்கும் இடையிலான இடைவெளியைச் சு(ட்)டுகிறது.

“கிளிப்பிள்ளைகள்

ஊதுகுழல்கள்”

என்ற உருவகங்கள் ஆசிரியர்களின் சிந்தனைச் சுதந்திரம் பறிக்கப்படுவதையும்,

“கண்ணைக் குத்தும்

சொந்த நகங்கள்”

என்ற வரிகள் அதிகாரத்தின் கருவிகளாகத் தங்களை மாற்றிக்கொள்ளும் ஆசிரியர்களின் சுயமுரண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக,

“ஆசிரியம்
என்கிற
வேதாளத்தை
சுமந்து
கொண்டிருக்கிறோம்”

என்ற வரிகள் ஆசிரியப் பணியின் உள்ளார்ந்த நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.

கல்வி அறிவைப் பகிர்வதோடு நில்லாமல், கேள்விகளுக்குப் பதில்சொல்ல வேண்டிய பொறுப்பையும் பதில் சொல்ல முடியாதபோது குடும்பத்தின் வாழ்வாதாரமே அச்சுறுத்தப்படும் நிலையையும் இவ்வரிகள் சமூகப் பரிமாணமாகுக்கின்றன.

“உதைக்கத் தெரிந்தவை

முதுகில் ஏற்ற முடியாது”

என்ற இறுதி வரிகள், அதிகாரத்தின் வன்முறைக்கு எதிரான ஓர் அமைதியான எதிர்ப்புக் குரலாக ஒலிக்கிறது.

‘இருட்டுச் சுமை’

ஆசிரிய வாழ்வின் இருளையும் அதன்வழி கல்வி அமைப்பின் இருளையும் சுமந்து இன்னும் கருகருக்கிறது அடர் இருளென.

– மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.

You might also like