ஸ்டார்ட் அப் துறையில், தங்களின் புத்தாக்க சிந்தனை மூலம், இளைஞர்கள் பலரும் புதிய பயணத்தைத் துவங்குகின்றனர்.
வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் தங்களின் வணிகச் செயல்பாடுகள் மூலம் சமூகப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயலும் புதிய தலைமுறை படைப்பாளிகளாக இவர்கள் உள்ளனர்.
இத்தகைய ஒரு சுற்றுச்சூழல் தொழில் முனைவோர் தான் ஆரிரரோ டாய்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வசந்த் – நிஷா தம்பதியினர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் பிறந்தது முதலே மின்னணு சாதனங்களுடன் உறவாடத் தொடங்குகின்றனர். இதனால் அவர்களின் சிந்தனை திறன், கண்பார்வை ஆகியவை பாதிப்படைகிறது.
மூன்று வயதிற்குள் குழந்தைகளின் 80% மூளை வளர்ச்சி நிறைவு பெறுவதாக அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த வயதில் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் கடிக்கத் தொடங்கும் குழந்தைகளுக்காகவே அக்காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால், தற்போது மலிவான பிளாஸ்டிக்கிலும் அபாயகரமான வண்ணங்களிலும் செய்யப்பட்ட பொம்மைகளே கடைகளில் குவிந்துள்ளன.
இந்நிலையை மாற்ற, மர பொம்மைகள் உற்பத்தியில் கால் பதித்துள்ள நிறுவனம்தான் ஆரிரோ டாய்ஸ்.
இங்கு தயாரிக்கப்படும் விதவிதமான பொம்மைகள், குழந்தைகள் மட்டுமின்றி அனைவரையும் ஈர்ப்பதாகக் கூறப்படுகிறது.
காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளரான நிஷாவிற்கு குழந்தைகளுக்கான கல்வி முறையில் ஆர்வம் ஏற்பட்டதால் மாண்டிசோரி பயிற்சியினைப் பெற்றார்.
ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தவர், தன் குழந்தைக்கு ஏற்பட்ட ஒவ்வாமை பிரச்சினை காரணமாக, தீங்கு விளைவிக்காத மர பொம்மைகளின் தேடலில் ஈடுபட்டார்.
வெளிநாடுகளில் பச்சிளம் குழந்தைகளுக்காகவே டீதர் பொம்மைகள் விற்கப்படுகின்றன.
இதனை வென்னிப் பல் பொம்மை என்றும் கூறுவர். குழந்தைக்கு பற்கள் முளைக்கும் காலத்தில் ஏற்படும் ஈறு வலியைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் பிரத்தியேக பொம்மைகளே டீதர் என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றைக் குழந்தைகள் மெல்லும்போது ஈறுகளுக்கு மென்மையான அழுத்தம் கிடைத்து வலி மற்றும் அரிப்பு குறைகிறது.
இணையத்தில் பார்த்து அதேபோன்ற பொம்மையினை தன் குழந்தைக்காக வடிவமைத்தார் நிஷா.
இதன் பயன்பாடு பற்றி அறிந்த நண்பர்கள் தங்களுக்கும் வேண்டுமென கேட்டபோது தான் இதற்குண்டான சந்தை நிலவரத்தை கண்டறிந்தார். 2018 ஆம் ஆண்டு இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
உலகம் முழுவதும் உள்ள பொம்மை உற்பத்தி செய்யும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு கண்காட்சிகளிலும் பங்கு பெற்றார்.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் ஒவ்வொரு வருடமும் பொம்மை திருவிழா நடைபெறுகிறது. அங்கும் சென்று தர நிர்ணய முறைகளை கேட்டறிந்தார்.
ஒவ்வொரு நாட்டின் பாரம்பரியமும் பொம்மைகள் வடிவில் உருபெற்றிருந்தது.
இந்த வணிகத்தில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதையும் காணமுடிந்தது. இந்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பொம்மை உற்பத்திக்கான ஸ்டார்ட் அப் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள, கைதேர்ந்த கைவினைக் கலைஞர்களை ஒன்றுதிரட்டி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
கிலுகிலுப்பை, நட்சத்திரங்கள், பால் பாட்டில்கள் போன்ற குழந்தைகளுக்கான பொருட்கள், மர பொம்மைகள் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களின் வழியே விற்பனை செய்யப்பட்டன.
குறுகிய காலத்திலேயே இளம் தாய்மார்கள் மத்தியில் இந்த பொம்மைகளுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கப் பெற்றது. இத்தகைய பொருட்கள் பற்றிய அறிமுகமே பலருக்கும் அப்போதுதான் கிடைத்தது.
மேலும் இதற்கென பிரத்யேக வலைத்தளம் உருவாக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் முழு நேரமாக ஈடுபடத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து பொம்மைகளின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
குழந்தைகளின் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத பொம்மைகள் என்பதால் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கின.
இன்று 80-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பிரத்தியேக வடிவமைப்பு செய்து தருகின்றனர். இவை மட்டுமன்றி நம் மரபிலிருந்து அழிந்துபோன பொம்மைகளையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இவர்களின் நிறுவனம்.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்திருப்பது இவர்களின் சிறப்பு. சமூக ஊடகங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
10 வயது வரைக்குமான குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், கற்றல் குறைபாட்டை சரி செய்ய உதவும் பொம்மைகள், பாரம்பரியத்தை நவீன வடிவில் விளக்கும் பொம்மைகள் என பலவற்றையும் இவர்களிடம் பெற முடியும்.
அதோடு, பாலர் பள்ளிகளுக்கான சிறப்பு கற்றல் உபகரணங்களையும் தயாரிக்கின்றனர்.
அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என விற்பனையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அனுஷ்கா ஷர்மா முதல் ஸ்லோகா அம்பானி வரை பல துறை பிரபலங்களையும் வாடிக்கையாளராகக் கொண்டுள்ள இந்நிறுவனம் 20 கோடி ரூபாய்க்கும் மேலான ஆண்டு வருவாயை ஈட்டுகிறது.
உன்னத நோக்கத்துடன் இயங்கும் இவ்வணிகத்தை உலகளாவிய வர்த்தகமாக மாற்றுவது, நலிந்த கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, குழந்தைகளின் கற்றல் முறைகளை மேம்படுத்துவது என்கிற பல்வேறு கனவுகளுடன் தன் பயணத்தைத் தொடர்கிறது ‘ஆரிரோ டாய்ஸ்’ நிறுவனம்.
S. வாணி
#ஆரிரரோடாய்ஸ் #மரபொம்மைகள் #மரப்பொம்மைகள் #குழந்தைகள்பொம்மைகள் #சுற்றுச்சூழல்நட்புபொருட்கள் #ஸ்டார்ட்அப் #பெண்தொழில்முனைவோர் #கைவினைக்கலைஞர்கள் #பாரம்பரியபொம்மைகள் #குழந்தைகள்கல்வி #ArirroToys #WoodenToys #EcoFriendlyToys #SustainableToys #StartupIndia #WomenEntrepreneurs #ToyManufacturing #MontessoriToys #TeetherToys #TraditionalToys #HandmadeToys #IndianStartups
