கலைவாணர் நடித்த ஒரு படத்தில் கருத்தாழமிக்கக் காட்சி.
என்.எஸ்.கேவும் இன்னொருவரும் பேசிக் கொள்கிற காட்சி.
“அண்ணே! நம்ம செல்லமுத்து நடக்கிறது சரியில்லை…” என்பார் ஒருவர்.
என்.எஸ்.கே கேட்பார்: “ஏன் கால்ல கட்டியா?”
“இல்லண்ணே! நடத்தை சரியில்லைன்னு சொல்ல வந்தேன்!”
“ஏன் என்ன ஆச்சு?”
“பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பி வைச்சுட்டு யாரையோ கொண்டாந்து வீட்டில வைச்சிருக்காராம். நைட்டு ரெண்டு மணி வரைக்கும் லைட் எரியுதாம்.
இனி அவரு உருப்பட்ட மாதிரிதான்” என்று சொல்லி அந்த நபர் சிரிக்க, கூடவே என்.எஸ்.கேவும் போலியாக சிரித்துவிட்டு “அப்ப இனி செல்லமுத்து கதை குளோஸ்” அப்படித்தானே!
“ஆமாண்ணே! குளோஸ்தான்…”
“நல்லா தெரியுமா?…”
“தெரியும்ணே…”
“சரி! தம்பி! இப்ப உன் சட்டைப் பையிலே என்ன வைச்சிருக்கே?”
“கொஞ்சம் சில்லரைக் காசு, பேப்பர், பேனா இருக்குண்ணே!”
“அப்படிச் சொல்லக்கூடாது தம்பி! சில்லரைன்னா எவ்வளவு சில்லரை, பேப்பர்னா எத்தனை பேப்பர், அதில என்ன எழுதியிருக்கு. கரைக்டா சொல்லணும்.”
“சே! அப்படிச் சொல்லணுமா? – என்று சட்டைப் பைக்குள் கையைவிடப் போனவரைத் தடுக்கும் கலைவாணர்,
“தம்பி! பாக்காம சொல்லணும் தம்பி”
“அதெப்பிடிண்ணே! பாக்காம சொல்ல முடியும்?”
“சே! உன் சொந்த சட்டைப் பையில் இருக்கிறதையே உன்னால பாக்காம சொல்ல முடியல. ஆனா, யாரோ செல்லமுத்து வீட்டுக்குள் நடக்கிறது மட்டும் உனக்கு தெளிவா தெரியுதா?”
– என்று ஆரம்பித்து அந்த நண்பருக்கு ‘வதந்தி’ பரப்பக்கூடாது என்று நல்ல புத்தி சொல்லியிருக்கிறார் நம் என்.எஸ்.கே.
அவர் காமெடியன் மட்டுமல்ல… கருத்து சொல்லும் கலைஞர் மட்டுமல்ல… விஞ்ஞானம் பேசும் நாகரிகக் கோமாளியும் கூட…’’
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைப் பற்றி நடிகர் விவேக் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
