

அக்டோபர் 2-ம் தேதி அன்று தவெக அரசு அதற்கு முன்பே அறிவித்தபடி, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை முன்பிருந்ததைவிட விரிவுபடுத்தி இருக்கிறது.
இத்தகைய அறிவிப்பு வெளிவந்த பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் ஏறும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
இந்த அறிவிப்பை அமல்படுத்திய தவெக அரசுக்கும் குறிப்பாக தமிழக முதல்வர் விஜய்க்கும் நன்றி தெரிவிக்கிறார்கள்.
இதை தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் சமூக வலைதளங்கள் கொண்டாடவும் செய்கின்றன.
ஆனால், கொண்டாட்டங்களுக்குப் பின்னால் இத்தகைய இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
இதை உணர்த்தும் விதத்தில் தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் மதுரை, கோவை, சென்னை என்று பல்வேறு பகுதிகளில் இந்த இலவசப் பேருந்து பயணத் திட்டத்திற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அவர்கள் தரப்பில் என்னதான் சொல்கிறார்கள்?
தமிழகம் முழுக்க பல லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் மட்டும் ஏறத்தாழ ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன.
ஏற்கனவே பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களுடைய விசேஷ ஆப் மூலம் இயங்குவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர்கள், அதாவது இயங்காத மீட்டர்களில் பொருத்தப்பட்ட ஆட்டோக்களை ஓட்டுகிறவர்கள் தங்கள் தரப்பு கொதிப்பை ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்போது அவர்களுடைய கொதிப்பு பன்மடங்காகி இருக்கிறது. முன்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில குறைந்தபட்ச தூரத்திற்குச் செல்வதற்கு இத்தகைய ஆட்டோக்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தற்போது இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்ததன் மூலமாக இத்தகைய ஆட்டோவில் செல்வதற்கு யாரும் விரும்பாத நிலையில், தாங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் இத்தகைய நிலை தொடர்ந்தால் நாங்கள் என்னதான் செய்வது என்கின்ற கொதிப்பும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.
இதை அவர்கள் வெவ்வேறு பேட்டிகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
உண்மையில் பார்க்கப்போனால் ஒவ்வொரு ஆட்டோவிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தாலும் அந்த மீட்டர் நீண்ட காலமாக செயல்படவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்திற்கு பிறகு ஆட்டோவில் பொருத்தப்பட்டிருக்கிற மீட்டருக்கான கட்டணம் சரிவர நிர்ணயிக்கப்படாத நிலையில், எடப்பாடி ஆட்சியும் ஸ்டாலின் ஆட்சியும் இப்போது வந்த விஜய் தலைமையிலான ஆட்சியும் எங்களைக் கண்டுகொள்ளாமலேயே போனால், நாங்கள் என்னதான் செய்வது?
அதே சமயத்தில் எங்களுக்கு குறைந்தபட்ச வருமானம் வருவதற்கு காரணமாக அமைந்த பெண்களை இலவசப் பேருந்தில் ஏற்றி பயணம் செய்ய வைத்தால், எங்களைப் போன்ற ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன செய்ய முடியும்?
லட்சக்கணக்கானோர் இந்த ஆட்டோவை வாழ்வாதாரமாக நம்பி இருக்கிறோம்.
நாங்களும் இந்த அரசியலில் மாற்றத்தை விரும்பி தவெக அரசுக்கு வாக்களித்திருக்கிறோம்.
இதுவரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த எந்த அரசும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை.
நமக்கு பக்கத்தில் உள்ள அண்டை மாநிலங்களில் ஆட்டோவுக்கான உரிய கட்டணம் முன்வைக்கப்பட்டு, அங்கு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலை இருக்கிறது.
இதை கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பார்க்க முடிகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருக்கிற மீட்டருக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல், செயலற்ற நிலையில் வைக்கப்பட்டிருப்பதை எவ்வளவு காலம் நாங்கள் பொறுத்துக்கொண்டிருப்பது?
சாதாரண மக்களுக்காக பாடுபடுவதாக சொல்கிற தமிழக முதல்வர் விஜய், தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய எங்களைப் போன்ற லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களையும், இந்த ஆட்டோ ஓட்டுநர்களின் பின்னிருக்கிற அவர்களது குடும்பத்தினரின் பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எங்களுக்கு உரிய வழிவகை செய்வாரா?
நாங்கள் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை எதிர்க்கவில்லை, அதன் பாதிப்பை நாங்கள் தான் அனுபவிக்கிறோம்.
எங்களுக்கு இத்தகைய பாதிப்பு வருகிறபோது, இந்த ஆட்டோவில் மீட்டர்கள் மறுபடியும் உரிய கட்டணத்தோடு செயல்படுவதற்கான ஒரு சூழ்நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்தால், நாங்கள் போராட வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தப் போராட்டத்தை நீட்டிப்பதும், அதைத் தடுப்பதும் தற்போதையே அரசின் கையில்தான் இருக்கிறது.
ஆனால், இந்த விஷயத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன செய்துவிட முடியும் என்று ஒருவேளை அரசுத் தரப்பில் நினைத்தால், இதே சென்னை மாநகரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா சாலை முழுக்க பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களை நிறுத்தி நடத்திய போராட்டத்தை யாரும் மறந்துவிட முடியாது.
ஆட்டோ ஓட்டுநர்களின் குரலை தவெக அரசு பரிசீலிக்கும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை தவெக அரசு ஏற்படுத்த வேண்டும்.
– யூகி
