இடைத்தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?

திணிக்கப்பட்ட தேர்தல் என்று எதிர்க்கட்சிகளால் சொல்லப்பட்ட இந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து வழக்கம் போலவே பெரும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
 
தவெக வெற்றி பெறும் என்பது சிலரால் கணிக்கப்பட்டாலும் எப்படியும் தவெக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகள் சார்பாக பேசிய ஊடகங்களும், முதல்வர் விஜய்க்கும் தவெகவுக்கும் எதிரான பிரச்சாரத்தை வழக்கம் போலவே செய்து கொண்டிருந்தன.
 
ஆனால், அதில் குறிப்பிட்ட அளவுக்கு மீறி கடுமையான பிரச்சாரம் எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்பட்டதால், இரு தொகுதிகளிலும் இரண்டு நாட்கள் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.
 
தவெகவின் இந்த வெற்றி அடுத்தடுத்து தமிழக அரசியலில் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்த பேச்சுக்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த சமயத்தில், தேர்தல் களத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் எந்த விதத்தில் செயல்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
 

தவெக:

இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே யாரை வேட்பாளராக போடப் போகிறார்கள் என்று வெவ்வேறு யூகங்கள் வழக்கம்போல ஊடகங்களில் எழுந்து கொண்டிருந்தன.
 
அப்போது திடீரென்று அதே தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிறகு ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த இரு வேட்பாளர்களுக்கும் மறுபடியும் இந்த தேர்தல் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது பலத்த விமர்சனத்திற்குள்ளானது.
 
ஆக, தனக்கான எதிர்வினையை தானே தவெக தேடிக்கொண்ட விதத்தில் இந்த வேட்பாளர் தேர்வு அமைந்திருக்கிறது.
 
இதைவிட இதில் சம்பந்தமில்லாத ஒரு தவெக வேட்பாளரை முதல்வர் விஜய் தேர்வு செய்திருந்தால், இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதும் மிக எளிதானதாக இருந்திருக்கும்.
 
ஆனால், ஏற்கனவே அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்ற அதே வேட்பாளர்கள் மீது, பெட்டி வாங்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அந்த வேட்பாளர்கள் பொது மேடையிலேயே அழக்கூடிய சூழ்நிலையும் உருவாகி பல சென்டிமெண்ட்டான காட்சிகள் இந்தத் தேர்தலில் அரங்கேறின.
 
காட்சிகள் அரங்கேறுவதற்கு ஒரு விதத்தில் காரணமாக அமைந்திருப்பது தவெகதான்.
 
என்னதான் அதே தொகுதியில் போட்டியிடுவதை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் நியாயப்படுத்தினாலும், அழுகிற அளவுக்கு போனாலும்கூட அந்த இரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் இருவருடைய தேர்வையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.
 
இந்த வேட்பாளர் தேர்விலிருந்து தவெக பின்வாங்க முடியாத நிலையில், விஜய் இரு தொகுதிகளுக்கும் நான்கு நாள் பிரச்சாரம் மேற்கொண்டது இதை ஈடு செய்யும் விதத்தில் அமைந்திருந்தது.
 
இதுவரை இல்லாத அளவில் அவர் கிராமப்புறங்களில் இறங்க வேண்டி இருந்தது, வயலில் டிராக்டர் ஓட்ட வேண்டி இருந்தது, டீக்கடையில் அமர்ந்து டீ குடிக்க வேண்டி இருந்தது.
 
இப்படி இதுவரை இல்லாத அளவுக்கு தரை மட்டத்துக்கு இறங்கி, சில வேலைகளை முதல்வர் விஜய் செய்ய வேண்டி இருந்தது.
 
தவெகவின் பல்வேறு அமைச்சர்களும், அந்த இரு தொகுதிகளிலும் தங்கியிருந்து சளைக்காமல் உழைத்தார்கள்.
 
ஆனால், அவர்கள் தரப்பில் சொல்லப்படும் முக்கிய விஷயம், தாங்கள் எந்த விதத்திலும் தொகுதியில் உள்ள வாக்காளர் பெருமக்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தாலும், தவெகவுக்கு ஆதரவளித்து இதே தொகுதியில் போட்டியிட்ட பொதுவுடமைக் கட்சிகள் அதற்கு நேர் எதிரான கருத்தை முன்வைத்தன.
 
வாக்காளர்களுக்கு தவெக பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான சண்முகம்.
 
அதைத் தொடர்ந்து  திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இதே விதமான குற்றச்சாட்டை முன்வைத்த போதும் ஆதவ் அர்ஜுனா போன்ற அமைச்சர்கள் சவால்விட்ட நிலையில், இறங்கி வேலை பார்த்ததும் இதே தொகுதியில் நடந்தேறியது.
 
ஊடகங்களில் என்னதான் கடுமையான எதிர்வினைகள் வெளிவந்தாலும் கூட, தேர்தலுக்கு முந்தின நாள் கூட ஒரு தொகுதியின் பெண் வேட்பாளர் பேசியதாக தவெகவை குற்றம் சொல்லி பேசின ஒரு வீடியோ வெளியாகி அதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
ஆக, இவ்வளவு சங்கடக்களுக்கிடையில், தவெக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாவிட்டாலும், குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
 
அதேசமயம் இனி, இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் ஐந்து தொகுதிகளிலும் இதேவிதமான அணுகுமுறையைதான் தவெக கையாளுமா என்பது குறித்த ஆலோசனையை தவெக செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.
 
குறிப்பாக வேட்பாளர் தேர்வில் சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால், அதுவே அவர்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரமாக அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது.
 
எதிர்க்கட்சிகள் வெல்வதற்கான வழியை தவெகவே தானாக வலிந்து கொடுத்துவிடுகிற மாதிரிதான் இந்த வேட்பாளர் தேர்வு அமையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
திமுக:
 
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே தேர்தலில் திமுக போட்டியிடுமா என்பது குறித்த சில சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், திமுக தரப்பிலிருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் பரப்புரையில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார்கள்.
 
அவர்களது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் களத்தில் இறங்கி இதுவரை இல்லாத அளவுக்கு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். 
 
முன்னாள் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினும் அதே தொகுதியில் ரோட்-ஷோ மேற்கொண்டு தனது பரப்புரையையும் செய்து முடித்தார்.
 
இதனிடையே, மு.க.ஸ்டாலின், ஒரு பெண் வேட்பாளரை உடல் மொழியை குறிக்கும் விதத்தில் பேசியது பெரும் சர்ச்சையானது.
 
ஆனாலும் திமுக தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மிகக் கடுமையான பிரச்சாரத்தை தவெக மீது தொடர்ந்து முன்வைத்தபடியே இருந்தார்கள்.
 
வழக்கத்தை விட தொலைக்காட்சிகளில் திமுகவுக்காக ஆஜராகும் வக்கீலைப் போல பேசும் பேச்சாளர்கள் தங்களது குரலை இன்னும் கூட்டி தொலைக்காட்சி விவாதங்களில் பேசியதையும் பார்க்க முடிந்தது.
 
கூட்டணி பலமின்றி தனித்து நின்ற திமுக தற்போது இரண்டு தொகுதிகளில் தவெகவுக்கு அடுத்த அளவில் இரண்டாவதாக வந்திருப்பது திமுகவின் பலம் இன்னும் தொடர்ந்து இருப்பதைத் தான் உணர்த்துகிறது.
 
அதாவது கூட்டணி பலம் இல்லாமலேயே தங்களது சுயமான பலத்தில் திமுக இன்னும் நின்று கொண்டிருக்கிறது என்பதைதான் இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தி இருக்கிறது.
 
அதிமுக :
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பலரிடமும் எழுந்த முதன்மையான கேள்வி இந்தத் தேர்தலை அதிமுக எப்படி எதிர்கொள்ள போகிறது? என்பதுதான்.
 
ஏனென்றால் தவெக தரப்புக்கு சென்ற இரண்டு பேர்களுமே அதிமுகவில் ஏற்கனவே இதே தொகுதியில் போட்டியிட்டவர்கள்.
 
போட்டியிட்ட அவர்கள் மீது, பெட்டி வாங்கியதாக மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
 
இந்தத் தொகுதிகளுக்கான பரப்புரை நடந்து கொண்டிருந்தபோதே, அதே பகுதியை சார்ந்த முக்கிய பிரமுகர்களான செம்மலை போன்ற மூத்த தலைவர்களே தவெகவுக்குச் சென்றதும் நடந்தது.
 
அதேசமயத்தில் அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கும் பல்வேறு பிரமுகர்களுக்கும் தவெகவில் உரிய கட்சிப் பொறுப்பும் வழங்கப்பட்டதும் நடந்தது.
 
இதையடுத்து அதிமுகவிலிருந்து பலர் எதிரணிக்கு மாறிப்போகும் அபாயகரமான ஒரு கட்டம் நீடித்துக் கொண்டிருக்கும்போது தான் இடைத்தேர்தல் பரப்புரையும் நடந்துது.
 
இதனால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
 
இந்தச் சரிவின் மூலம் எடப்பாடியின் தலைமை பொறுப்பு மீண்டும் மீண்டும் கேள்விக்குறியான விதத்தில் அவருக்கு எதிரானதாக உருமாறியிருக்கிறது.
 
அதிமுகவில் 12 முறைகளுக்கு மேல் தொடர் தோல்வியைச் சந்தித்திருக்கிற எடப்பாடி பழனிசாமி, இன்னும் எவ்வளவு தோல்விகளைத் தாங்குவார் என்கின்ற விமர்சனமும் எடப்பாடி தலைமையின் மீது எழுந்திருக்கிறது.
 
பழையபடியே வீண் பிடிவாதத்தை மட்டும் காட்டிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியைக் கட்டிக் காப்பதில் போதிய அக்கறை காட்டாவிட்டால், அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒரு சூழ்நிலையை தான் வருங்காலத்தில் உருவாக்கும்.
 
அதிமுகவைப் பொறுத்தவரை ஒரே ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது. அதிமுகவுக்கான அடிப்படையான தொண்டர்கள் இவ்வளவு கடுமையான நெருக்கடிக்கு இடையிலும் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆனால், அத்தகைய வாக்களிப்புக்கு உரிய தகுதியை தற்போதைய அதிமுக தலைமைப் பெற்றிருக்கிறதா என்பதுதான் அடிப்படையான கேள்வி.
 
இடதுசாரிகள் :
 
இடதுசாரிகள் அடிக்கடி ஒரு வார்த்தையை சொல்வார்கள், சுய மறுபரிசீலனை என்பதுதான் அந்த வார்த்தை.
 
அத்தைய வார்த்தையை தற்போதும் சொல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இடதுசாரிகள்.
 
இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவதைத் தவிர்த்து இருக்கலாம் என்பது சொல்லப்பட்டாலும், ஏதோ ஒரு ஒரு நம்பிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தி இந்தத் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள் 2000 வாக்குகளுக்கும் குறைவாகவே (1955) பெற்றிருக்கிறார்கள்.
 
தங்களுடைய சுயபலம் என்ன என்பது அவர்களுக்கும் தற்போது தெரிந்திருக்கும். அவர்கள் கூட்டணி வைத்த முயற்சிக்கும் கட்சிகளுக்கும் அவர்களுடைய சுயபலம் தெரிந்திருக்கும்.
 
ஆக, அக்கினி பரீட்சை போன்று இந்த இடைத்தேர்தலில் இறங்கியிருக்கிற இடதுசாரிகள், தங்களது பொலிட்பீரோவை கலந்து ஆலோசித்து, இனியாவது உகந்த காலத்திற்கு தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
 
நாம் தமிழர் கட்சி:
 
எந்தத் தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் தலைவர்கள், தங்களது கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரைத்தான் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வார்கள்.
 
ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானோ அதற்கு நேர் எதிராக தனக்கு ஓட்டுப் போடுவது கூட வேண்டியதில்லை.
 
விசில் சின்னத்தில் போடாமல் இருந்தால் போதும் என்கிற விதத்தில் பிரச்சாரம் செய்தது, கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியிருந்தது. 
 
தேர்தலுக்கு முன்பு திராவிடக் கட்சிகளை கழுவி ஊற்றியவர் தேர்தலுக்குப் பிறகு அதே திராவிடக் கட்சிகளை தீவிரமாக ஆதரிக்கும் நிலைக்குப் போனதை வெவ்வேறு சமூக வலைத்தளங்கள் குறிப்பிட்டு அவரை பெரும் பேசுபொருளாக மாற்றிவிட்டன.
 
நாம் தமிழர் கட்சியின் பெயரை அளித்தவர் முன்னாள் சபாநாயகரான ஆதித்தன். அவ்வளவு பெருமைமிக்க நாம் தமிழர் என்கிற பெயரை எவ்வளவு தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறார், தற்போதைய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். 
 
– யூகி
You might also like