நவீன கால நாகரிகத்தின் அடையாளமாகவும், சுய வெளிப்பாட்டின் வடிவமாகவும் இளைஞர்கள் மத்தியில் பச்சை குத்துவது (Tattoo) கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.
உடல் அழகியல் மற்றும் தங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கலையாக இது பார்க்கப்பட்டாலும், இதன் மருத்துவ மற்றும் உடல்நலப் பக்க விளைவுகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.
டாட்டூ வரலாற்றின் சுருக்கம் :
தொடக்க காலம் :
மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே டாட்டூ பழக்கம் இருந்து வருகிறது. கி.மு. 3200-ஐச் சேர்ந்த ‘ஓட்சி’ (Ötzi) என்ற மம்மியின் உடலில் கண்டறியப்பட்டதே உலகின் மிகப்பழமையான டாட்டூ சான்றாகும்.
பண்டைய எகிப்து மற்றும் பல்வேறு பழங்குடி சமூகங்களில் (பாலினீசியா, மாவோரி) டாட்டூ என்பது பாதுகாப்பு, வீரம், சமூக அந்தஸ்து மற்றும் மருத்துவத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.
1769-ஆம் ஆண்டில் மாலுமி கேப்டன் ஜேம்ஸ் குக் இதைக் கண்டறிந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார்.
பாட்டி காலத்தில் எப்படி பார்க்கப்பட்டது?
நம் பாட்டி காலத்தில் இதற்கு ‘பச்சைக் குத்துதல்’ என்று பெயர். கிராமப் புறங்களில் உள்ள மூதாட்டிகள், தாய்மார்கள் மற்றும் இளம் பெண்கள் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

சில குறிப்பிட்ட நாடோடிப் பழங்குடியினர் மற்றும் கிராமத்து மக்கள் இதனைத் தாங்கள் பாரம்பரியக் கலையாகப் பின்பற்றினர்.
அந்த காலத்தில் நவீன ஸ்டூடியோக்கள், எந்திரங்களோ கிடையாது. ஊசி மற்றும் மையை வைத்துக்கொண்டு கைவினையாக வரைந்தனர்.
கிளி, மயில், சூரியன், சந்திரன், தாமரை மற்றும் கொடி போன்ற உருவங்கள்.
வேல், திரிசூலம், ஓம் அடையாளம், மற்றும் குலதெய்வங்களின் பெயர்கள்.
கணவன் அல்லது பெற்றோர் பெயர்களை கைகளில் சுருக்கமாகப் பச்சைக் குத்திக் கொள்வது வழக்கம்.
ஆண்களுக்கும் இந்த பழக்கம் இருந்ததா?
வீரத்தின் அடையாளமாக கிராமங்களில் ஜல்லிக்கட்டு மாடு பிடிக்கும் வீரர்கள், சிலம்பம் சுற்றுபவர்களும் தங்கள் கைகளில் வீரம் செறிந்த உருவங்களைப் பச்சைக் குத்திக் கொள்வார்கள்.
குறிப்பிட்ட சாதியினர் மற்றும் குழுக்கள் ஆண்கள் தங்கள் உடல் உறுப்புகளில் குறிப்பாக கைகளில் குலத்தின் சின்னங்களைப் பச்சைக் குத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது.
நண்பர்கள் தங்களின் பெயர்களை ஒருவருக்கொருவர் கைகளில் குத்திக் கொள்வதும், காதலர்கள் தங்கள் காதலன்/காதலி பெயர்களைப் பொறித்துக் கொள்வதும் அப்போது ஃபேஷனாக பார்க்கப்பட்டது.
பச்சைக் குத்துவதற்கான காரணங்கள்
நவீன வளர்ச்சி :
1891-ஆம் ஆண்டு முதல் மின்சார டாட்டூ மெஷின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இது உலகளவில் பரவி இன்று ஒரு நவீன ஃபேஷன் கலையாக மாறியுள்ளது.
பிரபலங்களின் தாக்கம் :
திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது உடலில் பச்சைக் குத்திக் கொள்வதைப் பார்த்து இளைய தலைமுறையினர் அதைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தங்களது தனித்தன்மை, கொள்கைகள், மறக்க முடியாத நினைவுகள் அல்லது பிரியமானவர்களின் பெயர்கள், உருவங்கள், உடலில் நிரந்தரமாக பதிக்க இது ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
முந்தைய காலங்களைப் போலல்லாமல், அதிநவீன கருவிகள் முறைகள் வந்துவிட்டதால், இது எளிதான மற்றும் நாகரிகமான ஒன்றாக மாறிவிட்டது.
பச்சைக் குத்துவதால் வரும் ஆபத்துகள்:

முறையற்ற உபகரணங்கள் மற்றும் சுத்தமின்மை காரணமாக பச்சைக் குத்துவதன் மூலம் பல்வேறு ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஹெபடைடிஸ் பி மற்றும் சி (Hepatitis B & C) கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் கல்லீரலைப் பாதிக்கக்கூடிய இந்த வைரஸ் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும்.
எச்.ஐ.வி (HIV) பாதிக்கப்பட்டவரின் இரத்தக் கலப்புள்ள ஊசிகள் மீண்டும் பயன்படுத்தப்படும் போது எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.
ஸ்டெஃபிலோகோகஸ் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் தோலில் நுழைந்து சீழ் பிடித்தல், கடுமையான புண்கள் மற்றும் காயங்கள் வழியாக கிருமிகள் ரத்த ஓட்டத்தில் பரவி உயிருக்கே ஆபத்தான செப்சிஸ் (Sepsis) நிலையை உருவாக்கக் கூடும்.
மேலும், பயன்படுத்தப்படும் ஊசிகள் அல்லது சூழல் சுத்தமாக இல்லாவிட்டால் தனுவாதம் எனப்படும் டெட்டனஸ் நோய் தாக்க வாய்ப்புள்ளது.
டாட்டூ மைகள் சிலருக்கு கடுமையான தோல் ஒவ்வாமை, அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்படுத்தலாம்.
தோல் அதிகமாக பாதிக்கப்படும்போது கெலாய்டுகள் எனப்படும் தடித்து வளர்ந்த தழும்புகள் உருவாகலாம்.
யார் டாட்டூ குத்தக் கூடாது?
தோல் நோய்கள் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்த உறைவுக் குறைபாடு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அவர்கள் பச்சைக் குத்துவதை தவிர்ப்பது நல்லது.
மருத்துவர்களின் கருத்துக்களும் அறிவுரைகளும்:
மருத்துவர்கள் மற்றும் தோல் நோய் நிபுணர்களின் கருத்துப்படி, பச்சைக் குத்துவது வெறும் அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது உடலியல் ரீதியான பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.
தோல் பாதுகாப்பு அரண் உடைதல் :

நமது உடல் உறுப்புகளில் தோல் தான் மிகப்பெரியது மற்றும் அது கிருமிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பு அரண்.
பச்சைக் குத்தும்போது தோலின் மீது ஊசி மூலம் பலமுறை துளையிடப்படுவதால், அந்த இயற்கையான பாதுகாப்பு அரண் உடைகின்றது.
மைகளின் நச்சுத் தன்மை :
டாட்டூ குத்த பயன்படுத்தப்படும் மைகளில் சில நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் மற்றும் உலோகத் துகள்கள் இருக்கலாம்.
அவை காலப்போக்கில் தோலுக்கு அடியில் தங்கி உடல் நலனைப் பாதிக்கலாம்.
நிரந்தரப் சிக்கல்கள் :
தற்காலிகமான ஃபேஷனுக்காக குத்தப்படும் டாட்டூக்கள், பிற்காலத்தில் பிடிக்காமல் போய் லேசர் மூலம் அகற்ற முயன்றால், அது முழுமையாக மாறுவதில்லை;
மாறாக தோலில் தழும்புகளையும் நிரந்தரக் காயங்களையும் ஏற்படுத்திவிடும்.

பச்சைக் குத்துவது என்பது இன்று நாகரிகமாகவும் ஃபேஷனாகவும் பார்க்கப்பட்டாலும், அது நம் பாட்டி காலத்து பாரம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டது.
இருப்பினும், நவீன கால டாட்டூக்களால் ஏற்படும் கிருமித் தொற்றுகள் மற்றும் உடல்நல பாதிப்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
“தோற்றத்தை விட ஆரோக்கியமே முக்கியம்” என்பதை உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்படுவதே புத்திசாலித்தனம்.
– யாழினி சோமு