நமது கிராமமும் இப்படித் தான் இருக்க வேண்டும்!

டாக்டர் க. பழனித்துரை

செப்டம்பர் 6ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈரோட்டுக்கு அருகில் உள்ள அண்ணாமலைக் கோட்டை என்ற கிராமத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
 
ஆண்களும் பெண்களும் பரவசத்தில் இருந்தனர் அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக. அங்கு சென்று பார்த்தால் மாவட்ட ஆட்சித் தலைவர், தொழிலதிபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என பெரும் பிரமுகர்கள் கூட்டம் அமர்ந்திருந்தது.
 
இதை யார் முன்னெடுத்தது, எதற்காக அந்த மாரத்தான் ஓட்டம் என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.
 
கார்த்தி ஈஸ்வரமூர்த்தி அவரது இணையர் சித்ரா இருவரும் 16 ஆண்டு காலம் அமெரிக்காவிலிருந்து விட்டு நாம் பிறந்த ஊருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் அவர்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
 
அந்த பேர் அவா இவர்களுக்கு எப்படி வந்தது?
 
அமெரிக்காவில் இதேபோன்று ஒரு பெரும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றபோது இவர்கள் அதில் பங்கேற்றனர். அப்போதுதான் இந்த நற்சிந்தனை இவர்களுக்கு உதித்தது.
 
பலர் அமெரிக்காவிலிருந்து தன் ஊருக்காக பல உதவிகளைச் செய்து வருகின்றனர். எதோ ஒரு கட்டிடம், விளையாட்டு அரங்கம், மைதானம் என எதாவது ஒரு செயலைச் செய்துதான் வருகின்றனர்.
 
ஆனால், கார்த்தி சித்ரா இணையரின் கனவு பெருங்கனவு சற்று வித்தியாசமானது. கணினித் தொழில் நுட்பத்துறையில்தான் இவர்கள் பணியாற்றினர்.
 
ஆகையால் இந்தத் தொழில்நுட்பத்தை ஏன் நம் கிராமங்களில் உருவாக்க முடியாது? அப்படி உருவாக்க முடியுமென்றால், அதை நம் கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்கி உதவிடலாமே என ஒரு பெருங்கனவை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
 
இந்தக் கனவுடன் மற்றொன்றையும் கொண்டிருந்ததுதான் என் போன்றோரைக் கவர்ந்தது. 
 
அப்படிக் கிராமத்திற்கு இந்தத் தொழில்நுட்பத்தை எப்படிக் கொண்டுவர முடியும் என்று சிந்திக்கின்றபோது இவர்கள் எடுத்த முடிவுதான் “கனவு ஸ்டார்ட்டப் கிராமம்”.
 
இந்தக் கிராமம் எந்த வகையிலும் கிராமியப் பண்புகளை இழந்துவிடக் கூடாது என்பதை அடிப்படையாக்கிக் கொண்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தை சிறிய கிராமமான அண்ணாமலைக் கோட்டையில் உருவாக்கினர்.
 
அப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கி பத்தொன்பது நாடுகளுக்கு அந்த கம்பெனியின் மூலம் மென்பொருள் உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர் இந்த இணையர்கள்.
 
கிராமங்களிலிருந்து 180 மென்பொருள் பணியாளர்களைத்  தேர்வு செய்து பணி செய்ய வைத்து செயல்பட்டு வருகின்றனர் இந்தத் தம்பதியினர்.
 
இந்த மென்பொருள் நிறுவனம் பெரிய வானளாவிய கட்டிடங்களில் செயல்படவில்லை. சிறிய சிறிய ஓட்டுக் கட்டிடங்களில் செயல்பட்டு வருவதுதான் இந்த கம்பெனியின் தனிச்சிறப்பு.
 
அதேபோன்று கிராமப்புற மாணவர்களிடம் முதலில் மேம்பாட்டுக்கான நம்பிக்கையை வளர்க்க வேண்டும். மக்களிடம் வளமான சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த மாரத்தான் ஓட்டத்தை பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இணைத்து இந்த ஓட்டம் நடைபெற்றது.
 
இந்த ஓட்டத்தினால் கிராமம் மாறிவிடுமா?
 
மாறும். பொதுவாக கிராமங்கள் இன்று சாதியாலும், மதத்தாலும், கட்சியாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் பிரிந்து கிடக்கின்றன.
 
இந்த பிரிவுகளிலிருந்து ஒன்றுபட தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட விளையாட்டு ஒன்றே தீர்வு என்றுதான் முடிவு செய்து 4 ஆண்டுகளாக இதை நடத்தி வருகிறார். அது வெற்றிகரமாக நடைபெறுகிறது. 
 
பத்தாயிரம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வு. அதுவும் ஒரு சிறிய கிராமத்தில் என்றால் எவ்வளவு தயாரிப்பு தேவை இருந்திருக்கும், எவ்வளவு பேர் அதில் பொறுப்பேற்று செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை யோசிக்கும்போது எவ்வளவு சவால்களைச் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்து நினைத்து வியந்திருக்கிறேன்.
 
பத்தாயிரம் பேர் அதில் ஓடியவர்கள் மட்டும், அவர்களுடன் வந்தவர்கள், பெற்றோர்கள், விருந்தினர்கள், பிரமுகர்கள் அனைவரையும் அவரவர் நிலையில் பங்கேற்க வைக்க வேண்டும், உணவு தரவேண்டும், தங்க வைக்க வேண்டும், அதுவும் ஒரு சிறிய கிராமத்தில் என்றபோது, எவ்வளவு முன் தயாரிப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது ஒரு பிரமிப்பு இருந்தது.
 
இது ஒரு செய்தியைக் கடத்துகிறது. இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் யாராவது பொறுப்பெடுத்து நடத்தினால் ஒற்றுமைக்கு இதைவிட ஒரு நல்ல கருவி கிடைக்காது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 
 
ஒட்டுமொத்த நிகழ்விலும் நடந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், 24000 பேருக்கு உணவளித்தது, குப்பை மேலாண்மை செய்தது, ஒருவர் கூட எந்தவித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து செயல்பட்டது அடுத்த ஒரு பிரமிப்பு.
 
இந்த நிகழ்வு ஒரு கனவை விதைக்கும் உயரிய நோக்கத்தால் நடைபெற்றது. இது ஒரு பெருங்கனவை அனைவர் மனதிலும் விதைத்தது.
 
நம் ஊருக்கு நாம் பொறுப்பெடுக்க முடியுமா? நம் ஊரில் ஒரு நாள் நம் ஊர் குழந்தைகளை, பெரியவர்களை, இளைஞர்களை இணைத்து ஒரு ஓட்டத்தை நடத்த முடியுமா? நடத்தினால் என்ன நடக்கும்.
 
கிராம மக்களிடையே ஒற்றுமை வளரும். பொறுப்புடன் செயல்படும் தன்மை வளரும். முன்னேற்றக் கனவு அனைவர் மனதிலும் விதைக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பிழைப்புத் தேடி வெளிநாடு சென்றவர்கள் தம் ஊர் நலம் பற்றி யோசிப்பார்கள். 
 
நம் ஊரில் கிராமசபை வலுப்பட வேண்டும், அதில் ஏழை எளிய மக்களும் கலந்து கொண்டு பங்கேற்று தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற சிந்தனையில் மதுரை, கொட்டாம்பட்டி கம்பூரில் மாதிரியான ஒரு கிராம சபையை கட்டமைக்க வெளிநாட்டில் பிழைப்புக்காகச் சென்றவர்கள் இணைந்து கிராமசபைக்குச் செல்லும் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்து கிராமசபையை வலுப்படுத்திது ஒரு முன்னுதாரணம்.
 
அதேபோல் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி ஒன்றியத்தில் முத்துகாபட்டிப் பஞ்சாயத்தில் கிராம மக்கள் ஒற்றுமையை பேணுவதற்கும், கிராம மேம்பாட்டிற்கும் அந்த ஊரிலிருந்து அமெரிக்கா சென்ற அசோகன் 50 லட்ச ரூபாயை அந்த கிராம மேம்பாட்டுக்காகத் தந்து உதவியது ஒரு எடுத்துக்காட்டு.
 
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பெருக வாழ்ந்தான் என்ற ஊரில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு செல்வந்தராக ஊர் திரும்பிய இளங்கோ ஒரு கோடி ரூபாய்க்கு பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டித் தந்து,
 
மாணவர்களுக்கு மத்திய அரசு தரும் உதவித்தொகையைப் பெற உதவி செய்வதும், மாணவர்கள் மத்தியில் உடல் ஆரோக்யம், கல்வியின் முக்கியத்துவம் போன்றவற்றை மாணவர்களுக்குத் தந்து நம் மேம்பாடு நம் பொறுப்பு என்று இளைஞர்களை தயார் செய்வதும் புதுயுக சேவையாகும்.
 
இதுபோன்ற இளைஞர்களின் பணியும், முன்னுதாரணச் செயல்பாடுகளும் தான் இன்று நமக்குப் பெரிதும் தேவைப்படுவது.
 
அன்று அந்தக் கிராமத்தில் நடந்த நிகழ்வை கார்த்தி சித்ரா இணையர்கள் நடத்தியது பெரும் நம்பிக்கை தரும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
 
இப்படிப்பட்ட மனிதர்கள்தான் இன்றைய சுயநல உலகில் பொதுமனிதராக சமுதாயம் தேடும் மனிதராக, உயர்ந்த மனிதராக நம்மால் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையைக் கூட வேண்டும்.
You might also like