சேதமின்றி கரை சேர்ந்திருக்கிறது மண்டாடிப் படகு!

சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், ராம்ஸ், மிதுன், ஜெய்சங்கர் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கும் படம்.

ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்தது.

கடலில் பயணிக்கும் பாய்மரப் படகுகளை சரியான முறையில் செலுத்தி, மீன் கிடைக்கும் இடங்களைக் கண்டறிந்து,

இயற்கை சூழல், கடல் நீரோட்டத்தின் தன்மை இவற்றை மதிப்பீடு செய்து சரியாக செயல்பட்டு, உடன் பயணிக்கும் எல்லோரையும் பத்திரமாக கரைக்கு கொண்டு வரும் பொறுப்பை செய்கிற, படகின் தலைவனுக்கு மண்டாடி என்று பெயர்.

முகவைக் கடல் பகுதியில் அப்படி மண்டாடியாக இருப்பதோடு, பாய்மரப் படகுப் போட்டியில் ஈடுபடும் வீரர்களை பயிற்றுவித்து வழி நடத்தும் நபர் மச்சமுனி (சத்யராஜ்).

இங்கே மச்சம் என்றால் மீன் என்று பொருள். 

அவரது ஒரே மகள் ஏஞ்சல் ராக்கம்மா. (மஹிமா நம்பியார்).

மச்சமுனியிடம் படகுப் போட்டி மண்டாடிகளாக பயிற்சி பெறும் நபர்களில் முக்கியமானவர்கள். முத்துக்காளி (சூரி) மற்றும் சட்டாப்புலி (சுஹாஸ்).

முத்துக்காளிக்கும் ஏஞ்சல் ராக்கம்மாவுக்கும் காதல். ஆனால், குருவிடம் பெண் கேட்க முத்துக்காளிக்கு பயம்.

இந்த நிலையில் பிளாஸ்டிக் படகு வைத்து கடலில் வெடி போட்டு இயற்கைக்கு மாறான முறையில் சட்டாப்புலி மீன் பிடிக்க, அவன் மேல் கோபம் கொள்கிறார் மச்சமுனி. 

நட்பின் பெயரால், அறியாமல் சட்டாப்புலிக்கு துணை போகிறான் முத்துக்காளி. அது மச்சமுனிக்கு எதிரான செயலாக மாறுகிறது.

இந்த நிலையில் சட்டாப்புலி மச்சமுனியை கொன்று விட, 

தனது அப்பா பக்கம் நிற்காத முத்துக்காளியை வெறுக்கும் ஏஞ்சல் ராக்கம்மா, தனது மாமன் மகனும் முத்துக்காளியின் நண்பனுமான சிங்காரத்தை (ரவீந்திரா விஜய்) மணக்கிறாள்.

சட்டாப்புலி முத்துக்காளிக்கும் துரோகம் செய்ய ஊரை விட்டே போய் விடுகிறான் முத்துக்காளி.

இருபது வருடம் கழித்து ஊருக்கு முத்துக்காளி வர, ஊரின் கவுரவமான பாய்மரப் படகுப் போட்டியில் எல்லா ஊர் ஆட்களையும் சேர்த்து கமர்ஷியலாக்கி ஊரின் அடையாளத்தை சட்டாப்புலி கெடுத்து வைத்திருக்க, 

முத்துக்காளை மீண்டும் ஊர் மக்களைக் கொண்ட பாய்மரப் படகுப் போட்டி அணியை இளைஞர்களை வைத்து கட்டமைக்க, அவர்களில் ஒருவராக ஏஞ்சலின் மகன் மாரி (மிதுன் ஜெ சங்கர்) வர, 

தனது அம்மாவின் முன்னாள் காதலன் என்பதால் முத்துக்காளியை மாரி எதிர்க்க, 

பலவீனம், குழப்பம், கொண்ட முத்துக்காளி அணியை, பழம் தின்று கொட்டை போட்ட சட்டாப்புலி போட்டிக்கு அழைத்து கடலிலேயே தீர்த்துக்கட்ட திட்டமிட, நடந்தது என்ன என்பதே இந்த மண்டாடி.

பொதுவாக கடலில் ஒரு காட்சி எடுப்பதே சிரமமான விஷயம். ஆனால் இந்தப் படத்தின் முக்கிய அம்சமே நீரின் குணமறிந்து பலவித விளையாட்டு டெக்னிக்குகளோடு கடலில் நடக்கும் அந்த பாய்மரப்படகுப் போட்டிக் காட்சிகள்தான்.

பெரும் உழைப்பைப் போட்டு அந்தக் காட்சிகளை சிறப்பாக கடலிலும் செட்களிலும் வரைகலையிலும் அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த கதைக்களத்துடன் களம் இறங்கி இருக்கும் எழுத்தாளர் இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு பாராட்டுகள்.

கடல், காற்று, படகு இவற்றின் தொழில் நுட்பங்களை விளக்குவது, அது குறித்த விவரணைகள் யாவும் அருமை. 

முத்துக்காளி கேரக்டருக்கு மண்சார்ந்த வடிவம் தருவதில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் சூரி.

சூரி உட்பட பாயமர போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து நடிகர் நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் அபாரமானதே. 

காதலி, இருவது வயது மகனின் அம்மா என்று இரண்டு காலகட்டத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கி கவர்கிறார் மஹிமா நம்பியார்.

சத்யராஜ், ராம்ஸ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திரா விஜய் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு. 

சிறப்பான பின்னணி இசை தந்திருக்கிறர் ஜி.வி.பிரகாஷ் குமார். எஸ்.ஆர் கதிரின் ஒளிப்பதிவு, ஓகே ரகம்.

பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பாராயன், மகேஷ் மாத்யூ ஆகியோரின் சண்டைக் காட்சிகள் யாவும் அற்புதம்.

பாய்மரப் படகுப் போட்டி குறித்த சிறப்பான விஷயங்களை இன்னும் எல்லோருக்கும் புரியும்படி சுவையாக விளக்கி இருக்கலாம்.

என்ன ஏது என்று பார்ப்பதற்குள் ‘போம்மா மின்னல்’ என்று பல விஷயங்கள் போய் விடுகின்றன.

களம்தான் புதிதே தவிர, கதையில் காட்சிகளில் புதிதாக சுவையாக தனித்தன்மையும் ஏதும் இல்லை.

இதே கதையை மாட்டு வண்டிப் போட்டி, சைக்கிள் போட்டி, கபடிப் போட்டி என்று பலமுறை பார்த்து இருக்கிறோமே.

தேயிலைத் தோட்டப் பின்னணியில், உழவு வயல் பின்னணியில், ஒட்டகங்களை வைத்து கூட இதை எடுக்கலாம். வித்தியாசமான களம் மட்டுமே சுவையாக அமைந்து விடாது.

களத்துக்கேற்ற தனித்தன்மை, கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு, சொல்ல வந்த விஷயம் எதிலும் இல்லை. 

அம்மாவின் பழைய காதலன், பிள்ளையின் கோபம், அந்த காதலனின் நண்பனாக அப்பா, அவர்களுக்குள் நடக்கும் உணர்வுபூர்வமான சம்பவங்கள் என்ற அந்த ‘சலங்கை ஒலி பாணி’ காட்சிகள் மட்டும் சற்றே ஆறுதல்.

முதல் பாதியின் பெரும்பகுதி கடலிலும் இறங்காமல் கதையிலும் இறங்காமல் கரையிலேயே சும்மா சுற்றிக் கொண்டு பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பகுதியிலும் அ, ஆ, இ, ஈ… போல எல்லோருக்கும் தெரிந்த காட்சிகள் அடுத்ததடுத்து வருகின்றன. 

எனினும் வாய் பிளக்க வைக்கும் அந்த கிளைமாக்ஸ் பகுதி.

மண்டாடி திரைப்படம் என்ற படகை வேகமாக துடுப்பு போட்டு சேதாரம் இன்றி கரை சேர்க்கிறது. 

மண்டாடி… உப்புக்கடல் காற்று.

— சு.செந்தில்குமரன்

You might also like