மூத்த வழக்கறிஞரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டாக்டர் எஸ். முரளிதர் அவர்கள் அண்மைய ஜென்ஸீ (Gen Z) போராட்டங்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
குறிப்பாக, குடிமக்கள் கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும், கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தவும் உரிமை பெற்றிருக்கும் போதுதான் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும் என்ற அடிப்படைக் கொள்கையை அவை வலியுறுத்துகின்றன.
வரலாறு நமக்கு இன்னொரு முக்கியமான பாடத்தையும் கற்றுத் தருகிறது.
வலதுசாரி அல்லது இடதுசாரி என எந்த வடிவிலான தீவிரவாதமாக இருந்தாலும், மதப் பெரும்பான்மைவாதம், இன மேலாதிக்கம், புரட்சிகரக் கொள்கை அல்லது எதேச்சாதிகார தேசியவாதம் ஆகியவற்றின் கருத்தியியல் வேரூன்றியிருந்தாலும் – அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயகத்திற்கு நிலையான மாற்றாக இருக்க முடியாது.
முதலில் தெளிவாகப் பிரித்துப் பார்க்க வேண்டியது ஜனநாயக ரீதியான எதிர்ப்பு, கருத்தியல் தீவிரநிலை, சட்டவிரோத வன்முறை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடாகும். இவை ஒன்றுக்கொன்று இணையானவை அல்ல.
அரசின் கொள்கைக்கு எதிரான அமைதியான போராட்டம், மக்களிடையே செல்வாக்கு அடையாத அரசியல் கருத்து மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான விமர்சனங்களை ஆகியவை, அரசுக்கு நெருடல்களை உருவாக்க வாய்ப்புள்ளது என்பதால் மட்டுமே அதை பயங்கரவாதத்துடன் ஒப்பிட முடியாது.
அதேவேளையில், தனிநபர்களுக்கு எதிரான வன்முறை, பொதுமக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் அல்லது வன்முறையின் மூலம் அரசியலமைப்புச் நிறுவனங்களைத் தூக்கியெறிய முயற்சிப்பது போன்ற செயல்பாடுகள் எந்தக் கொள்கையின் பெயராலும் நியாயப்படுத்தப்பட முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பு இந்த வேறுபாட்டைத் சரியாக வகைப்படுத்தி உள்ளது.
ஆகவே, பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரமும், அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமையும் அடிப்படை உரிமைகளாகப் பாதுகாக்கப்படுகின்றன;
அவை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை.
எனவே, அரசை விமர்சிப்பது என்பது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என்பதற்காக மட்டும் குற்றமாகிவிடாது.

உண்மையான மதிப்பீடுகள் ஆதாரம், சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளாகவே இருக்க வேண்டுமே தவிர அவற்றின் அடிப்படையில் அரசியல் முத்திரைகளை பதிக்க இயலாது.
இந்தியாவின் அரசியல் வரலாறு இது குறித்த விவரங்களில் பொதிந்துள்ள சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகிறது.
கம்யூனிஸ்ட் இயக்கம் அதன் ஆரம்பகால புரட்சிகர நிலைப்பாடுகளையும், கடுமையான அரச அடக்குமுறையின் காலகட்டங்களையும் கடந்து, பின்னர் குறிப்பிடத்தக்க நாடாளுமன்ற அரசியல் சக்தியாக வளர்ந்தது.
1957-ஆம் ஆண்டு கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்ததும், 1959-ல் அது சர்ச்சைக்குரிய முறையில் கலைக்கப்பட்டதும், அதன்பின்னர் ஜோதிபாசு தலைமையில் மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணி நீண்டகாலம் தேர்தல் மூலம் ஆட்சி செய்ததும்,
ஜனநாயக அரசியலை ஏற்று கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் கொள்கை மற்றும் திட்டங்களை ஆயுதம் தாங்கிய போரட்டத்தை முன்னிலைப்படுத்திய நக்சலிசத்தையும் வரலாற்று ரீதியாக ஒன்றாகக் கருத முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற நக்சல் பாரி எழுச்சிக்கு உண்மையான விவசாயிகளின் குறைகளும் நில உரிமை சார்ந்த பிரச்சினைகளும் பின்னணியாக இருந்தன.
ஆனால், பின்னர் அது ஆயுதப் புரட்சிகர இயக்கமாக மாறியதும், குறிப்பாக “வர்க்க எதிரிகளை அழித்தொழித்தல்” என்ற கொள்கை முன்னிறுத்தப்பட்டதும், வன்முறை, பிளவு மற்றும் பரந்த அரசியல் ஆதரவை இழத்தல் போன்ற விளைவுகளுக்கு வழிவகுத்தது.
எனவே, நக்சலிசத்தின் வரலாறு சமூக மாற்றத்தை வன்முறையின் மூலம் ஏற்படுத்த முயல்வதின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது;
ஆகவே, ஜனநாயக ரீதியான மக்கள் கூடுவதின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
இதே கொள்கை இன்றைய சூழலிலும் பொருந்த வேண்டும். அமைப்பு சார்ந்த இடதுசாரி தீவிரவாதம் கணிசமாகக் குறைந்துவிட்டது.
எனினும் ஒவ்வொரு இடதுசாரி அறிவுஜீவியும், ஜனநாயக சோசலிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும், அல்லது அரசை விமர்சிப்பவர்கள் அனைவரையும் “நக்சலைட்” அல்லது “தீவிரவாதி” என்று அழைப்பது நியாயமல்ல.
அதேபோல், அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் மட்டுமே எவரையும் அர்பன் நக்சல், தேசவிரோதி (Urban Naxal, Antinational) போன்ற அரசியல் சொற்களைப் பயன்படுத்துவது மற்றும் இதுபோன்ற பிற முத்திரைகளை பதிக்க முயல்வது போன்ற கருத்தாக்கத்தை கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படும்போது, அவை ஆக்கபூர்வமான விவாதத்திற்கு மாற்றாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
இத்தகைய முத்திரைகள் ஒருபோதும் ஆதாரத்திற்கும் சட்டப்படியான நடைமுறைக்கும் மாற்றாக இருக்கக் கூடாது.
தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பது அரசின் நியாயமான பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அந்தப் பொறுப்பு அரசியலமைப்புச் சட்ட வரம்புகளுக்குள் செயல்படுத்தப்படும் போதுதான் வலிமை பெறுகிறது; பலவீனமடைவதில்லை.
அதேபோல், அரசை விமர்சிப்பது வன்முறையை ஆதரிப்பதற்கான காரணமாகவும் மாறக்கூடாது.
தனிநபர்களை அழித்தொழிக்கவும், எதிர்க் கருத்துகளை ஒடுக்கவும் அல்லது பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் இலக்குகளை அடையவும் முயலும் எந்த அரசியல் இயக்கமும், அது பாதுகாப்பதாகக் கூறும் ஜனநாயக மதிப்புகளை இறுதியில் சிதைத்துவிடும்.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கை ஒன்றே நிலைத்திருக்க வேண்டும்.
அரசுக்கு எதிரான நியாயமான எதிர்ப்புக் குரலைக் குற்றமாக்கக் கூடாது; அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது.
இந்திய ஜனநாயகத்தின் வலிமை, கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் அதன் திறனிலேயே உள்ளது.
அவை சில நேரங்களில் அரசுக்கு நெருடலை ஏற்படுத்தும் தீவிர கருத்தாகவும், ஆட்சியைக் கடுமையாக விமர்சிப்பவையாகவும் இருக்கலாம்.
இருந்தாலும், அவற்றை அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளை கைவிடாமல் ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தின் உயிரோட்டமாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடுகள் (Basic Structure Doctrine) வலுவானவை.
அவை குடியரசின் அடிப்படை அடையாளத்தை அழிக்கும் முயற்சிகளுக்கு எதிரான கணிசமான வரம்புகளை விதிப்பதன் மூலம், கூடுதல் நிறுவனப் பாதுகாப்பை வழங்குகிறது.
அரசியல் அதிகாரம் கைமாறலாம்; அரசுகள் உருவாகலாம், வீழலாம்; கருத்தியல்கள் செல்வாக்குப் பெறலாம் அல்லது இழக்கலாம்.
ஆனால், அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகமே அனைவருக்கும் பொதுவான அடித்தளமாகத் தொடர வேண்டும்.
எனவே, வலதுசாரி தீவிரவாதமோ அல்லது இடதுசாரி தீவிரவாதமோ இந்தியாவுக்கு நிலையான எதிர்காலத்தை வழங்க முடியாது. நீடித்த மாற்று என்பது அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகமே.
அதில் கருத்து வேறுபாடுகள் காரணம், தேர்தல், நிறுவனங்கள், சட்டம் மற்றும் அமைதியான மக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்; அச்சுறுத்தல், வன்முறை அல்லது அரசியல் முத்திரையிடல் மூலம் அல்ல.
Gen Z போராட்டங்கள் அமைதியான முறையிலும் அரசியலமைப்புச் சட்ட வரம்புகளுக்குள்ளும் நடைபெற்றால், அவற்றை வெறும் இளைஞர்களின் கோப வெளிப்பாடாக மட்டும் பார்க்கக் கூடாது.

ஆள்பவர்களைக் கேள்வி கேட்கவும், அவர்களை விமர்சிக்கவும் குடிமக்கள் தங்களுக்கு உரிமை உண்டு என்று உணரும் நிலைதான் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கான முக்கிய அடையாளம் என்பதை அவை நினைவூட்டுகின்றன.
அது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல.
ஜனநாயகத்தை உயிருடன் வைத்திருக்கும் அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றுதான் அது.
- தமிழ் பாலன்