அலைகளை ஆள்பவர்களே உலகத்தை ஆள்வார்கள்!

ஓம்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அண்மையில் சென்னை சாலி கிராமம் எல்.வி.பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு குறும்படப் போட்டி நடைபெற்றது.

பதினொரு குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் கடல் கொண்டான் என்ற குறும்படமும் ஒன்று.

வடசென்னை திரைப்படத்தை நினைவுபடுத்துவது போல கடல் சார்ந்த மக்களின் குழுமோதல், ஊக்கடிப்பது போன்ற நிகழ்வுகள் அடங்கிய குறும்படம் அது.

எந்தப் படமும் செய்யாத அளவுக்கு அந்தப் படம் பார்வையாளர்கள் நடுவில் அதிர்வலைகளையும், அடுக்கடுக்கான கேள்விகளையும் ஏற்படுத்தியது.

கடல் கொண்டான் குறும்படத்தின் தொடக்கத்தில் காட்டப்பட்ட ஒரு பொன்மொழி என்னை மிகவும் கவர்ந்தது.

அமெரிக்க கடற்படையின் வியூக வகுப்பாளர் அல்பிரட் தாயேர் மெகான் சொன்ன பொன்மொழி அது.

‘அலைகளை யார் ஆள்கிறார்களோ, அவர்களே உலகத்தை ஆள்வார்கள்’ என்ற பொன்மொழி அது.

ஆம். தமிழர்கள் ஒருகாலத்தில் அலைகளை ஆண்டார்கள்.

‘கீழைக்கடலில் உன் சூரியன் உதிக்கும். மேலைக்கடலில் போய் அது குளிக்கும்’ (மறையும்) என்கிறது ஒரு சங்கப் பாடல்.

(நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும், நின் வெண்தலைப் புணரி குடகடல் குளிக்கும்)

ஆக, கிழக்கிலும், மேற்கிலும் இரு கடல்கள் அன்று தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

‘சேரன் கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன், மேலைக்கடலில் கப்பலைச் செலுத்தும்போது இடையில் வேறு யாரும் கப்பலோட்ட முடியுமா?’ என்கிறது புறநானூறு பாடல் ஒன்று.

‘சினமிகு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறகலம் செல்கலாது’ (புறம் 126).

‘போர் செய்யும் முனைப்புடன் கடலில் இறங்கி, பேரலைகள் கொண்ட கடலை நீக்கி தமிழ மன்னர்கள் கப்பல் ஓட்டியதை அகநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது.

‘செருச்செய முன்போடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர்மாண் எஃகம்’.

இடைக்காலத்தில் கங்கை கொண்ட, கடாரம் வென்ற சோழன் காலத்திலும் தமிழர்களால் அலைகளை ஆள முடிந்தது.

‘அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி’ என்று தொடங்குகிறது ராசேந்திர சோழனின் மெய்கீர்த்தி.

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகாகவி பாரதியார் கூட, ‘மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்‘, ‘ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்’ என்று ஒரு பழங்கால தமிழ்க் கனவை மீண்டும் கண்டார்.

‘அலைகளை யார் ஆள்கிறார்களோ, அவர்களே உலகத்தை ஆள்வார்கள்’ என்ற அமெரிக்க கடற்படை வியூக வகுப்பாளரின் பொன்மொழி எப்போது சொல்லப்பட்டதோ, தெரியாது? அந்த பொன்மொழிக்கு நம் கண்முன் உதாரணமாக இருந்தார்கள் மேதகுவின் நம்காலத்து நாயகர்கள்.

போர் செய்யும் முனைப்புடன் அவர்கள் கடலில் இறங்கினார்கள். அலைகடல் நடுவில் பலகலம் செலுத்தினார்கள். ஞாலம் நடுங்குகிற விதமாக வெடிகுண்டு படகுகளை இயக்கினார்கள்.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. கனவுகள் காண்பதே அவை மெய்ப்படுவதற்காகத்தான்.

மாவீரர் மாதமான ஜூலையில் நமது மாவீரர்களை சிறப்பாக நினைவு கூர்வோம்.
 
– மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like